வியாழன், 8 அக்டோபர், 2015


சலுகை போனால் போகட்டும்! என்
அலுவல் போனால் போகட்டும்!
தலைமுறை ஒருகோடி கண்ட, என்
தமிழ் விடுதலை ஆகட்டும்!
என் உயிர் போனால் போகட்டும்!
என் புகழ் உடல் மட்டும் நிலைக்கட்டும்!
தேனால் செய்த என் செந்தமிழ்தான்
திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்!
என்று பாரதிதாசன் திக்கெட்டும் வளரும் தமிழைத் தடுக்காதே என்று ‘தமிழ் விடுதலை ஆகட்டும்‘, என்னும் கவிதையில்
 தூய தமிழில் மட்டும்தான் எழுத வேண்டும் என்பது தவறு! அதாவது திசை எழுத்துக்களான ஹ, ஸ, ஷ, ஜ, ஸ்ரீ ஆகியவற்றை அறவே புறக்கணிப்பது தமிழின் திறமையைக் குன்றச் செய்துவிடும். கலப்படமற்ற தூய தமிழைப் பேசுவோர் எங்கே வாழ்கிறார் ? கலப்படமற்ற தூய தமிழில் அனைத்தையும் எழுதி வருபவர் எத்துறையில் பணி செய்து வருகிறார் ?

தமிழில் ஸ, ஷ, ஹ, ஜ, ஸ்ரீ போன்ற வடமொழிக் கிரந்த எழுத்துக்குகளை தமிழ்மொழி சுவீகாரம் எடுத்துக் கொள்வதால், தமிழின் ஆற்றல் பன்மடங்கு மிகையாகி வலுக்குமே தவிர, தமிழின் செழுமை சிறிதும் பழுதுபடாது! மேலும் க,ச,ட,த,ப போன்ற வல்லின எழுத்துக்களின் மெல்லோசை எழுத்துக்கள் தமிழ்மொழி தவிர பிற இந்திய மொழிகளிலும், உலக மொழியிலும் உள்ள போது, ஏன் தமிழும் அவற்றைச் சுவீகாரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது என் கேள்வி. உலகெங்கும் மின்னல் வேகத்தில் விஞ்ஞானமும், அதை ஒட்டிச் சமூகமும், கலாச்சாரமும், நாகரீகமும் இணைந்து முன்னேறுகின்றன. தூய தமிழர்களே! நீங்கள் தமிழ் அன்னைக்குக் கைவிலங்கு, கால்விலங்கு, வாய்விலங்கு போட்டு, கொலுப் பொம்மையாக கண்ணாடிப் பேழையில் வைத்துப் பூட்டிப் பின்னோக்கிக் போக வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்! தமிழ்மொழி விடுதலை ஆகட்டும்!

 2500 ( ?) ஆண்டுகளுக்கு முன்பு தலைச் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று முச்சங்கம் வைத்துத் தமிழ் மன்னர்கள் சங்கப் புலவர்கள் ஆதரவில் தமிழ்மொழி வளர்த்ததை நாம் அறிவோம். சங்கம் என்பதே தமிழ்ச் சொல்லன்று! அப்படி யென்றால் சங்க காலத்திலிருந்தே தமிழ்மொழியில் கலப்படம் சேர்ந்து விட்டது என்று வைத்துக் கொள்ளலாம்! நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள், வாகனங்கள், உரையாடிப் பழகும் மாந்தர்கள், புரியும் பணிகள், வணிகத் துறைகள், படிக்கும் பள்ளிக் கல்லூரி நூல்கள் அனைத்திலும் எத்தனை தூய தமிழ்ச் சொற்கள் உள்ளன என்று சற்று சிந்தித்துப் பாருங்கள், தூய தமிழர்களே! பிரெட், பட்டர், ஜாம், பவுடர், பஸ், ரயில், டிரெயின், காலேஜ், அல்ஜீப்ரா, ஜியாமெட்ரி, கால்குலஸ், ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா, சூரியன், சந்திரன், பூமி, ஆகாயம், அக்கினி, சக்தி, இதயம், முகம் போன்ற அனுதினச் சொற்கள் எல்லாம் தூய தமிழ்ச் சொற்கள் அல்ல!

 தமிழ் மொழி ஒரு கருவி.  கருத்துக்களை ஏந்திச் சென்று பரிமாறும் ஒரு வாகனம்.  மாறும் உலகத்துக்கு ஏற்ப, படைக்கும் விஞ்ஞானத்துக்கு உகந்தபடித் தமிழ் மாற வேண்டுமே தவிர, தமிழுக்கு ஏற்றபடி கருத்தோ, விஞ்ஞானமோ மாற முடியாது ! அப்பணிகளுக்குப் பயன்படுத்தத் தமிழ்மொழியில் தகுதியான மாற்றங்கள் தமிழ் வல்லுநர் செய்ய முயல வேண்டும். அவ்விதம் ஏற்படும் மாறுபாடுகளைத் தமிழ் உலக மக்கள் உவப்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்! அவற்றைத் தமிழ் நிபுணர்கள் தமிழர் புரியும்படி அறிவிக்க வில்லை யானால், தமிழில் விஞ்ஞான வளர்ச்சி குன்றிப் போய், நாளடைவில் தமிழ் பிற்போக்கு மொழியாகிவிடும். உலக மொழிகளைப் போல, மற்ற இந்திய மொழிகளைப் போல தமிழில் Sa(ஸ), Sha(ஷ), Ja(ஜ), Ha(ஹ), Ga( ?), Da( ?), Ba( ?), Dha( ?) போன்ற மெல்லோசை எழுத்துக்களைத் தமிழ்மொழியில் தமிழர் எழுதும் உரிமையை அனுமதித்துப் புதிய சொற்களை ஆக்கும் முறைகளுக்கு வழி வகுக்க வேண்டும்.

பிழையின்றி தமிழில் எழுத ...............

1. சந்தி இலக்கணம்
வரையறையும் நோக்கமும்

1.1சந்தி என்றால் என்ன??
ஞாயிறு என்ற சொல்லோடு "ஐ" , "ஆல்" முதலாய வேற்றுமை விகுதிகளைச் சேர்க்கும் போது ஞாயிற்றை, ஞாயிற்றால் என்று சொற்கள் அமைகின்றன. ஞாயிறு என்ற சொல்லோடு கிழமை என்ற சொல்லைச் சேர்க்கும்போது ஞாயிற்றுக்கிழமை என்ற தொகை உருவாகிறது. ஞாயிற்றை, ஞாயிற்றால் என்பவற்றில் றகர ஒற்று (ற்) இரட்டியது. ஞாயிற்றுக்கிழமை என்பதில் றகர ஒற்று இரட்டியதோடு ககர (க்) ஒற்றும் மிகுந்தது. இவ்வாறு சொல்லோடு விகுதியும் மற்றொரு சொல்லும் சேரும்போது ஏற்படும் மாற்றங்களைச் 'சந்தி' என்பர். சந்தி பற்றிய விதிகளைச் சந்தி விதிகள் என்றும் சந்தியை விளக்கும் இலக்கணத்தைச் சந்தி இலக்கணம் என்றும் கூறுவர். சந்தி இலக்கணத்தை நமது இலக்கணங்கள் 'புணரியல்' என்றும் 'புணர்ச்சி இலக்கணம்' என்றும் கூறும்.

1.2 சந்தி இலக்கணம் ஏன்?

சந்தி இலக்கணம் இல்லாமல் மொழி இயங்காதா? தொடர்களிலும் சொற்களிலும் சந்தி இலக்கணம் இல்லாமற் போனால் என்ன குறை? இப்படி சில கேள்விகள் எழுந்தால் வியப்பில்லை.

முதலாவதாக, சந்தி இலக்கணம் கைவிடப்பட்டால் பொருளில் தெளிவு குன்றி மயக்கத்துடன் இடம் ஏற்படக்கூடும். மாட்டுக்கன்று என்பதற்குப் பதிலாக மாடுகன்று என்று எழுதினால் பொருள் மாறுபடுகிறது. இவ்வாறே பழக்கூடை என்பதற்குப் பதில் பழங்கூடை என்று எழுதினாலும் பொருள் மாறுபடுகிறது. பொருட் குழப்பத்தை நீக்கித் தெளிவைக் காக்கச் சந்தி இலக்கணம் ஒரு இன்றியமையாத கருவி எனலாம்.

இரண்டாவதாக, சொற்சேர்க்கையில் தோன்றும் மாற்றங்களை எழுத்து வடிவால் காட்டுவதற்குச் சந்தி இலக்கணம் உதவிகிறது. 'மரம்' என்ற சொல்லும் 'கள்' என்ற விகுதியும் சேரும்போது இயல்பாகவே மகர ஒற்று ஙகர ஒற்றாக மாறி மரங்கள் என்று ஒலிக்கக் காண்கிறோம். இத்தகைய மாற்றங்களையெல்லாம் எழுத்து வடிவால் காட்டச் சந்தி இலக்கணம் திட்டவட்டமாக விதி வகுத்துச் செல்கிறது.

மூன்றாவதாக, மொழியில் வழிவழியாகக் காக்கப்பட்ட மரபு காக்கப்படுவதற்குச் சந்தி உதவி புரிகிறது.

1.3 எப்படிப்பட்ட சந்தி வேண்டும்?

கடல்தாவு படலம் என்பது கடறாவு படலம் என்றும், சில்தாழிசைக் கொச்சகம் என்பது சிஃறாழிசைக் கொச்சகம் என்றும் மாறுகின்ற மாற்றங்களை நாம் இலக்கியங்களிலும் இலக்கணங்களிலும் கண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட கடுஞ்சந்திகள் இப்போதைய இலக்கியத் தமிழில் இடம் பெறுவதில்லை. 'உன்னைப் பார்த்தேன்' மற்றும் 'உனக்குக் கொடுத்தேன்' முதலாய தொடர்களில் வேற்றுமை விகுதியைஅடுத்து வரும் ஒற்றுகளை இன்றைய செந்தமிழில் விலக்கி எழுதுவது பிழை என்று கருதுகிறோம். ஆகவே, இன்றைய செந்தமிழில் எல்லோரும் ஏற்றுப் போற்றும் சந்திகளை மட்டுமே பார்ப்போம்.

2. கருவிகள்

சந்தி இலக்கணம் பற்றிப் பேசவும் விதிகளை வகுக்கவும் விளக்கம் கூறவும் சில இன்றியமையாத இலக்கண குறியீடுகளையும், மரபுகளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். சந்தி இலக்கணத்துக்குத் தேவையான கருவிகளை அமைத
்துக் கொள்வதே இந்தப் பகுதியின் நோக்கம்.

2.1 எழுத்துவகை

தமிழில் உள்ள எழுத்துக்கள் உயிர், ஆய்தம், மெய் என மூன்று பெரும் பிரிவாகப் பிரிக்கப்படும்.

2.1.1 உயிர்

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள ஆகிய பன்னிரண்டு எழுத்துக்களையும் உயிர் என்பர். இவை குறில், நெடில் என இரண்டு வகையாகப் பிரிக்கப்படும்.

2.1.2 குறில்

அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும் குறில்களாம். இவற்றைக் குற்றெழுத்து என்றும் சுட்டுவர்.

2.1.3 நெடில்

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழும் நெடில்களாம். இவற்றை நெட்டெழுத்து என்றும் சுட்டுவர். இங்கே கூறப்பட்ட சில உயிர்கள் (ஐ, ஒள) தன் இயல்பான அளவிலிருந்து குறுகி ஒலிப்பதும் உண்டு.

