புதன், 7 அக்டோபர், 2015

தமிழில் எழுதலாம் வாங்க..


மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். நம்ம தமிழ் மொழி எழுத்து வழக்கில் ஒற்று என்னும் மெய்யெழுத்து மிகும் இடங்கள் பற்றியும்,மிகா இடங்கள் பற்றியும் அறிந்து கொள்வோம். 
பகுதி -1 ஒற்று மிகும் இடங்கள் – பொது விதி
  1. க, ச, ட, த, ப, ற என்கிற வல்லின எழுத்துக்களோடு துவங்கும் வார்த்தைகளுக்கு முன்பு மட்டுமே ஒற்றெழுத்து வரும். இதில் ட, ற என்கிற எழுத்துக்களோடு பொதுவாக வார்த்தைகள் துவங்காது என்பதால் க, ச, த, ப  மட்டுமே கவனிக்கவேண்டியவை.
  2. ஆகவே ஒற்று என்றால் க,ச,த,ப என்கிற வல்லின எழுத்துக்களின் வேர்களான க், ச், த், ப்  என்ற நான்கு மெய்யெழுத்துகள் மட்டுமே.
  3. எனவே ஒற்று மிகும் இடங்கள் என்று இந்தப் பகுதியில் நாம் விவாதிக்கப்போவது இரண்டு வார்த்தைகளுக்கு இடையே ( முதல் வார்த்தை , இரண்டாம் வார்த்தை) க்,ச்,த்,ப் வரும் இடங்களை மட்டுமே.
  4. க, ச, த, ப என்ற எழுத்துக்களில் துவங்கும் சொல் வருமொழியாக ( The following word) இருந்தால் மட்டுமே முறையே க், ச், த், ப், ஆகிய ஒற்றெழுத்துகள் மிகும். க என்றால் – ‘க’ முதல் ‘கௌ’ வரை, இவ்வாறே ச, த, ப என்னும் எழுத்துகளுக்கும்.


விதி’ 1/35

“ஓரெழுத்துச் சொற்களுக்குப் பின் ஒற்று மிகும். ”
அதாவது முதல் வார்த்தை ஓரெழுத்துச் சொல்லாய் இருந்து,  இரண்டாம்  வார்த்தை  க, ச, த, ப  ஆகிய வல்லின எழுத்துக்களில்  ஆரம்பித்தால் இரண்டுக்கும் இடையே க், ச், த், ப்  ஆகிய ஒற்று மிகும்.
உதாரணங்கள் :
பூ+பறித்தாள் – பூப்பறித்தாள்
தீ+ பிடித்தது – தீப்பிடித்தது
கை+ குழந்தை – கைக்குழந்தை


விதி – 2
”அரை, பாதி, எட்டு, பத்து ஆகிய எண்களுக்குப் பின்னல் மட்டும் ஒற்று மிகும்.” மற்ற எண்களுக்கு மிகாது.

அதாவது முதல் வார்த்தை அரை, பாதி, எட்டு , பத்து என்று முடிந்து அடுத்த வார்த்தை க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துடன் துவங்கினால், இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும்.

உதாரணம் : அரைப்பக்கம், பாதித் துணி, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, எட்டுக்கட்டுகள், பத்துச்செய்யுள்கள்.


விதி – 3

தமிழ் மாதங்களின் பெயர்கள் பின்னால் ஒற்று மிகும்

அதாவது முதல் வார்த்தை தமிழ் மாதங்களின் பெயராய் இருந்து அடுத்த வார்த்தை க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துடன் துவங்கினால், இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும்.

உதாரணம் : தைப் பொங்கல், ஆடிப் பட்டம், மார்கழித் திங்கள்


விதி 4

தனி எழுத்தும் ( குற்றெழுத்து) அதனுடன் இணைந்து “ஆ” என்ற ஓசையுடன்  முடிகிற வார்த்தையின் பின்னால் ஒற்று மிகும்.

அதாவது ஒரு தனி எழுத்தும் ஆ என்கிற ஓசையுள்ள எழுத்தும் கொண்ட வார்த்தை முதலில் வந்து, அடுத்த வார்த்தை க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துடன் துவங்கினால், இரண்டுக்கும் இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும்.