2.1.4 குற்றியலிகரம்

தனக்கு இயல்பான அளவிலிருந்து குறுகி ஒலிக்கும் "இகரத்தை"க் குற்றியலிகரம் என்பர். எடுத்துக்காட்டு காண்க :-

பாம்பியாது (பாம்பு + யாது?)கேண்மியா ( கேள் + மியா)

2.1.5 குற்றியலுகரம்

தனக்கு இயல்பான அளவிலிருந்து குறுகி ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் எனப்படும். க், ச், ட், த், ப், ற் ஆகிய வல்லொற்றுகளின் மேல் ஏறிவரும் உகரம் படு, கெடு எனத் தனிக்குறிலுன் பின்வரும் போது மட்டும் குறுகுவதில்லை. ஏனைய இடங்களிலெல்லாம் அது குறுகியே ஒலிக்கும். குற்றியலுகரத்தை குற்றுகரம் என்றும் குறுகிய உ என்றும் குறிப்பதுண்டு.குற்றுகரம் கீழ்கண்டவாறு ஆறு வகையாகப் பிரிக்கப்படும். (எடுத்துக்காட்டு)

1. வன்றொடர் (கொக்கு)2. மென்றொடர் (குரங்கு)3. இடைத்தொடர் (நல்கு)4. ஆய்தத் தொடர் (எஃது)5. நெடிற்றொடர் (ஆடு)6. உயிர்த்தொடர் (அழகு, மிலாறு)

தனிநெடிலை அடுத்து வரும் குற்றுகரம் மட்டுமே நெடிற்றொடராகும். ஆடு என்பது நெடிற்றொடர் என்றும் மிலாறு என்பது உயிர்த்தொடர் என்றும் கொள்ளப்படுவதற்கான காரணத்தை நன்கு தெளிந்துக் கொள்க. நெடிற்றொடருக்கும் உயிர்த்தொடருக்கும் மேலும் சில எடுத்துக்காட்டுகள் தருகிறேன். அவற்றையும் கண்டு தெளிவு பெறுக.

நெடிற்றொடர் (பாடு, மாடு, கூறு, ஏடு, ஓடு, ஆறு, ஏறு,)

உயிர்த்தொடர் (பழகு, வேசறு, கழுகு, களிறு, பலாசு, விளாசு, உரசு)

நெடிற்றொடர்க் குற்றுகரச் சொற்களில் குற்றுகரத்தின்முன் நெட்டெழுத்து மட்டுமே நிற்பதையும் உயிர்த்தொடர்க் குற்றுகரச் சொற்களில் குற்றுகரத்தின் முன் தனிநெடில் நில்லாமல் குறிலும் நெடிலுமாகவோ குறிலும் குறிலுமாகவோ குரைந்து இரண்டு எழுத்துக்கள் சேர்ந்து நிற்பதையும் நன்கு நோக்கி இவற்றிடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்து கொள்க.

2.1.6 ஐகாரக் குறுக்கம்

ஐகாரம் நெடில் என்று கொள்ளப்பட்டாலும் இது நெட்டுயிர்க்குரிய மாத்திரையிலிருந்து குறைந்தே ஒலிக்கும். மொழியில் முதல், இடை, கடை ஆகிய மூன்றிடங்களிலும் இது குறுகியே நிற்கும். எடுத்துக்காட்டு:-

முதல் ( பையன், வையம் )

இடை ( தலைவன், நிலையம் )

கடை ( அவரை, கலை )

மொழி முதலில் உள்ள ஐகாரத்தை விட இடையிலும் கடையிலும் உள்ள ஐகாரங்கள் மேலும் குறுகி ஒலிப்பதனை மீண்டும் ஒலித்து உணர்க.

2.1.7 ஒளகாரக்குறுக்கம்

ஒளகாரமும் ஐகாரம் போலவே மொழியில் நெட்டுயிர்க்குரிய மாத்திரையிலிருந்து குறைந்தே ஒலிக்கும். ஒளகார உயிரும் உயிர்மெய்யும் மொழியின் இடையிலும் கடையிலும் வராமையால் ஒளகாரக்குறுக்கம் மொழிமுதலுக்கு மட்டுமே பொருந்தும். எடுத்துக்காட்டு ( ஒளவை, கெளவை, வெளவால், ஒளவியம் )

2.1.8 ஆய்தம்

ஆய்த எழுத்தினைத் தனிநிலை என்றும் கூறுவர். ஆய்தமும் தனக்கு இயல்பான மாத்திரையிலிருந்து குறுகி ஒலித்தல் உண்டு. அவ்வாறு குறுகிய ஆய்தம் குற்றாய்தம் என்றும் குறுகாத ஆய்தம் முற்றாய்தம் என்றும் பெயர் பெறும். குற்றாய்தத்தை ஆய்தக்குறுக்கம் என்றும் குறிப்பர். கஃறீது, முஃடீது எனச் சந்தி விதிகளாற் பிறக்கும் ஆய்தம் குற்றாய்தத்துக்கு எடுத்துக்காட்டுகளாகும். அஃது, இஃது, எஃது முதலாய சொற்களில் காணப்படும் ஆய்தம் முற்றாய்தம்.

2.1.9 மெய்

மெய்யெழுத்துக்களை ஒற்று என்றும், புள்ளி என்றும் கூறுவர். க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டும் தமிழில் உள்ள மெய்களாம். இவை வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்றாகப் பிரிக்கப்படும்.

2.1.10 வல்லினம்

வல்லினம், வங்கணம், வலி ஆகியன ஒரு பொருட்கிளவிகள். க், ச், ட், த், ப், ற் ஆகிய ஆறும் வல்லின மெய்களாம்.

2.1.11 மெல்லினம்

மெல்லினம், மெங்கணம், மெலி ஆகியன ஒரு பொருட்கிளவிகள். ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய ஆறும் மெல்லின மெய்களாம்.

2.1.12 இடையினம்

இடையினம், இடைக்கணம், இடை ஆகியன ஒரு பொருட்கிளவிகள். ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய ஆறும் இடையின மெய்களாம்.

2.1.13 உயிர்மெய்

மெய்யோடு உயிர்கள் சேர்ந்து க, கா, கி, கீ என இவ்வாறு தோன்றும் எழுத்துக்கள் யாவும் உயிர்மெய் எனப் பெயர் பெறும். 18 மெய்களும் 12 உயிர்களும் சேர்ந்து 216 உயிர்மெய்கள் தோன்றுகின்றன.

2.1.14 அளபெடை

உயிர், மெய், ஆய்தம் ஆகிய எழுத்துக்கள் தத்தமக்கு உரிய மாத்திரையினின்று மிக்கு ஒலிப்பதும் உண்டு. அவ்வாறு மிக்கு ஒலிப்பதனை அளபெடை என்பர். இந்த அளபெடை அளபு என்றும் குறிக்கப்படும். இது உயிரளபு, ஒற்றளபு என இரு வகைப்படும்.

2.1.15 உயிரளபு

நெட்டெழுத்துக்கள் ஏழும் அளபெடுக்கும். அளபெடுக்கும் போது ஆகாரத்துக்கு அகரமும் ஈகரத்திற்கு இகரமும் ஊகாரத்திற்கு உகரமும் ஏகாரத்திற்கு எகரமும் ஓகாரத்துக்கு ஓகரமும் அளபெடைக் குறியாக வரும். ஐகாரத்துக்கு இகரமும் ஒளகாரத்துக்கு உகரமும் அளபெடைக் குறியாக வருதல் மரபு.

2.1.16 ஒற்றளபு

உயிரளபெடை போலவே ஒற்றளபெடையும் உண்டு. ங், ஞ், ண், ந், ம், ன், ய், வ், ல், ள் ஆகிய ஒற்றுகள் மட்டுமே அளபெடுக்கும். ஆய்தமும் அளபெடுக்க வல்லது. ஆய்த அளபெடை என்று தனியே ஒரு அளபெடை வகையை அமைக்காமல் நமது மரபிலக்கணங்கள் அதனையும் ஒற்றளபில் அடக்கிக் கொண்டன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

2.1.17 மொழிமுதல் எழுத்துக்கள்

12 உயிர்களும் க், ச், த், ந், ப், ம்,வ், ய், ஞ் ஆகிய மெய்களும் மொழி முதல் எழுத்துக்களாக வரும். மெய்கள் மொழி முதலில் வரும்போது தனிமெய்யாக வராது. உயிர்மெய்யாகவே வரும். ங் என்ற மெய் மொழி முதலாக வரும் என்று இலக்கணங்கள் கொண்டாலும் இக்கால வழக்கிற்கு அது பொருந்தாமையால் நாம் அதை இங்கே மொழி முதலெழுத்தாகக் குறிப்பிடவில்லை.

2.1.17.1 மொழி முதலில் உயிர்கள்

எடுத்துக்காட்டு ==> (அவன், ஆடு, இது, ஈகை, உலகு, ஊசி, எடு, ஏடு, ஐந்து, ஒன்பது, ஓடு, ஒளவை)

2.1.17.2 மொழி முதலில் மெய்கள்

எடுத்துக்காட்டு ==> (கடல், சால்பு, தண்மை, நன்மை, பழகு, மணம், வளம், யார், ஞாயிறு)

2.1.18 மொழியிறுதி எழுத்துக்கள்

12 உயிர்களும் மொழியிறுதி எழுத்துக்களாக வரும். ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய 11 மெய்களும் மொழிக்கு இறுதியில் வரும். நமது மரபிலக்கணங்கள் குற்றியலுகரத்தையும் மேற்கூறிய மொழியிறுதி எழுத்துக்களோடு சேர்ந்து மொழியிறுதி எழுத்துக்கள் 24 என்று கூறும்.

2.1.18.1 மொழி இறுதியில் உயிர்கள்

எடுத்துக்காட்டு ==> (கட, நிலா, கிளி, தீ, கொடு, பூ, எ, தே, கலை, நொ, கோ, கெள)

2.1.18.2 மொழி இறுதியில் மெய்கள்

எடுத்துக்காட்டு ==> (உரிஞ், கண், பொருந், மரம், மான், நாய், தேர், பால், தெவ், யாழ், நாள்)

2.1.18.3 மொழி இறுதியில் குற்றுகரம்

எடுத்துக்காட்டு ==> (பட்டு, வண்டு, உல்கு, எஃது, வரகு, ஆடு)

இக்கால வழக்கில் எகர ஒகர இறுதியும் ஞ், ந், வ் ஆகிய மெய்யிறுதியும் அருகி நிற்றல் காண்க.

2.1.19 அசைகள்

தமிழ்மொழி அமைப்பில் அசைக் கோட்பாட்டுக்கு ஒரு தனி இடம் உண்டு. உயிரும் உயிர்மெய்யும் குறிப்பிட்ட நெறியில் சேர்ந்த சேர்க்கைக்கு அசை என்று பெயர். ஒரு அசையில் இரண்டுக்கு மேற்பட்ட உயிர்கள் அமைவதில்லை. அசைகள் அவற்றின் அமைப்புக்கேற்ப நேரசை, நிரையசை என இரு வகைப்படும்.

2.1.19.1 நேரசை

குறில் தனித்தோ ஒற்றடுத்தோ வரும்போது நெடில் தனித்தோ ஒற்றடுத்தோ வரும்போது நேரசை அமையும்.

எடுத்துக்காட்டு

உல-கு (குறில் தனித்து வந்தது)உல-கம் (குறில் ஒற்றடுத்து வந்தது)பா (நெடில் தனித்து வந்தது)பால் (நெடில் ஒற்றடுத்து வந்தது)

குறிலுக்குப் பின் இன்னொரு குறில் இருந்தால் இரண்டும் இணைந்து நிரையசையாகும். அப்படி இன்னொரு குறில் இல்லாதபோது குறில் தனித்து நின்று நேரசையாகும்.

2.1.19.2 நிரையசை

இருகுறில்கள் இணைந்தோ இணைந்து ஒற்றடுத்தோ வரும்போது ஒரு குறிலும் ஒரு நெடிலும் சேர்ந்தோ சேர்ந்து ஒற்றடுத்தோ வரும்போது நிரையசை அமையும்

எடுத்துக்காட்டு

படி (இரு குறில்கள் இணைந்து வந்தது)படம் (இரு குறில்கள் இணைந்து ஒற்றடுத்து வந்தது)நிலா (ஒரு குறிலும் ஒரு நெடிலும் சேர்ந்து வந்தது)விளாம் (ஒரு குறிலும் ஒரு நெடிலும் சேர்ந்து ஒற்றடுத்து வந்தது)

நெடிலும் குறிலும் சேர்ந்து ஒரு அசை அமைவதில்லை என்பது குறிலோ நெடிலோ ஒற்று இடையிடாமல் பின்தொடரும்போது அதன் முன்னிற்கும் குறில் நேரசையாகாது என்பது இங்கே நன்கு கவனிக்கத் தக்க செய்திகள். அதாவது ஆடு, பாடு என்பன ஓரசையல்ல. அவை இரண்டும் நேரசை சேர்ந்த சொற்கள். உலகு, பழகு என்பனவற்றில் உ, ப என்பன நேரசையாகா. உல, பழ என்பன நிரையசையாகி எஞ்சித் தனித்து நிற்கும் குறில் மட்டும் நேரசையாகும். நிரையசைகளில் நெடிலீற்று நிரையசையும் (நிலா) குறிலீற்று நிரையசையும் (பிடி) உண்டு என்பதை கவனித்து நினைவில் இருத்தத்தக்கது.

2.2 சொல்வகை

நமது மரபிலக்கணங்கள் தமிழ்ச் சொற்களைப் பொதுவாகப் பெயர், விணை, இடை, உரி என நான்காகப் பிரித்துள்ளன. ஓரசைச்சொல், ஈரசைச்சொல் முதலாய பிரிவுகளும் உணரத்தக்கன.

2.2.1 பெயர்ச்சொல்

கால இடைநிலைகளை ஏலாதனவாய் வேற்றுமை உருபுகளை ஏற்க வல்லனவாய்த் திணை, பால், எண், இடம் முதலாய இலக்கணக் கூறுகளை உணர்த்துவனவாய் அமைவன பெயர்ச்சொற்களாம். எழுவாய், பயனிலை இயைபுகளின் அடிப்படையிலும் சுட்டுப் பெயர்களின் அடிப்படையிலும் பெயர்கள் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு

ஆண்பாற்பெயர் (அவன், மாணவன்)பெண்பாற்பெயர் (அவள், மாணவி)பலர்பாற்பெயர் (அவர்கள், மக்கள்)ஒன்றன்பாற்பெயர் (அது, மரம்)பலவின்பாற்பெயர் (அவை, பழங்கள்)

இக்கால வழக்குக்கேற்ப உயர்பாற்பெயர் என்ற ஒரு பிரிவும் தேவைப்படுகிறது. உதாரணம் அவர், தலைவர். இங்கே கூறிய பிரிவை நம் இலக்கணங்கள் பால் என்று கூறும். பால் என்பது வகை அல்லது பகுப்பு என்று பொருள்படும்.

இங்கே கூறிய பால் பகுப்போடு திணைப்பகுப்பு பற்றியும் தெரிந்துக் கொள்ளவேண்டும். ஆண், பெண், பலர் ஆகிய மூன்று பால்களையும் உயர்திணை என்பர். ஒன்று, பல ஆகிய இருபால்களையும் அஃறிணை என்பர். இப்பாகுபாட்டைக் படத்தில் பார்த்து நன்கு விளங்கிக் கொள்ளுங்கள். இவற்றோடு இக்காலத் தமிழில் உயர்பால் என்று பகுப்பு உருவாகி வளர்ந்துள்ளது.

மேற்கண்ட பாகுபாடு தொடரியல் அடிப்படையில் அமைந்தது. பொருள் அடிப்படையில் பெயர்கள் பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர், தொழிற்பெயர் என அறுவகையாகக் பகுக்கப்படும்.

இவற்றோடு, எண்ணுப்பெயர், இடப்பெயர் முதலாய பிரிவுகளும் உணர்ந்து கொள்ளத்தக்கன.

2.2.1.1 எண்ணுப்பெயர்

ஒன்று, இரண்டு முதலாய எண்களைக் குறிக்கும் பெயர்களை எண்ணுப்பெயர் என்பர்.

2.2.1.2 இடப்பெயர்

தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூவகைப்படும். பேசுவோரைக் குறிப்பது தன்மை; கேட்போரைக் குறிப்பது முன்னிலை; ஏனைப்பெயர்கள் படர்க்கை.

பொருளடிப்படையில் அமைந்த அறுவகைப் பெயர்களில் காணும் இடப்பெயர் வேறு, இது வேறு என்பதை நினைவில் இருத்துக.

2.2.1.3 சுட்டுப்பெயர்

சுட்டிக் கூறப் பயன்படும் பெயர்கள் சுட்டுப் பெயர்களாம். இது அண்மைச் சுட்டு, சேய்மைச்சுட்டு என இருவகைப்படும். இவன், இவள், இவர், இவர்கள், இது, இவை ஆகியன அண்மைச் சுட்டு. அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை ஆகியன சேய்மைச்சுட்டு.

2.2.1.4 வினாப்பெயர்

வினாவுதற்குப் பயன்படும் பெயர் வினாப்பெயராம். இது பொதுவினா, சிறப்பு வினா என இரண்டாகப் பிரிக்கப்படும். யார், என்ன என்பவற்றைப் பொதுவினா என்றும், எவன், எவள், எது, எவை என்பனவற்றைச் சிறப்புவினா என்றும் கொள்ளலாம்.

2.2.1.5 பெயர்களின் இருவகை வடிவங்கள்

பெயர்கள் எழுவாயாக நிற்கும்போது உள்ள வடிவத்தை எழுவாய் வடிவம் என்றும் வேற்றுமை ஏற்கும்போது உள்ள வடிவத்தை வேற்றுமை ஏற்கும் வடிவம் என்றும் சுட்டலாம். சில பெயர்கட்கு இவை வேறுவேறாக அமையும்.

அவன் என்ற பெயர்க்கு எழுவாய் வடிவமும் வேற்றுமை ஏற்கும் வடுவமும் ஒன்றாகவே அமைந்துள்ளது. அவன் வந்தான். அவனைக் கண்டேன் முதலாய தொடர்கள் நோக்கி இதனை உணர்க. ஆடு என்ற பெயர்க்கு எழுவாய் வடிவம் வேறு; வேற்றுமை ஏற்கும் வடிவம் வேறு. ஆடு வந்தது எனவும், ஆட்டைக் கண்டேன் எனவும் வரும் தொடர்களில் எழுவாய் வடிவமும் வேற்றுமை ஏற்கும் வடிவமும் வேறு வேறாக, இருப்பதனைக் கொண்டு இதை உணரலாம்.

நான் என்பது எழுவாய் வடிவம். என் என்பது வேற்றுமை ஏற்கும் வடிவம். நீ என்பது எழுவாய் வடிவம். உன் என்பது வேற்றுமை ஏற்கும் வடிவம்.

2.2.2 வினைச்சொல்

கால இடைநிலைகளையும், பாலிட விகுதிகளையும் ஏற்க வல்லன வினைச்சொற்களாம். கால இடைநிலைகளை ஏற்பன தெரிநிலைவினை என்றும், கால இடைநிலைகளை ஏற்க இயலாதன குறிப்புவினை என்றும் பெயர்பெறும். எடுத்துக்காட்டு கீழே :-

படித்தான் (தெரிநிலைவினை)நல்லன் (குறிப்புவினை)

தெரிநிலைவினைகள் முற்றுவினை, எச்சவினை என இரு வகைப்படும். குறிப்பு வினைகளில் சிலவற்றுக்கு எச்சவினை வடிவங்க
ளும் உண்டு.

2.2.2.1 முற்றுவினை

கால இடைநிலைகளையும் பாலிட விகுதிகளையும் ஏற்றுச் செய்தான், செய்தாள் முதலாய வாய்பாட்டில் வருவனவும் எதிர்மறை இடைநிலைகளையும் பாலிட விகுதிகளையும் ஏற்றுச் செய்யான், செய்ய மாட்டான் முதலாய வாய்பாட்டில் வருவனவும் செய், செய்யும், செய்யுங்கள் எனவும், செய்யாதே, செய்யாதீர், செய்யாதீர்கள் எனவும் உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் ஏவல் வாய்பாடுகளில் வருவனவும் செய்யலாம். செய்க முதலாய வாய்பாடுகளில் வருவனவும் இவை முதலாய பிறவும் முற்றுவினைகளாம்.

2.2.2.2 எச்சவினை

பொருள் இயைபு நோக்கில் வேறொரு சொல் எஞ்சி நிற்க அமைவது எச்சவினை. எச்சவினைகள் பெயரெச்சம், வினையெச்சம் என இருவகைப்படும்.

2.2.2.2.1 பெயரெச்சம்

பெயர்களைக் கொண்டு முடியும் வினைச்சொற்கள் பெயரெச்சம் எனப் பெயர் பெற்றன. இப்பெயரெச்சம் இறந்தகாலப் பெயரெச்சம், நிகழ்காலப் பெயரெச்சம், எதிர்காலப் பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம் என நான்கு வகைப் படும். எடுத்துக்காட்டு கீழே:-

வந்த (இறந்தகாலப் பெயரெச்சம்)வருகின்ற (நிகழ்காலப் பெயரெச்சம்)வரும் (எதிர்காலப் பெயரெச்சம்)செய்யாத (எதிர்மறைப் பெயரெச்சம்)

எதிர்மறைப் பெயரெச்சங்களில் த என்ற ஈறு இல்லாமல் செய்யா வாய்பாட்டில் வரும் பெயரெச்சங்களை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்பர்.

2.2.2.2.2 வினையெச்சம்

வினைகளைக் கொண்டு முடியும் எச்சவினைகளை வினையெச்சம் என்பர். வினையெச்சங்கள் கீழ்கண்டவாறு பிரிக்கப்படும்.

வாய்பாடு எடுத்துக்காடுகள்

1. செய்ய (ஓட, படிக்க, நடக்க)2. செய்து (ஓடி, படித்து, நடந்து)3. செய்தால் (ஓடினால், படித்தால், நடந்தால்)4. செய்யாமல் (ஓடாமல், படிக்காமல், நடக்காமல்)5. செய்யாது (ஓடாது, படிக்காது, நடக்காது)

வேறுசில வினையெச்சங்களும் உண்டு. படி, முன், பின், முதலாய வினையெச்ச இடைச்சொற்கள் பெயரெச்சங்களோடு சேர்ந்து வினையெச்சங்கள் அமையும். இவற்றைக் கூட்டு வினையெச்சம் எனலாம். எடுத்துக்காட்டு வந்தபோது, சொன்னபடி, வரும்முன், வந்தபின், சொன்னவாறு ஆகியன.

2.2.2.3 வினைப்பெயர்

வினையடியாகப் பிறக்கும் பெயர்களை வினைத்தன்மை குன்றின, குன்றாதன என இருவகையாகப் பிரிக்கலாம். போக்கு, வரவு முதலாய பெயர்கள் வினைத்தன்மை குன்றியன. இவை பெயர்த்தன்மை மட்டுமே பெற்ற்ப் பெயரடைகளை ஏற்றல், வேற்றுமை ஏற்றல் ஆகிய இயல்புகளுடன் வரும். போதல், வருதல் முதலாய பெயர்கள் வினைத்தன்மை குன்றாதனவாய் நான் போதல், நீ வருதல் என எழுவாய் ஏற்றல் போன்ற வினைத்தன்மையோடும் போதலை, வருதலை என வேற்றுமை ஏற்றல் முதலாய பெயர்த் தன்மையோடும் வருதல் காண்க. வினைத்தன்மைக் குன்றாத பெயர்களை மட்டுமே இங்கு வினைப்பெயர் என்று குறிக்கிறோம். தொழிற்பெயர் என்பதும் இதுவே. எடுத்துக்காட்டு படித்தல், நடத்தல், போதல், சாதல், வருதல், வரல், போவது, வருவது, போனமை, வந்தமை ஆகியன.

2.2.2.4 வினையாலணையும் பெயர்

வினையடியாகப் பிறந்து கால இடைநிலை அல்லது எதிமறை இடைநிலையும் பாலிட விகுதிகளையும் ஏற்று வேற்றுமை ஏற்கும் இயல்போடு வரும் பெயர்களை வினையாலணையும் பெயர்கள் என்பர். இவையும் வினைத்தன்மை குன்றாத பெயர்களே. வந்தவன் என்ற வினையாலணையும் பெயர் இங்கு வேகமாக வந்தவன் என வினையடைகளை ஏற்று வருதல் காண்க. எடுத்துக்காட்டு வந்தவன், வந்தவள், வந்தவர், வந்தவர்கள், வந்தது, வந்தவை ஆகியன.

2.2.2.5 குறிப்புவினை

மேலே தெரிநிலை வினைகட்குக் கூறியவாறே குறிப்பு வினைகளிலும் முற்றுவினை, எச்சவினை என்ற வகைகள் உண்டு. நல்லன், இனியன் முதலான சொற்கள் குறிப்புவினை. நல்ல, இனிய முதலாயவை குறிப்புப் பெயரெச்சம். அன்றி, இன்றி முதலாயவை குறிப்பு வினையெச்சம். நல்லவன், இனியவன் முதலாயவை குறிப்பு வினையாலணையும் பெயர்கள்.