உதாரணங்கள் : கனாக்கண்டேன், ( கனா + கண்டேன்) சுறாத்தலை ( சுறா + தலை) நிலாப்பயணம் ( நிலா + பயணம்)


விதி – 5

அ, இ, எ + அந்த, இந்த, எந்த, + அங்கு இங்கு, எங்கு, +அப்படி, இப்படி, எப்படி, +அவ்வகை, இவ்வகை, எவ்வகை, + அத்துணை, இத்துணை, எத்துணை முதலிய சொற்கள்  முதல் சொல்லாக இருந்து “க, ச, த, ப”  ஆகிய எழுத்துக்கள் கொண்ட சொல் பின்னால் வந்தால் இரண்டுக்கும் இடையே  க், ச், த், ப்  ஆகிய ஒற்று மிகும்.
உதாரணங்கள்:
அக்குடம், இச்செடி, எப்பக்கம்
அந்தச் செடி, இந்தக் குழந்தை, எந்தப் பாடம்
அங்குச் சென்றான், இங்குப் போகாதே, எங்குக் கேட்டாய்
அப்படிப் பேசு, இப்படிச் சொல், எப்படித் தந்தாய்


விதி – 6

திரு, நடு, முழு, விழு, பொது, அணு, புது, ஆகிய    இச்சொற்களுக்குப் பின் ஒற்று மிகும்.

அதாவது முதல் வார்த்தை மேற்கண்ட வார்த்தைகளா இருந்து,  அடுத்த வார்த்தை க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துக்களுடன் துவங்கினால், இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும்.

உதாரணங்கள் : திருக்கோயில், நடுத்தெரு, முழுப்பேச்சு, விழுப்பொருள், பொதுப்பணி, புதுக்கல்வி, அணுக்குண்டு ( யெஸ் யுவர் ஆனர்.. நாம அப்படிச் சொல்றதில்லையே தவிர அணுக்குண்டுதான் இலக்கணப்படி சரி)

முழுசா ’உ’ என்கிற ஓசையோடு முடியற இந்த வார்த்தைகளுக்கு இலக்கண ரீதியான பெயர்  முற்றியலுகரம்.


விதி – 7
முக்கியமான விதி இது.

சொல்லின் இறுதியில் குறுக்கப்பட்ட ‘உ’ ஓசையுடைய வார்த்தைகள் வந்தால்  ஒற்று மிகும். இந்தச் சொற்கள் – கு,சு,டு, து,பு, று ஆகிய எழுத்துக்களில் முடியும். இதற்கு குற்றியலுகரம் என்று பெயர்.

இந்த கு,சு,டு, து, பு, று என்கிற இறுதி எழுத்தின் முன்னால் வல்லின மெய் எழுத்துக்களான க், ச், ட், த், ப், ற்  வரவேண்டும் என்பது இரண்டாவது அவசியம். இப்படி வந்தால் அதற்கு வன் தொடர்க் குற்றியலுகரம் என்பது பெயர்

உதாரணங்கள் :
மக்கு, தச்சு, செத்து, உப்பு, கற்று போன்ற சொற்கள்.

ஆக, இந்த விதியை இலக்கண முறையில் சொல்லவேண்டுமென்றால் ;
”வன் தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் முதலில் வந்து, ‘க,ச,த,ப எழுத்துகளோடு துவங்கும் சொற்கள் பின்னால் வந்தால் இரண்டுக்கும் இடையே ஒற்று மிகும்.”
உதாரணங்கள் :
மக்குப் பையன்
தச்சுத் தொழில்
உப்புக் கடை
விட்டுச் சென்றார்


விதி – 8

ஏழாம் விதியின் விதிவிலக்கு இது.

வன் தொடர்க் குற்றியலுகரம் மட்டுமல்லாமல்  விதிவிலக்காய் ஒரு சில மென் தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்குப் பின்னும் ஒற்று மிகும்.

அதாவது சொல்லின் இறுதியில் குறுக்கப்பட்ட ‘உ’ ஓசையுடைய வார்த்தைகள் வரும். இந்தச் சொற்கள் – கு,சு,டு, து,பு, று ஆகிய எழுத்துக்களில் முடியும்.

இந்த கு,சு,டு, து, பு, று என்கிற இறுதி எழுத்தின் முன்னால் மெல்லின மெய் எழுத்துக்கள் வந்தால் அதற்கு மென் தொடர்க் குற்றியலுகரம் என்பது பெயர்.

அதைத் தொடர்ந்து பின்னால் வரும் வார்த்தை க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துக்களில் துவங்கினால் முறையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும்.