2.2.3 இடைச்சொல்

அடிச்சொல்லாக நில்லாமல் அடிச்சொல்லோடு சேர்ந்து நின்று இலக்கண நோக்கில் செயற்படும் சொற்களும் உணர்ச்சி வெளிப்பாட்டுக் கிளவிகளும் இடைச்சொற்கள் என்று பெயர் பெறும். அன்றியும் ஏய், அடேய் என்பன போன்ற விளிகளும் அன், இன் போன்ற சாரியைகளும் பல்வகை அசைநிலைகளும் அடைச்சொல் என்றே பயர்பெறும்.
2.2.3.1 வேற்றுமை உருபுகள்

ஒரு முற்றுத்தொடரில் நிற்கும் பெயரை எழுவாயாகவும் செயப்படுபொருளாகவும் கருவியாகவும் இடமாகவும் இவ்வாறு பல வகையில் வேற்றுமைப் படுத்தும் உருபுகளை வேற்றுமை உருபுகள் என்பர். தமிழில் உள்ள வேற்றுமைகளை எட்டு வகையாகப் பிரிப்பர். இவற்றுள் முதல் வேற்றுமைக்குத் தனியே ஒரு உருபு இல்லை. எட்டாம் வேற்றுமைக்கு உருபுகள் பல எனலாம்.

வேற்றுமைகளின் பெயர்களும் உருபுகளும் படத்தில் தரப்பட்டுள்ளன. வேற்றுமைகள் உருபாலும் பொருளாலும் எண்ணு முறையாலும் பெயர் பெற்றிருப்பதை நோக்குக.

2.2.3.2 பின்னொட்டுகள் / பின்னுருபுகள்

வேற்றுமை உருபுகளின் இலக்கணப் பணியை முன், பற்றி, இருந்து, உடைய, மீது முதலான சொற்கள் பெயர்களோடும் வேற்றுமை உருபுகளோடும் ஒட்டி நின்று இயற்றுவதுண்டு. இவை பின்னொட்டுகள் அல்லது பின்னுருபுகள் என்று பெயர் பெறும். எடுத்துக்காட்டுகள் ====> எனக்குமுன், என்னைப்பற்றி, ஊரிலிருந்து, என்னுடைய, என்மீது என்பன.

2.2.3.3 அடைகள்

நல்ல, தீய முதலாய சொற்களும் வந்த, சென்ற முதலாய சொற்களும் பெயர்கட்கு அடைகளாக வரும். வந்து, சென்று முதலாய எச்சங்களும் மெல்ல, விரைந்து முதலாய சொற்களும் வினைகட்கு அடைகளாக வரும். இவ்வாறு பெயர்களையும் வினைகளையும் கொண்டு முடியும் சொற்கள் பொதுவாக அடைகள் என்று பெயர் பெறும். பெயர் கொண்டு முடிவன பெயரடைகள் என்றும் வினைகொண்டு முடிவன வினையடைகள் என்றும் குறிக்கப்படும். பெயரடைகளை உருவாக்க ஆன, உள்ள, உடைய, உரிய முதலான கிளவிகள் பெயர்களோடு சேர்க்கப்படுவது உண்டு. பெயரடைகளை உருவாக்கப் பயன்படும் சொற்களைப் பெயரடை இடைச்சொற்கள் எனலாம். இவ்வாறே, வினையடைகளை உருவாக்க ஆக, ஆய் முதலாய கிளவிகள் பெயர்களோடு சேர்க்கப்படுவதும் உண்டு. வினையடைகளை உருவாக்கப் பயன்படும் சொற்களை வினையடை இடைச்சொற்கள் எனலாம். எடுத்துக்காட்டு====> அழகான மலர், அன்புள்ள அன்னை, கோபமாக வந்தான், கோபமாய் வந்தான்.

2.2.4 அசைமுறை வகைப்பாடு

சொற்களை ஓரசைச்சொல், ஈரசைச்சொல் என்றும், நேரசைச்சொல், நிரையசைச்சொல் என்றும் நெடிலீற்று நிரையசைச்சொல், குறிலீற்று நிரையசைச்சொல் என்றும் சந்தி இலக்கணத்தில் சுட்டிக் கூறவேண்டிய தேவை ஏற்படக்கூடும்.

ஓரசைச்சொல் (பூ, மலர்)ஈரசைச்சொல் (நாடு, பாட்டு, பழகு)நேரசைச்சொல் (பூ, பால்)நிரையசைச்சொல் (மலர், பல, பலா)நெடிலீற்று நிரையசைச்சொல் (பலா, நிலா)குறிலீற்று நிரையசைச்சொல் (பல, தெரு)

2.2.5 மேலும் சில சொல்வகை

மேலே கண்ட வகைபாடுகளோடு தனிச்சொல், கூட்டுச்சொல், வேர்ச்சொல், அடிச்சொல், செம்மொழிச்சொல், பிறமொழிச்சொல், தற்சுட்டு கிளவிகள் முதலாய வகைப்பாட்டுக் குறியீடுகளையும் இங்கே நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.

2.2.5.1 தனிச்சொல்

நீ, நான் எனவும் போ, வா எனவும் நல்ல, தீய எனவும் வரும் சொற்களைத் தனிச்சொற்கள் எனலாம். ஒரு வேர்ச்சொல் தனித்தோ அல்லது ஒன்றும் பலவுமாய் விகுதிகள் அல்லது ஒட்டுகளுடனோ வருவது தனிச்சொல்.

2.2.5.2 சுட்டுச்சொல்

இயல்பாகவோ திரிந்தோ ஒன்றுக்கு மேற்பட்ட வேர்ச்சொற்கள் சேர்ந்து அமையும் சொல் ஒரு சொல் போல வரும்போது அதைக் கூட்டுச்சொல் எனலாம்.

எடுத்துக்காட்டு ====> கண்டுபிடி, பகுத்தறிவு

2.2.5.3 வேர்ச்சொல்

பகுப்பாய்வு முறையில் பிரிக்கமுடியாத நிலையில் உள்ள மூலச்சொல் வேர்ச்சொல் எனப்படும்.

எடுத்துக்காட்டு ====> கல், நெல், செல், நில்

2.2.5.4 அடிச்சொல்

விகுதிகள் சேர இடங்கொடுத்து நிற்பனவெல்லாம் அடிச்சொற்கள் எனலாம். வேர்ச்சொற்களெல்லாம் அடிச்சொற்களாக வரும். அடிச்சொற்களெல்லாம் வேர்ச்சொற்களாகாது.

நிலையம் என்பதில் அம் என்ற விகுதி நிலை என்ற அடிச்சொல்லோடு சேர்க்கப்பட்டுள்ளது. கொலை என்பதில் ஐ என்ற விகுதி கொல் என்ற அடிச்சொல்லோடு சேர்க்கப்பட்டது. கொல் என்ற வேர்ச்சொல் இங்கு அடிச்சொல்லாகவும் அமைந்துள்ளது. கொல் என்பது மேலும் பிரிக்க இடந்தராமையால் வேர்ச்சொல்லாகும்.

2.2.5.5 செம்மொழிச்சொல்

பிறமொழிகளிலிருந்து கடன்பெறாமல் ஒரு மொழி தானே உருவாக்கிய சொல்லைச் செம்மொழிச்சொல் என்று குறிப்போம். பிறமொழிகளிலிருந்து வந்து செம்மொழி நிலையை எய்திய சொற்களைச் செம்மொழிமயமான சொற்கள் என்று குறிப்போம்.

நிலம், தலை, கை, கால் முதலானவை செம்மொழிச் சொற்கள், கன்னம், தனம், தானம் முதலானவை செம்மொழிமயமான சொற்கள் எனலாம்.

2.2.5.6 பிறமொழிச்சொல்

பிறமொழிகளிலிருந்து தேவையை முன்னிட்டுக் கடன் கொண்ட சொற்கள் பிறமொழிச் சொற்கள் என்ற வகையில் அடங்கும். டாக்டர், ரயில், லாரி முதலானவை பிறமொழிச் சொற்கட்குச் சில காட்டுகள்.

2.2.6 பகுபத உறுப்புகள்

சொற்களைப் பொதுவாகப் பகுபதம், பகாப்பதம் என்று பிரிப்பர். பிரிக்க இடம் தராத பதம் பகாப்பதம் என்றும், பிரிக்க இடம் தரும் பதம் பகுபதம் என்றும் பெயர் பெறும். பகுபதங்களில் பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் முதலான உறுப்புகள் அமைந்திருக்கும்.

2.2.6.1 பகுதி

ஒரு சொல்லிலுள்ள பகாப்பதமே பகுதி என்று பெயர் பெறும். நடந்தான் என்பதில் நட என்பது பகுதி.

2.2.6.2 விகுதி

பகுதியோடு சேர்ந்து வலப்பக்கம் நிற்கவல்ல கிளவிகளை விகுதி என்பர்.

சொல் (பகுதி + விகுதி)

நல்ல (நல் + அ)ஓடி (ஓடு + இ)ஊரன் (ஊர் + அன்)

2.2.6.3 இடைநிலை

காலங் காட்டவும் எதிர்மறை உணர்த்தவும் இடையில் நிற்கும் கிளவிகள் இடைநிலைகளாம். எடுத்துக்காட்டு கீழே

நடக்கிறான் : கிறுசெய்தாள் : த்போகாது : ஆ

2.2.6.4 சாரியை

தனக்கெனத் தனிப்பொருளின்றிச் சொற்களை உருவாக்கத்தக்க வகையில் சார்ந்து இயைந்து நிற்பது சாரியையாம். எடுத்துக்காட்டு கீழே

நடந்தனன் : அன்ஊரினன் : இன்

2.2.6.5 சந்தி

பகுதியும் கால இடைநிலையும் சந்திக்கும் வகையில் அமைந்தது சந்தி. எடுத்துக்காட்டுகள் கீழே

கொடுத்தான் (கொடு + த் + த் + ஆன்)தடுத்தான் (தடு + த் + த் + ஆன்)

இங்கே பகுதியை அடுத்துள்ள தகர ஒற்றைச் சந்தி என்பர்.

2.2.6.6 விகாரம்

சந்தி எழுத்துகள் சில சொற்களில் விகாரப்படுவதும் உண்டு. இதை விகாரம் என்பர்.

நட - த் - த் ஆன் என்பது நடந்தான் என்று ஆகும் போது த் என்பது ந் ஆகி விகாரமானது. த் என்ற சந்தி ந் ஆகி விகாரப்பட்டது.

2.2.7 தற்சுட்டு கிளவிகள்

ஐ, ஔ என்பன ஐ, ஔ என்ற எழுத்துகள் என்ற பொருளிலும், புளி என்பது புளி என்ற சொல் என்ற பொருளிலும் வரும்போது அவை ஒவ்வொன்றும் தன்னையே சுட்டி நிற்பதால் தற்சுட்டு கிளவிகள் எனப்பெயர் பெறும்.

புதன், 7 அக்டோபர், 2015

தமிழில் எழுதலாம் வாங்க..


மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். நம்ம தமிழ் மொழி எழுத்து வழக்கில் ஒற்று என்னும் மெய்யெழுத்து மிகும் இடங்கள் பற்றியும்,மிகா இடங்கள் பற்றியும் அறிந்து கொள்வோம். 
பகுதி -1 ஒற்று மிகும் இடங்கள் – பொது விதி
  1. க, ச, ட, த, ப, ற என்கிற வல்லின எழுத்துக்களோடு துவங்கும் வார்த்தைகளுக்கு முன்பு மட்டுமே ஒற்றெழுத்து வரும். இதில் ட, ற என்கிற எழுத்துக்களோடு பொதுவாக வார்த்தைகள் துவங்காது என்பதால் க, ச, த, ப  மட்டுமே கவனிக்கவேண்டியவை.
  2. ஆகவே ஒற்று என்றால் க,ச,த,ப என்கிற வல்லின எழுத்துக்களின் வேர்களான க், ச், த், ப்  என்ற நான்கு மெய்யெழுத்துகள் மட்டுமே.
  3. எனவே ஒற்று மிகும் இடங்கள் என்று இந்தப் பகுதியில் நாம் விவாதிக்கப்போவது இரண்டு வார்த்தைகளுக்கு இடையே ( முதல் வார்த்தை , இரண்டாம் வார்த்தை) க்,ச்,த்,ப் வரும் இடங்களை மட்டுமே.
  4. க, ச, த, ப என்ற எழுத்துக்களில் துவங்கும் சொல் வருமொழியாக ( The following word) இருந்தால் மட்டுமே முறையே க், ச், த், ப், ஆகிய ஒற்றெழுத்துகள் மிகும். க என்றால் – ‘க’ முதல் ‘கௌ’ வரை, இவ்வாறே ச, த, ப என்னும் எழுத்துகளுக்கும்.


விதி’ 1/35

“ஓரெழுத்துச் சொற்களுக்குப் பின் ஒற்று மிகும். ”
அதாவது முதல் வார்த்தை ஓரெழுத்துச் சொல்லாய் இருந்து,  இரண்டாம்  வார்த்தை  க, ச, த, ப  ஆகிய வல்லின எழுத்துக்களில்  ஆரம்பித்தால் இரண்டுக்கும் இடையே க், ச், த், ப்  ஆகிய ஒற்று மிகும்.
உதாரணங்கள் :
பூ+பறித்தாள் – பூப்பறித்தாள்
தீ+ பிடித்தது – தீப்பிடித்தது
கை+ குழந்தை – கைக்குழந்தை


விதி – 2
”அரை, பாதி, எட்டு, பத்து ஆகிய எண்களுக்குப் பின்னல் மட்டும் ஒற்று மிகும்.” மற்ற எண்களுக்கு மிகாது.

அதாவது முதல் வார்த்தை அரை, பாதி, எட்டு , பத்து என்று முடிந்து அடுத்த வார்த்தை க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துடன் துவங்கினால், இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும்.

உதாரணம் : அரைப்பக்கம், பாதித் துணி, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, எட்டுக்கட்டுகள், பத்துச்செய்யுள்கள்.


விதி – 3

தமிழ் மாதங்களின் பெயர்கள் பின்னால் ஒற்று மிகும்

அதாவது முதல் வார்த்தை தமிழ் மாதங்களின் பெயராய் இருந்து அடுத்த வார்த்தை க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துடன் துவங்கினால், இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும்.

உதாரணம் : தைப் பொங்கல், ஆடிப் பட்டம், மார்கழித் திங்கள்


விதி 4

தனி எழுத்தும் ( குற்றெழுத்து) அதனுடன் இணைந்து “ஆ” என்ற ஓசையுடன்  முடிகிற வார்த்தையின் பின்னால் ஒற்று மிகும்.

அதாவது ஒரு தனி எழுத்தும் ஆ என்கிற ஓசையுள்ள எழுத்தும் கொண்ட வார்த்தை முதலில் வந்து, அடுத்த வார்த்தை க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துடன் துவங்கினால், இரண்டுக்கும் இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும்.

உதாரணங்கள் : கனாக்கண்டேன், ( கனா + கண்டேன்) சுறாத்தலை ( சுறா + தலை) நிலாப்பயணம் ( நிலா + பயணம்)


விதி – 5

அ, இ, எ + அந்த, இந்த, எந்த, + அங்கு இங்கு, எங்கு, +அப்படி, இப்படி, எப்படி, +அவ்வகை, இவ்வகை, எவ்வகை, + அத்துணை, இத்துணை, எத்துணை முதலிய சொற்கள்  முதல் சொல்லாக இருந்து “க, ச, த, ப”  ஆகிய எழுத்துக்கள் கொண்ட சொல் பின்னால் வந்தால் இரண்டுக்கும் இடையே  க், ச், த், ப்  ஆகிய ஒற்று மிகும்.
உதாரணங்கள்:
அக்குடம், இச்செடி, எப்பக்கம்
அந்தச் செடி, இந்தக் குழந்தை, எந்தப் பாடம்
அங்குச் சென்றான், இங்குப் போகாதே, எங்குக் கேட்டாய்
அப்படிப் பேசு, இப்படிச் சொல், எப்படித் தந்தாய்


விதி – 6

திரு, நடு, முழு, விழு, பொது, அணு, புது, ஆகிய    இச்சொற்களுக்குப் பின் ஒற்று மிகும்.

அதாவது முதல் வார்த்தை மேற்கண்ட வார்த்தைகளா இருந்து,  அடுத்த வார்த்தை க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துக்களுடன் துவங்கினால், இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும்.

உதாரணங்கள் : திருக்கோயில், நடுத்தெரு, முழுப்பேச்சு, விழுப்பொருள், பொதுப்பணி, புதுக்கல்வி, அணுக்குண்டு ( யெஸ் யுவர் ஆனர்.. நாம அப்படிச் சொல்றதில்லையே தவிர அணுக்குண்டுதான் இலக்கணப்படி சரி)

முழுசா ’உ’ என்கிற ஓசையோடு முடியற இந்த வார்த்தைகளுக்கு இலக்கண ரீதியான பெயர்  முற்றியலுகரம்.


விதி – 7
முக்கியமான விதி இது.

சொல்லின் இறுதியில் குறுக்கப்பட்ட ‘உ’ ஓசையுடைய வார்த்தைகள் வந்தால்  ஒற்று மிகும். இந்தச் சொற்கள் – கு,சு,டு, து,பு, று ஆகிய எழுத்துக்களில் முடியும். இதற்கு குற்றியலுகரம் என்று பெயர்.

இந்த கு,சு,டு, து, பு, று என்கிற இறுதி எழுத்தின் முன்னால் வல்லின மெய் எழுத்துக்களான க், ச், ட், த், ப், ற்  வரவேண்டும் என்பது இரண்டாவது அவசியம். இப்படி வந்தால் அதற்கு வன் தொடர்க் குற்றியலுகரம் என்பது பெயர்

உதாரணங்கள் :
மக்கு, தச்சு, செத்து, உப்பு, கற்று போன்ற சொற்கள்.

ஆக, இந்த விதியை இலக்கண முறையில் சொல்லவேண்டுமென்றால் ;
”வன் தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் முதலில் வந்து, ‘க,ச,த,ப எழுத்துகளோடு துவங்கும் சொற்கள் பின்னால் வந்தால் இரண்டுக்கும் இடையே ஒற்று மிகும்.”
உதாரணங்கள் :
மக்குப் பையன்
தச்சுத் தொழில்
உப்புக் கடை
விட்டுச் சென்றார்


விதி – 8

ஏழாம் விதியின் விதிவிலக்கு இது.

வன் தொடர்க் குற்றியலுகரம் மட்டுமல்லாமல்  விதிவிலக்காய் ஒரு சில மென் தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்குப் பின்னும் ஒற்று மிகும்.

அதாவது சொல்லின் இறுதியில் குறுக்கப்பட்ட ‘உ’ ஓசையுடைய வார்த்தைகள் வரும். இந்தச் சொற்கள் – கு,சு,டு, து,பு, று ஆகிய எழுத்துக்களில் முடியும்.

இந்த கு,சு,டு, து, பு, று என்கிற இறுதி எழுத்தின் முன்னால் மெல்லின மெய் எழுத்துக்கள் வந்தால் அதற்கு மென் தொடர்க் குற்றியலுகரம் என்பது பெயர்.

அதைத் தொடர்ந்து பின்னால் வரும் வார்த்தை க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துக்களில் துவங்கினால் முறையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும்.

உதாரணங்கள்:  பாம்புத் தோல்,  குரங்குக் கூட்டம்,  கன்றுக்குட்டி , மருந்துக்கடை


விதி – 9

’அ’ அல்லது ‘இ’ ன்னு முடியற வார்த்தைக்குப் பின்னால ஒற்று மிகும்.
உதாரணம் – தேடிப் போனார், மெல்லச் சொன்னார், தேடிச் சென்றார், வாடிப் போயிற்று.
அதாவது முன்னால் வர்ற வார்த்தை ‘அ’ அல்லது ‘இ’ சவுண்டோட முடிஞ்சி அதுக்குப் பின்னால வர்ற வார்த்தை க, ச, த, ப என்ற எழுத்துக்களோட ஆரம்பிச்சா இடையில க்,ச்,த்,ப் என்ற ஒற்று மிகும்.
இதுல கவனிச்சீங்கன்னா ரெண்டாவது வார்த்தை எல்லாம் போனார், சொன்னார், சென்றார், போயிற்று அப்பிடின்னு எல்லாம் வினைச் சொல்லா (Verb) இருக்கு.
முன்னால இருக்கற வார்த்தை எல்லாம் தேடி, மெல்ல, வாடி அப்படின்னு பாதியிலேயே நிக்குது. பின்னால வர்ற வினைச் சொல்லோட சேர்ந்தாதான் அர்த்தம் முழுசா வரும். அதெல்லாம் Dependent Verb- அது பேரு ”வினை எச்சம்.”
இலக்கண ரீதியா சொல்லணும்னா – ‘அ’ அல்லது ‘இ’ என்ற ஓசையோடு முடிகிற வினை எச்சத்தின் (அகர இகர ஈற்று வினையெச்சம்) பின்னால் ஒற்று மிகும்.



விதி – 10
”ஆய், போய், ஆக, போக, ” அப்படின்னு முடியற வார்த்தைகளுக்குப்பின்னால் ஒற்று மிகும்
உதாரணம் : கேட்பதாய்க்கூறினான், ( கேட்பதாய் + கூறினான்) சொன்னதாய்ச்சொல்,( சொன்னதாய் + சொல்) போய்த்தேடினார், ( போய் + தேடினார்) இருப்பதாகக்கூறு.( இருப்பதாக + கூறு)
அதாவது முன்னால் வர்ற வார்த்தை ‘ஆய், போய், ஆக, போக’ அப்படின்னு முடிஞ்சி, அதுக்குப் பின்னால வர்ற வார்த்தை க, ச, த, ப என்ற எழுத்துக்களோட ஆரம்பிச்சா இடையில க்,ச்,த்,ப் என்ற ஒற்று மிகும்.
இதுலயும் முந்தய விதி மாதிரி ரெண்டாவது வார்த்தை எல்லாம் ‘ கூறினான், தேடினார்’ அப்பிடின்னு வினைச் சொல்லா (Verb) இருக்கு பாருங்க.
முன்னால இருக்கற வார்த்தை எல்லாம் பாதியிலேயே நிக்குது. பின்னால வர்ற வினைச் சொல்லோட சேர்ந்தாதான் அர்த்தம் முழுசா வரும். அதாவது Dependent Verb- நேற்றைய விதி மாதிரி இதுவும் ”வினை எச்சம்.”
இலக்கண ரீதியா சொல்லணும்னா – ‘ஆய், போய், ஆக, போக’ அப்படின்னு முடிகிற வினை எச்சத்தின் பின் ஒற்று மிகும்.



விதி – 11

ய், ர், ழ் என்கிற எழுத்துகளோடு முதல் வார்த்தை முடிந்து இரண்டாவது வார்த்தை க, ச, த, ப  என்கிற எழுத்துக்களில் துவங்குகிற பெயர்ச்சொல்லாக (Noun) இருந்தால்  இரண்டுக்கும் இடையே க், ச், த், ப் ஆகிய ஒற்று மிகும்.

உதாரணங்கள் ::

மோர்க்குழம்பு, ( மோர் + குழம்பு) தாய்ப் பாசம், ( தாய் + பாசம்) போர்க் களம், ( போர் + களம்) தமிழ்ச் செயலி, தமிழ்த் தாய். ( தமிழ் + தாய்)


விதி – 12

முதல்ல உதாரணத்தைப் பாக்கலாம் : தங்கத் தாமரை, வெள்ளைப் புறா

தங்கம், வெள்ளை இதெல்லாம் என்ன ? தாமரை , புறா இவற்றின் பண்புகள்.
தங்கத்தால் ஆகிய தாமரை, வெள்ளையான புறா.
அதனால இதுக்கு ‘ பண்புத் தொகை’ ன்னு பெயர்.
அதாவது முதல் வார்த்தை ஒரு பண்பை உணர்த்தி,  இரண்டாம் வார்த்தை க, ச, த, ப  ஆகிய வல்லின எழுத்துக்களில் துவங்கினால் இரண்டுக்கும் இடையில் க்,ச்,த்,ப் ஆகிய ஒற்றெழுத்து மிகும்

தொகைன்னா  என்னா ?