உதாரணங்கள்:  பாம்புத் தோல்,  குரங்குக் கூட்டம்,  கன்றுக்குட்டி , மருந்துக்கடை


விதி – 9

’அ’ அல்லது ‘இ’ ன்னு முடியற வார்த்தைக்குப் பின்னால ஒற்று மிகும்.
உதாரணம் – தேடிப் போனார், மெல்லச் சொன்னார், தேடிச் சென்றார், வாடிப் போயிற்று.
அதாவது முன்னால் வர்ற வார்த்தை ‘அ’ அல்லது ‘இ’ சவுண்டோட முடிஞ்சி அதுக்குப் பின்னால வர்ற வார்த்தை க, ச, த, ப என்ற எழுத்துக்களோட ஆரம்பிச்சா இடையில க்,ச்,த்,ப் என்ற ஒற்று மிகும்.
இதுல கவனிச்சீங்கன்னா ரெண்டாவது வார்த்தை எல்லாம் போனார், சொன்னார், சென்றார், போயிற்று அப்பிடின்னு எல்லாம் வினைச் சொல்லா (Verb) இருக்கு.
முன்னால இருக்கற வார்த்தை எல்லாம் தேடி, மெல்ல, வாடி அப்படின்னு பாதியிலேயே நிக்குது. பின்னால வர்ற வினைச் சொல்லோட சேர்ந்தாதான் அர்த்தம் முழுசா வரும். அதெல்லாம் Dependent Verb- அது பேரு ”வினை எச்சம்.”
இலக்கண ரீதியா சொல்லணும்னா – ‘அ’ அல்லது ‘இ’ என்ற ஓசையோடு முடிகிற வினை எச்சத்தின் (அகர இகர ஈற்று வினையெச்சம்) பின்னால் ஒற்று மிகும்.



விதி – 10
”ஆய், போய், ஆக, போக, ” அப்படின்னு முடியற வார்த்தைகளுக்குப்பின்னால் ஒற்று மிகும்
உதாரணம் : கேட்பதாய்க்கூறினான், ( கேட்பதாய் + கூறினான்) சொன்னதாய்ச்சொல்,( சொன்னதாய் + சொல்) போய்த்தேடினார், ( போய் + தேடினார்) இருப்பதாகக்கூறு.( இருப்பதாக + கூறு)
அதாவது முன்னால் வர்ற வார்த்தை ‘ஆய், போய், ஆக, போக’ அப்படின்னு முடிஞ்சி, அதுக்குப் பின்னால வர்ற வார்த்தை க, ச, த, ப என்ற எழுத்துக்களோட ஆரம்பிச்சா இடையில க்,ச்,த்,ப் என்ற ஒற்று மிகும்.
இதுலயும் முந்தய விதி மாதிரி ரெண்டாவது வார்த்தை எல்லாம் ‘ கூறினான், தேடினார்’ அப்பிடின்னு வினைச் சொல்லா (Verb) இருக்கு பாருங்க.
முன்னால இருக்கற வார்த்தை எல்லாம் பாதியிலேயே நிக்குது. பின்னால வர்ற வினைச் சொல்லோட சேர்ந்தாதான் அர்த்தம் முழுசா வரும். அதாவது Dependent Verb- நேற்றைய விதி மாதிரி இதுவும் ”வினை எச்சம்.”
இலக்கண ரீதியா சொல்லணும்னா – ‘ஆய், போய், ஆக, போக’ அப்படின்னு முடிகிற வினை எச்சத்தின் பின் ஒற்று மிகும்.



விதி – 11

ய், ர், ழ் என்கிற எழுத்துகளோடு முதல் வார்த்தை முடிந்து இரண்டாவது வார்த்தை க, ச, த, ப  என்கிற எழுத்துக்களில் துவங்குகிற பெயர்ச்சொல்லாக (Noun) இருந்தால்  இரண்டுக்கும் இடையே க், ச், த், ப் ஆகிய ஒற்று மிகும்.

உதாரணங்கள் ::

மோர்க்குழம்பு, ( மோர் + குழம்பு) தாய்ப் பாசம், ( தாய் + பாசம்) போர்க் களம், ( போர் + களம்) தமிழ்ச் செயலி, தமிழ்த் தாய். ( தமிழ் + தாய்)


விதி – 12

முதல்ல உதாரணத்தைப் பாக்கலாம் : தங்கத் தாமரை, வெள்ளைப் புறா

தங்கம், வெள்ளை இதெல்லாம் என்ன ? தாமரை , புறா இவற்றின் பண்புகள்.
தங்கத்தால் ஆகிய தாமரை, வெள்ளையான புறா.
அதனால இதுக்கு ‘ பண்புத் தொகை’ ன்னு பெயர்.
அதாவது முதல் வார்த்தை ஒரு பண்பை உணர்த்தி,  இரண்டாம் வார்த்தை க, ச, த, ப  ஆகிய வல்லின எழுத்துக்களில் துவங்கினால் இரண்டுக்கும் இடையில் க்,ச்,த்,ப் ஆகிய ஒற்றெழுத்து மிகும்

தொகைன்னா  என்னா ?

தங்கத்தால் ஆகிய தாமரை,   வெள்ளையான தாள்  என்கிற வார்த்தைகளில் ’ஆல்’ ‘ ஆன’  அப்படிங்கற வார்த்தைகள் மறைஞ்சி இருக்கு. அப்படி மறைஞ்சிருந்தா அதுக்கு இலக்கண ரீதியா ’ தொகை’ அப்படின்னு பேரு. அவ்வளதான் சமாச்சாரம்.