தங்கத்தால் ஆகிய தாமரை,   வெள்ளையான தாள்  என்கிற வார்த்தைகளில் ’ஆல்’ ‘ ஆன’  அப்படிங்கற வார்த்தைகள் மறைஞ்சி இருக்கு. அப்படி மறைஞ்சிருந்தா அதுக்கு இலக்கண ரீதியா ’ தொகை’ அப்படின்னு பேரு. அவ்வளதான் சமாச்சாரம்.



விதி – 13

உதாரணம் – மல்லிகைப்பூ ( மல்லிகை + பூ)

பூ என்பது பொதுப் பெயர். மல்லிகை சிறப்புப்பெயர். இரண்டும் ‘பூ’ வுடன் தொடர்புடையதுதான். மல்லிகைன்னு சொன்னாலே பூ தான். இப்படி இரண்டு பண்புகளைக் கொண்ட சொற்களுக்கு  ’இருபெயரொட்டுப் பண்புத் தொகை.’ ன்னு பேரு.

இங்கே இரண்டாம் வார்த்தை  க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துக்களில் துவங்கினால்  க், ச் த், ப், ஆகிய ஒற்று மிகும்.

இன்னும் சில உதாரணங்கள் : கோடைக்காலம், மல்லிகைப்பூ, மழைக்காலம், செவ்வந்திப்பூக்கள்



விதி – 14

உவமைகள் வர்ற இடங்களிலே ஒற்று மிகும்

உதாரணம் : தாமரைக்கண் ( தாமரை + கண்), முத்துப்பல் ( முத்து + பல்)  தாமரையைப் போல இருக்கற கண் , முத்து மாதிரி இருக்கற பல்.

அதாவது முதல் வார்த்தை ஒரு உவமையா இருந்து இரண்டாவது வார்த்தையா க,ச,த,ப  ஆகிய வல்லின எழுத்து வந்தா  இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும்.

இலக்கண ரீதியா சொல்லணும்னா “ உவமைத் தொகையில் ஒற்று மிகும்”

தொகைன்னா  என்னான்னு உங்களுக்குத் தெரியும்..

தாமரை போன்ற கண், முத்து போன்ற பல்  அப்படிங்கறதுல  ”போன்ற” அப்படிங்கற வார்த்தை மறைஞ்சி இருக்கு. அப்படி மறைஞ்சிருந்தா அதுக்கு இலக்கண ரீதியா ’ தொகை’ அப்படின்னு பேரு.
இன்னொண்ணு.  உவமை மறையாமல் வந்தாலும் ஒற்று மிகும்
உதாரணம் : மயில் போலப் பொண்ணு ஒண்ணு.



விதி 15

ட, ற  என்று முடியும் சொற்களுக்குப் பின் ஒற்று மிகும்
முதல் வார்த்தை ட, டு ஆகிய எழுத்துக்களுடன் முடிந்து,  அடுத்த வார்த்தை க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துக்களுடன் துவங்கினால், இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும்.

உதாரணங்கள் :
தமிழ்நாடு + கலை = தமிழ்நாட்டுக்கலை
வீடு + சோறு  = வீட்டுச் சோறு
ஆறு + தண்ணீர் = ஆற்றுத்தண்ணீர்
கிணறு + தவளை = கிணற்றுத் தவளை



விதி – 16 

ஊர்ப்பெயர்களை அடுத்து கட்டாயம் ஒற்று மிகும்.
அதாவது ஊர்ப்பெயர் முதல் வார்த்தையாய் இருந்து இரண்டாம் வார்த்தை க,ச,த,ப ஆகிய வல்லின எழுத்துக்களோடு துவங்கினால் இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்றெழுத்துகள் மிகும்.

சென்னைக் கடற்கரை. குமரிக்கடல். திருச்சிக் காவிரி.


விதி – 17

பெயரெச்சங்களின் ( Relative Verbal Form) பின் ஒற்று மிகாது.

உதாரணம் : உறங்கிய பையன் – உறங்கிய என்பது குறைந்த வினைச்சொல். அதனால் அது எச்சம் எனப்படும். உறங்கிய என்னும் எச்சம் பையன் என்ற பெயரைச் சார்ந்திருப்பதால் அது பெயரெச்சம் எனப்படும்.

இங்கே உறங்கிய என்ற பெயரெச்சத்திற்குப் பின் க,ச,த,ப ஆகிய வல்லின எழுத்துக்கள் வந்தாலும் ஒற்று மிகாது.

மேலும் உதாரணங்கள் : படித்த பையன், ஓடுகிற குதிரை, பெரிய பெட்டி, நல்ல பாம்பு, நல்ல குழந்தை.



விதி – 18

விதி எண் 17 இல் பெயரெச்சத்தின் பின் ஒற்று மிகாது என்று பார்த்தோமில்லையா ? இன்னைக்கு அதோட விதிவிலக்கு விதி பார்ப்போம்

”ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் ஒற்று மிகும்.”

ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் – இதுக்கு பல்லு விளக்காம ஈறு கேட்டுப்போயிருந்தா எதிர்ல இருக்கறவங்க மேல பேசும்போது எச்சை தெறிக்கும்ங்கறாமாதிரி தோணினாலும் அதற்கு கடைசி எழுத்து மறைந்திருக்கும் பெயரெச்சம் என்று அர்த்தம். ஈறு ( இறுதி) கெட்ட ( மறைந்த)  எதிர்மறை ( opposite) பெயரச்சம் (Relative Verbal form) –

அதாவது சொல்லின் இறுதியில் கடைசி எழுத்து மறைந்திருக்கும் பெயரெச்ச சொற்கள் வந்து, இரண்டாவது வார்த்தை க,ச,த,ப ஆகிய வல்லின எழுத்தோடு ஆரம்பித்தால் இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும்.

உதாரணம் :
அறியா + பிள்ளை = இந்த வார்த்தையின் முழுவடிவம் ”அறியாத பிள்ளை”  ஆனால் அறியாத வின் இறுதியில் “த” மறைந்திருக்கிறது. அதனால் இங்கே ஒற்று மிகுந்து அறியாப் பிள்ளை என்று வரும்

தீரா + துன்பம் = தீராத  என்பது முழுமையான சொல். அதில் த கெட்டிருக்கிறது. அதனால் தீராத்துன்பம் என்று ஒற்றுமிகும்.

ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் அப்படிங்கற பயமுறுத்துகிற சொற்பிரயோகத்துக்குப் பின்னால் எவ்வளவு எளிதான விதி ஒளிந்திருக்கிறது பாருங்கள்.

தமிழ் இலக்கணம்  கீதே அது சொம்மா பிலிம் காட்ற மெட்ராஸ் ரவுடி மாதிரி. பயந்து ஒளிஞ்சா நாம அம்பேல் ஆயிருவோம். தம் கட்டி எய்த்து நிக்கணும்.   ”தட்னா தாராந்துரும்.



விதி – 19

அது, இது, எது,
அவை, இவை, எவை,
அன்று, இன்று, என்று,
அத்தனை, இத்தனை, எத்தனை,
அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு,
அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு
போன்ற சொற்களுக்குப் பின் ஒற்றெழுத்து மிகாது.

உதாரணங்கள் : அது பெரியது,  இவை சென்றன , எத்தனை பூக்கள், அவ்வளவு பருப்பு, இவ்வாறு கூறினான்.



விதி 20 – 

இரு வட மொழிச் சொற்கள் சேர்ந்து வரும்தொடர்களில் வலி மிகாது

ஆதிபகவன், தேசபக்தி



விதி – 21 

ஆ, ஓ, யா என்னும் கேள்வி கேட்கும் வினாக்களுக்குப் பின் வலி மிகாது.

உதாரணங்கள் : அவனா போனான் ? அவனா சொன்னான் இருக்காது ? தம்பியோ கேட்கிறான்.



விதி – 22 

வினைத்தொகையில் ஒற்று மிகாது.
உதாரணம் : சுடுகாடு
வினைச் சொல்லின் பகுதியும்( சுடு- சுடுகின்ற) பெயர்ச்சொல்லும் ( காடு) சேர்ந்து பெயரெச்சத் தொடர் போல வருவது வினைத்தொகை

இன்னும் சில உதாரணங்கள் :  உரைகல், குடிதண்ணீர்,



  
விதி – 23 

வெற்றிலை பாக்கு

சொல்லிப்பாத்தா வெற்றிலைப் பாக்கு ன்னு வரணும் போல தோணுதில்ல ? ஆனா இங்க ஒற்று மிகாது.

வெற்றிலை பாக்கு அப்படிங்கறதை முழுமையாகச் சொன்னால் வெற்றிலையும் பாக்கும் அப்படின்னு வரும். இங்கே ‘உம்’ மறைந்திருக்கிறது. அப்படி மறைந்தால் அங்கே ஒற்று மிகாது. அதாவது இரண்டு பொருள்களை பட்டியலிட்டு அதில் உம் என்ற வார்த்தை வராமல் மறைந்தால் அங்கே ஒற்று மிகாது.

இதுக்கு இலக்கண ரீதியா ‘ உம்மைத் தொகைன்னு பேரு. தொகைன்னா மறைஞ்சி இருக்கறதுன்னு. இங்கே ‘உம்’ மறைந்திருக்கிறது.

உதாரணங்கள் : இட்டிலி சாம்பார், யானை குதிரை



விதி – 24 

அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி இரண்டிலேயும் ஒற்று மிகாது.
அடுக்குத் தொடர் உதாரணம் – மெல்ல மெல்ல, தாவி தாவி – இந்த தொடரில் இருக்கும் இரண்டு வார்த்தைகளை பிரித்தாலும் பொருள் வரும்.

இரட்டைக் கிளவி அப்படி இல்ல. பிரித்தால் பொருள் வராது. ஜீன்ஸ் படப் பாட்டு கேட்டிருப்பீங்க.

உதாரணம் – சல சல என்று ஓடிய தண்ணீர், விறு விறு என்று நடந்தான்,

அடுக்குத் தொடரோ  இரட்டைக் கிளவியோ இரண்டிலும் ஒற்று மிகாது.



விதி – 25 

சிறு, சிறிய , பெரிய  ஆகிய சொற்களுக்குப் பின் ஒற்று மிகாது

சிறு துரும்பு, சிறிய சிக்கல், பெரிய கொடுமை



விதி – 26  

இன்னைக்கு டாஸ்மாக் விதி – ’கள்’  சேர்ந்தால் உடம்பு வலி மிகாதது போல
(வன்தொடர்க் குற்றியலுகரச்) சொற்களின் பின் “ கள்” “  என்னும் விகுதி சேரும்போது ’க்’ என்கிற ஒற்று  மிகுதல் அவசியமில்லை.

உதாரணங்கள் : வாக்குகள், வாழ்த்துகள், தோப்புகள், எழுத்துகள்,



விதி 27 

உபரி விதிகளை இங்கே ஒன்றாய்ப் போட்டிருக்கிறேன்.

* கூப்பிடுகின்ற விளிப்பெயரின் பின் (விளித்தொடர்) ஒற்று மிகாது
உதாரணம் : தம்பி போ. ! தம்பி பார்.

* ஏவல் வினைமுற்றின் ( Imperitive Verb) பின்னும் ஒற்று மிகாது
உதா : போ தம்பி

* வியங்கோள் வினை முற்று ( optative verb) பின் ஒற்று மிகாது. இது மரியாதையாய் கட்டளையிட, சபிக்க, வாழ்த்த, வேண்டிக்கொள்ள பயன்படும்.
உதா : வீழ்க கொடுமை

* வினைமுற்றுத் தொடரின் பின் ஒற்று மிகாது
உதா : பாடியது பறவை

* முன்னிலை வினைமுற்றின் பின் ஒற்று மிகாது
வருதி குமர

* முற்றுவினைக்குப் பின் பின் வலி மிகாது-
வாரா குதிரைகள்.


விதி – 28


எழுவாய்த் தொடரில் ஒற்று மிகாது. (  முதலாம் வேற்றுமை உருபு)

எழுவாய் அப்படின்னா ?
ஒரு வாக்கியத்தின் அமைப்பில் மூன்று பகுதிகள் இருக்கும். அவை :
எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்.

யார் செய்தது என்ற கேள்விக்கு விடையளிப்பது – எழுவாய்
என்ன செயல் செய்யப்பட்டது என்பதற்கு விடை தருவது – பயனிலை
எதைச் செய்தார்கள் என்ற கேள்விக்கு விடை தருவது – செயப்படுபொருள்

உதாரணம் ;  கமலஹாசன் கோயில் சென்றார்,
கமலஹாசன் – எழுவாய்
சென்றார் –  பயனிலை
கோயில் – செயப்படுபொருள்

இது போன்ற எழுவாய்த் தொடரில், இரண்டாம் வார்த்தை க,ச,த,ப என்று துவங்கினாலும் ஒற்று மிகாது.

உதாரணங்கள் :

துணி கிழிந்தது
கிளி பேசியது
கோழி கூவியது
நாய் தின்றது



விதி – 29

‘ஐ’ என்கிற ஓசையோடு முடிகிற வார்த்தைகளின் பின்  ஒற்று மிகும். ( இரண்டாம் வேற்றுமை உருபு)

அதாவது முதல் வார்த்தை ’ஐ’ என்கிற ஓசையுடன்  முடிந்து,  அடுத்த வார்த்தை க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துக்களுடன் துவங்கினால், இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும்.

உதாரணங்கள் :   பூனையைப் பார்த்தான், உன்னைக் கேட்டால்,  அவனைப் பிடித்தால்


இதுக்கு விதிவிலக்கு ஒண்ணு இருக்கு. முரளி போடற தூஸ்ரா போல.

‘ஐ’ மறைஞ்சி வந்தா ஒற்று மிகாது.

உதாரணம் –  மான் கண்டேன்.

மானை+ கண்டேன் அப்படின்னு எழுதாம, மான் கண்டேன்னு எழுதினா அப்ப ஒற்று வராது. அதே போல மயிலைக் கண்டேன், மயில் கண்டேன்,

ஓக்கேவா ?

ஐ.. அதுக்குள்ள சந்தோஷப்பட்டா எப்பிடி.. இன்னும் இருக்கு. இது தீஸ்ரா.

சில சமயம் ’ ஐ’ மறைந்து அதோட சில வார்த்தைகளும் கூட மறைந்து வரும். உதாரணம் தண்ணீர்த் தொட்டி.  அதாவது தண்ணீரை உடைய தொட்டி.  இங்க ஐ மட்டும் இல்லாம ‘உடைய’ அப்படிங்கற வார்த்தையும் மறைந்திருக்கு. அப்படி மறைஞ்சிருந்தா அங்க ஒற்று மிகும்.

இன்னொரு உதாரணம் :

யானை + பாகன் அதாவது யானையை ஓட்டும் பாகன் = யானைப் பாகன்
இங்க ஐ மறைஞ்சிருக்கு கூடவே ஓட்டும் என்கிற வார்த்தையும் மறைஞ்சிருக்கு பாருங்க.

இன்னும் சில உதாரணங்கள் :
தேர்ப் பாகன் ( தேரை ஓட்டும் பாகன்) தயிர்க்குடம், ( தயிரை உடைய குடம்) காய்கறிக்கடை, சிற்றுண்டிச்சாலை..

இலக்கண ரீதியா இதுக்கு ‘உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை ” அப்படின்னு பேர்.  அதாவது உருபும் ( ஐ) அதோட பயனும் (உடைய) இரண்டும் தொக்க (இணைந்து) தொகை ( மறைந்து வருவது)
என்ன..?  ரொம்ப பேஜாரா இருந்தா இலக்கணரீதியான வரியை மறந்துடுங்க.





விதி – 30 

‘கு’ என்கிற ஓசையோடு முடிகிற வார்த்தைகளின் பின்  ஒற்று மிகும். (நான்காம் வேற்றுமை உருபு.)


அதாவது முதல் வார்த்தை ’கு’ என்கிற ஓசையுடன்  முடிந்து,  அடுத்த வார்த்தை க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துக்களுடன் துவங்கினால், இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும்.

உதாரணங்கள் : அவனுக்குத் தா , கடைக்குப் போனான்

இதிலயும் ஒரு தூஸ்ரா
’கு’ மறைஞ்சு வந்தா,   அஃறினைப் பெயர்கள் முதல் வார்த்தையா இருந்தா மட்டும்தான் ஒற்று மிகும்.  உயர்திணைப் பெயர்களின் பின் வலி மிகாது.

உதாரணம் : வேலி+ கால் = வேலிக்கால்

இங்கே வேலிக்குக் கால். ‘கு’ மறைஞ்சு வந்திருக்கு. வேலி அஃறிணைப் பெயர். அதனால ஒற்று மிகும்

உயர்திணை உதாரணம் : பொன்னி + கணவன் அதாவது பொன்னிக்குக் கணவன் என்பதை பொன்னி கணவன் என்று எழுதினால் ஒற்று மிகாது

இப்ப தீஸ்ரா

’கு’ என்கிற உருபும் மறைந்து, அதனுடன் இணைந்து வரவேண்டிய வார்த்தையும் மறைந்தால் ஒற்று மிகும் ( உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை)

உதாரணம் : குழந்தை+பால் = குழந்தைப் பால்  கோழி+தீனி = கோழித் தீனி



விதி – 31 

ஆல், ஆன், ஒடு ஓடு  என்கிற வார்த்தைகள் ஒரு சொல்லின் இறுதியில் வந்தால் ஒற்று மிகாது (மூன்றாம் வேற்றுமை உருபு)

உதாரணம் – கத்தியால் குத்தினான், அவனோடு சுத்தினான்.


ஆனால்  ஆல், ஆன், ஒடு ஓடு  என்கிற உருபுகள் மறைந்து, அதனுடன் இணைந்து வரவேண்டிய வார்த்தையும் மறைந்தால் ஒற்று மிகும் ( உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை)

உதாரணம் :  வெள்ளித் தட்டு, பட்டுச் சேலை ( வெள்ளியால் செய்யப்பட்ட தட்டு, பட்டால் நெய்யப்பட்ட சேலை) பித்தளைக் குடம், மோர்க்குழம்பு



விதி – 32

இல், இன், இருந்து ஆகிய வார்த்தைகள் ஒரு சொல்லின் இறுதியில் வந்தால் ஒற்று மிகாது (ஐந்தாம் வேற்றுமை உருபு)

உதாரணம் : தாய்மொழியில் கூறு

இல் இன் இரண்டும் மறைந்து வந்தாலும் ஒற்று மிகாது

தாய்மொழி கூறு

ஆனால்  இல், இன், இருந்து  ஆகிய உருபுகள் மறைந்து, அதனுடன் இணைந்து வரவேண்டிய வார்த்தையும் மறைந்தால் ஒற்று மிகும் ( உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை)

உதாரணம் :  பழச்சாறு ( பழத்தில் பிழிந்த சாறு)



விதி – 33 

‘அது, ஆது,  உடைய ஆகிய வார்த்தைகள் முதல் வார்த்தையின்  இறுதியில் வந்தால் ஒற்று மிகாது (ஆறாம் வேற்றுமை உருபு)

உதாரணங்கள் : நண்பனது கட்டில், என்னுடைய கைகள்

இந்த உருபுகள் மறைந்து வந்து ( வேற்றுமைத் தொகை) முதலில் வரும் சொல் அஃறிணையாய் இருந்தால் மட்டும் வலி மிகும். அதாவது- முதலில் வரும் சொல், உருபுகள் மறைந்திருக்கும் அஃறிணைச் சொல்லாய் இருந்து பின் வரும் சொல் க,ச,த,ப ஆகிய வல்லின எழுத்துக்களின் துவங்கினால், இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும்

உதாரணம் : கிளிப்பேச்சு ( கிளியினது பேச்சு) குருவித்தலை, கிளிக்கூடு, நாய்க்குட்டி



விதி – 34 

கண், இடம்- என்று முடியும் வார்த்தைகளுக்குப் பிறகு ஒற்று மிகாது (ஏழாம் வேற்றுமை உருபுகள்)

உதாரணம் : மலையின்கண் திரிவோர்.


இந்த உருபுகள் மறைந்து வந்தாலும் ஒற்று மிகாது

உதாரணம் : மலை திரிவோர்

ஆனால் இந்த உருபுகள் மறைந்து, இதனுடன் இணைந்து வரவேண்டிய வார்த்தையும் மறைந்து வந்தால் ஒற்று மிகும் ( உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை)

உதாரணம் : மலைக்கோவில் ( மலையின் கண் எழுந்த கோவில்)




விதி – 35 

அழைப்பது அல்லது விளிப்பது போல வரும் சொல் இது. இந்த ”விளி வேற்றுமை” க்கு ஒற்று மிகாது. (எட்டாம் வேற்றுமை உருபு)

உதாரணம் : தலைவா போதும், அம்மா பாடு


குறிப்பு – 36

பழக்கம், வழக்கம் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் ?

ஒருவர் தன் அளவில் தனி மனிதனாய் ஏற்படுத்திக்கொள்வது- ’பழக்கம்’
ஒரு சமுதாயமாய், ஊராய் நாடாய் செய்வது வழக்கம்

காலையில எழுந்ததும் பல்லு விளக்காம காபி சாப்படறது என் ‘பழக்கம்’.
ஒவ்வொரு தேர்ந்தலிலும் அரசியல்வாதிகள் சொல்வதை நம்பி ஏமாந்து ஓட்டுப் போடுவது மக்களின் வழக்கம்.



குறிப்பு -37

முதலிய,  ஆகிய, போன்ற – இந்தச்  சொற்களின் பயன்பாட்டில் வித்தியாசம் என்ன ?

எதையாவது பட்டியல் இடும்போது அது முழுமையான பட்டியலாக இல்லாவிட்டால் முதலிய என்கிற வார்த்தைப் பிரயோகம் வரும்.
பட்டியல் முழுமையானதாய் இருந்தால் ‘ஆகிய’ வரும்.
போன்ற என்ற வார்த்தை, அதற்கு முன்னால் சொல்லப்பட்டவை  அதன் உவமையாகவோ, நிகரானவைகளைச் சுட்டிக்காட்டப்  பயன்படும்.

உதாரணம் :
  1. மன்மோகன் சிங், நரசிம்ம ராவ், வாஜ்பாய் முதலியோர் இந்தியாவின் திறமையான பிரதம மந்திரிகளாய் இருந்தார்கள். ( இவர்களைத் தவிர இன்னும் சிலரும் திறமையான  பிரதமர்களாய் இருந்தார்கள் என்று அர்த்தம்)

  1. முதலமைச்சர் பதவியிலிருந்த லாலு யாதவ், ஓம் பிரகாஷ் சௌத்தாலா, ஷிபு சோரன், மது கோடா, எடியுரப்பா, பிரகாஷ் சிங் பாதல், ஜெயலலிதா ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகச் சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள். ( இவர்களைத் தவிர வேறு எந்த முதலமைச்சரும் சிறைத்தண்டனை அனுபவிக்கவில்லை என்று அர்த்தம்)

  1. காந்தி , காமராஜ் போன்ற அரசியல்வாதிகள் இனி இந்திய அரசியலில் கிடைக்கமாட்டார்கள்.



குறிப்பு  38
ஓரு &  ஓர்
சொல் உயிரெழுத்தில் துவங்கினால் ஓர் வரவேண்டும்.
இல்லையென்றால் ஒரு.

உதாரணங்கள் :  ஓர் உதவி, ஓர் அழைப்பு , ஒரு விண்ணப்பம், ஒரு வீடு



குறிப்பு  39

வினாயகரா  விநாயகரா ?
வி+நாயகர்  அதாவது தமக்கு மேல் தலைவன் இல்லாதவன் என்பது இதன் பொருள். அதன்படி விநாயகர் என்பதே சரி. வினாயகர் என்ற எழுதினால் அதன் அர்த்தம் சிதைந்து விடும்.
அதே முறையில்
இராமன் + நாதன், தேவன் + நாதன் என்றே பெயர்களைப் பிரிக்கவேண்டும். ( இராம + நாதன் என்று பிரிப்பது வடமொழி முறை என்கிறார் அ.கி.பரந்தாமனார்)
அதனால் இராமனாதன் என்பது தவறு. இராமநாதன், தேவநாதன் என்பதே சரி.

இயக்குனர் ? இயக்குநர்
ஓட்டுனர் ஓட்டுநர்
எது சரி ?

சொக்கன் எழுதுகிறார்

ஒரு வினைச்சொல், அதைச் செய்பவர் இவர் என்கிற அர்த்தத்தில் பெயர்ச்சொல்லாக மாறும்போது ‘நர்’ விகுதி வரும்.

உதாரணமாக, அனுப்புதல் என்பது வினைச்சொல் (Verb), அதை அனுப்புகிறவர் என்ற பொருளில் சொல்லும்போது ‘அனுப்புநர்’ என்று மாறும்.
இன்னும் சரியாகச் சொல்வதென்றால், வினைச் சொல் ==> கட்டளைச் சொல் (அது உகரத்தில் இருக்கவேண்டும்) + நர்.
இன்னும் சில உதாரணங்கள்:
  • ஆட்சி செய்தல் ==> ஆள் / ஆளு ==> ஆளுநர்
  • பெறுதல் ==> பெறு ==> பெறுநர்
  • ஓட்டுதல் ==> ஓட்டு ==> ஓட்டுநர்
  • இயக்குதல் ==> இயக்கு ==> இயக்குநர்

கவிஞர் மகுடேசுவரன் எழுதுகிறார் :
பெயர்ச்சொற்களில் ஞர், நர், னர் – இம்மூன்றும் எங்கெங்கு எப்படியெப்படி வரும் என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் இவை தொடர்பாக எழும் குழப்பங்களை எளிதில் தீர்க்கலாம்.

எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள் !
அறிஞர், பொறிஞர், கலைஞர், கவிஞர், வலைஞர்.
இயக்குநர், அனுப்புநர், பெறுநர், ஓட்டுநர்.
உறுப்பினர், பொறுப்பினர், படையினர், அணியினர்.
ஞர்-க்கு முன்னொட்டுவது பெரும்பாலும் பெயர்ச்சொல்லாக இருக்கிறது.
நர்-க்கு முன்னொட்டுவது அச்செயலுக்குரிய வினைவேர்ச்சொல்லாக இருக்கிறது. கட்டளையிடுகிறது.
னர்-க்கு முன்னொட்டுவது பெயர்ச்சொல்லாக இருந்து இன்+அர் சேர்வதால் பலர்பால் பெயர்ச்சொல்லாகிறது.

நர் சேர்க்குமிடங்களில் ‘உகர’ ஈற்றில் முடியும் வினைவேர்ச்சொல்லாக இருப்பதையும் கவனிக்கவும் (இயக்கு, அனுப்பு, பெறு, ஓட்டு).



குறிப்பு  40

“ற்” , ட்  ஆகிய எழுத்துக்குப்பிறகு இன்னொரு மெய்யெழுத்து வரக்கூடாது.

பயிற்ச்சி, முயற்ச்சி, வேட்க்கை , மீட்ப்பு – தவறு
பயிற்சி, முயற்சி, வேட்கை, மீட்பு – சரி



குறிப்பு  41

இருவகையாய் எழுதக்கூடிய  சொற்களில் சில :
பவளம் – பவழம்
கோவில் – கோயில்
மதில் – மதிள்
உழுந்து – உளுந்து
மங்கலம் – மங்களம்



குறிப்பு – 42

தண்ணீர் என்பது  தண் ( குளிர்ச்சிபொருந்திய) + நீர்.  எனவே தண்ணீர் என்றாலே குளுமையான நீர் என்றுதான் பொருள். இதற்கு எதிர்ப்பதமான சூடான நீர் –  வெந்நீர் என்பதே.  சுடுதண்ணீர் என்பது தவறான பிரயோகம். தண்ணீர், வெந்நீர் என்பதே சரியானது.



குறிப்பு எண் – 43

Oil என்பது எண்ணெய்.  எண்ணை என்று எழுதுவது தவறு.

எண்ணெய்  என்பது எள்+ நெய். பிசுபிசுப்பான திரவம் எல்லாமே நெய்.  எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய் – எண்ணெய்.  இந்த எண்ணெய் என்பது நாளாவட்டத்தில் ஒரு பொதுப் பெயராகி விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணை என்றெல்லாம் காரணப்பெயர் மறைந்து புதிய பெயர்கள் உருவாகிவிட்டன.

எண்ணை என்று எழுதுவது ‘எண்’ ( Number) ஐ குறிப்பதாகிவிடும். எட்டாம் எண்ணை இரண்டால் வகுத்தால் நான்கு என்று விடை வரும் என்பது போல.

குறிப்பு எண்- 44
ஒருமைக்கு அன்று. பன்மைக்கு அல்ல என்பது விதி

உதாரணம்: இந்தப் பேனா என்னுடையது அன்று.  இந்தப் பேனாக்கள் என்னுடையவை அல்ல

நாம் ’அன்று’ என்கிற வார்த்தையை உபயோகிப்பதில்லை. எல்லாவற்றிற்கும் அல்ல என்று சொல்கிறோம்.

அவன் தன் வீட்டுக்குப் போனான்
அவர் தம் வீட்டுக்குப் போனார் ( மரியாதைப் பன்மையில் தன் என்பது தம் என்றாகும்)

1

”தமிழ் நடிகர்களில் கமலஹாசனே புத்திஜீவி.” – தவறு

தமிழ் நடிகர்களுள் கமலஹாசனே புத்திஜீவி – சரி

ஒப்பிடும்போது “ உள்” விகுதி வரவேண்டும்.


2

” எவ்வளவு முயற்சித்தாலும் கமல் போல் நடிக்க முடியாது” – தவறு


”முயற்சித்தால்” என்னும் சொல் தவறானது. முயற்சி என்பது தொழிற்பெயர். தொழிற் பெயரில் இருந்து முயற்சித்தான் என்று வினைமுற்று உண்டாகாது.

முயற்சி செய்தாலும்  என்றாவது  முயன்றாலும் என்றாவது எழுத வேண்டும்.


3

”பல நண்பர்கள் கமலின் விசிறிகள். சில நண்பர்கள் ரஜினியின் விசிறிகள்.”

நண்பர்கள் பலர்  கமலின் விசிறிகள். நண்பர்கள் சிலர் ரஜினியில் விசிறிகள் என்பதே சரி. ”பல”, “சில” என்பவை அஃறினைப் பன்மைகள்.

4

”இந்த ஓவியம் எத்தனை அழகாய் இருக்கிறது !.”
இந்த ஓவியம் எவ்வளவு அழகாய் இருக்கிறது” என்பதே சரி.

எத்தனை என்பது எண்களைக் குறிக்கும். அழகு, திறமை, தைர்யம் போன்ற பண்புகளுக்கு எவ்வளவு என்றே வருவது முறை . இந்த ஓவியம் எத்துணை அழகாய் இருக்கிறது என்பதும் சரி.(எத்தனை ,எவ்வளவு என்கிற சொற்கள் எண்ணிக்கையை குறிக்கும்.எத்துணை என்பது அளவு ,பண்பு ,நிறம் போன்றவற்றை குறிக்கும் .—ஆதாரம் தமிழண்ணலின் உங்கள் தமிழை தெரிந்து கொள்ளுங்கள் எனும் நூல் (கருப்பம்புலம் பாலாஜி. )


5

”எப்படித் தாய் இருப்பாளோ அவ்வாறு மகள் இருப்பாள்.” – தவறு
“எப்படித் தாய் இருப்பாளோ அப்படி மகள் இருப்பாள்”- சரி

எப்படி, எவ்வாறு, எங்ஙனம், எவ்வளவு, எது  என்று வாக்கியம் தொடங்குமானால் சமநிலை வருவதற்கு “அப்படி, அவ்வாறு, அங்ஙனம், அவ்வளவு, அது என்றே வரவேண்டும்.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”

6

”பிரதி ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் விடுமுறை”

பிரதி என்னும் சொல் வந்தால் ‘தோறும்’ தேவையில்லை.
ஞாயிற்றுக்கிழமை தோறும் என்பதற்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் என்பது பொருளாகும். ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் என்பது தவறு.

7

”தமிழ்நாட்டில் கலையைக் காப்பது நமது திரைப்படங்கள்.”
“முக்காற் பங்கு ஜனத்தொகை திரைப்படக்கொட்டகைகளில் இருக்கின்றன” – தவறு

சரி :
தமிழ்நாட்டில் கலையைக் காப்பவை நமது திரைப்படங்கள்
முக்காற் பங்கு ஜனத்தொகை திரைப்படக்கொட்டகையில் இருக்கிறது ( ஒருமை எழுவாய்)


8

”மோடி தன் தாய் நாட்டின் மதிப்பை அமெரிக்காவில் உயர்த்தினார்”

மோடி தம் தாய் நாட்டின் மதிப்பை அமெரிக்காவில் உயர்த்தினார்.

மரியாதைக்காக  அல்லது உயர்வுக்காக ( மரியாதைப் பன்மை) “ஆர்” விகுதி சேர்க்கும்போது வினைமுற்றும் பலர்பால் வினைமுற்றாகவே இருக்கவேண்டும்.

பி.கு : மோடி மேல் மரியாதை இல்லதவர்கள் காந்தி, அம்பேத்கார், மன்மோகன் சிங் என்று பெயர் மாற்றிக்கொள்ளவும்.

9

”ஐம்பத்தி மூன்று,  சக்களத்தி, சின்னாபின்னம், சுவற்றில், நிச்சயதார்த்தம், ரொம்ப, வாய்ப்பாடு, வியாதியஸ்தர், வெண்ணை,வெய்யில், ஒருவள், அருகாமை, உத்திரவு, கண்றாவி, பண்டகசாலை, மடப்பள்ளி, மாதாமாதம்” – தவறு


ஐம்பத்து மூன்று, சகக்களத்தி, சின்னபின்னம், சுவரில், நிச்சியதார்த்தம்,  நிரம்ப, வாய்பாடு, வியாதிஸ்தர், வெண்ணெய்,  வெயில்,  ஒருத்தி, அருகில், உத்தரவு, கண்ணராவி, பண்டசாலை, மடைப்பள்ளி, மாதம்மாதம்”- சரி


ஒரு இலக்கண ஜோக்

ஒரு அறிஞருக்கு இலக்கண சுத்தமாகப் பேசுபவர்களை மிகவும் பிடிக்கும். மாற்றிப் பேசுபவர்களைக் கண்டால் கோபப்படுவார்.
ஒருநாள் இரவில், அவர் ஒரு கிண்ற்றில் விழுந்து விட்டார். உள்ளே தண்ணீர் இல்லை. அடிப்பாகத்தில் மணல் கிடந்ததால், காயமில்லாமல் தப்பி விட்டார். ஆனால், வெளியே வரும் உபாயம் தெரியவில்லை.
“யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்” என்று ஓலக்குரல் இட்டார். இதை அவ்வழியாகச் சென்ற ஒருவன் இதைக் கேட்டான்.
கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தான். அவனால் தனியாக மீட்க முடியாதென புரிந்து விட்டது. “ஐயா! சற்றுப் பொறுங்கள். ஊருக்குள் சென்று உதவிக்கு ஆட்களைக் கூட்டி வருகிறேன். இருளாக வேறு இருக்கிறது. விளக்கிற்கும் ஏற்பாடு செய்கிறேன்” என்றான்.
நம் அறிஞர்  “தம்பி! நீ பேசியதில் இலக்கணப் பிழை இருக்கிறது. ‘ஆட்களை கூட்டி வருகிறேன்’ என்பது நிகழ்காலம் ‘கூட்டி வருவேன்’ என்றால் தான் எதிர்காலம். எதிர்காலத்தில் நடக்கப் போவதை நிகழ்காலமாக்கி விட்டாயே,” என்றார்.
“சரி சாமி! முதலில், எப்படி பேச வேண்டும் என்று இலக்கண வல்லுநர்களிடம் போய் கற்றுக் கொண்டு, அதன் பிறகு ஆட்களைக் கூட்டி வருகிறேன்,” என சொல்லி விட்டு போயே போய்விட்டான்....................

இதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம். வழக்கச்சொல்லில் இலக்கணப்பிழை நேரிடுவது தாராளமாகிவிட்டது.....

 https://www.nhm.in/shop/elavasam.html

 http://www.tamilpaper.net/?cat=24

 http://kavimagudeswaran.blogspot.in/2013_10_01_archive.html

 http://www.tamilpaper.net/?tag=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

அ.கி. பரந்தாமனாரின்
”நல்ல தமிழ் எழுதவேண்டுமா “