விதி – 13

உதாரணம் – மல்லிகைப்பூ ( மல்லிகை + பூ)

பூ என்பது பொதுப் பெயர். மல்லிகை சிறப்புப்பெயர். இரண்டும் ‘பூ’ வுடன் தொடர்புடையதுதான். மல்லிகைன்னு சொன்னாலே பூ தான். இப்படி இரண்டு பண்புகளைக் கொண்ட சொற்களுக்கு  ’இருபெயரொட்டுப் பண்புத் தொகை.’ ன்னு பேரு.

இங்கே இரண்டாம் வார்த்தை  க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துக்களில் துவங்கினால்  க், ச் த், ப், ஆகிய ஒற்று மிகும்.

இன்னும் சில உதாரணங்கள் : கோடைக்காலம், மல்லிகைப்பூ, மழைக்காலம், செவ்வந்திப்பூக்கள்



விதி – 14

உவமைகள் வர்ற இடங்களிலே ஒற்று மிகும்

உதாரணம் : தாமரைக்கண் ( தாமரை + கண்), முத்துப்பல் ( முத்து + பல்)  தாமரையைப் போல இருக்கற கண் , முத்து மாதிரி இருக்கற பல்.

அதாவது முதல் வார்த்தை ஒரு உவமையா இருந்து இரண்டாவது வார்த்தையா க,ச,த,ப  ஆகிய வல்லின எழுத்து வந்தா  இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும்.

இலக்கண ரீதியா சொல்லணும்னா “ உவமைத் தொகையில் ஒற்று மிகும்”

தொகைன்னா  என்னான்னு உங்களுக்குத் தெரியும்..

தாமரை போன்ற கண், முத்து போன்ற பல்  அப்படிங்கறதுல  ”போன்ற” அப்படிங்கற வார்த்தை மறைஞ்சி இருக்கு. அப்படி மறைஞ்சிருந்தா அதுக்கு இலக்கண ரீதியா ’ தொகை’ அப்படின்னு பேரு.
இன்னொண்ணு.  உவமை மறையாமல் வந்தாலும் ஒற்று மிகும்
உதாரணம் : மயில் போலப் பொண்ணு ஒண்ணு.



விதி 15

ட, ற  என்று முடியும் சொற்களுக்குப் பின் ஒற்று மிகும்
முதல் வார்த்தை ட, டு ஆகிய எழுத்துக்களுடன் முடிந்து,  அடுத்த வார்த்தை க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துக்களுடன் துவங்கினால், இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும்.

உதாரணங்கள் :
தமிழ்நாடு + கலை = தமிழ்நாட்டுக்கலை
வீடு + சோறு  = வீட்டுச் சோறு
ஆறு + தண்ணீர் = ஆற்றுத்தண்ணீர்
கிணறு + தவளை = கிணற்றுத் தவளை



விதி – 16 

ஊர்ப்பெயர்களை அடுத்து கட்டாயம் ஒற்று மிகும்.
அதாவது ஊர்ப்பெயர் முதல் வார்த்தையாய் இருந்து இரண்டாம் வார்த்தை க,ச,த,ப ஆகிய வல்லின எழுத்துக்களோடு துவங்கினால் இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்றெழுத்துகள் மிகும்.

சென்னைக் கடற்கரை. குமரிக்கடல். திருச்சிக் காவிரி.


விதி – 17

பெயரெச்சங்களின் ( Relative Verbal Form) பின் ஒற்று மிகாது.

உதாரணம் : உறங்கிய பையன் – உறங்கிய என்பது குறைந்த வினைச்சொல். அதனால் அது எச்சம் எனப்படும். உறங்கிய என்னும் எச்சம் பையன் என்ற பெயரைச் சார்ந்திருப்பதால் அது பெயரெச்சம் எனப்படும்.

இங்கே உறங்கிய என்ற பெயரெச்சத்திற்குப் பின் க,ச,த,ப ஆகிய வல்லின எழுத்துக்கள் வந்தாலும் ஒற்று மிகாது.

மேலும் உதாரணங்கள் : படித்த பையன், ஓடுகிற குதிரை, பெரிய பெட்டி, நல்ல பாம்பு, நல்ல குழந்தை.



விதி – 18

விதி எண் 17 இல் பெயரெச்சத்தின் பின் ஒற்று மிகாது என்று பார்த்தோமில்லையா ? இன்னைக்கு அதோட விதிவிலக்கு விதி பார்ப்போம்

”ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் ஒற்று மிகும்.”

ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் – இதுக்கு பல்லு விளக்காம ஈறு கேட்டுப்போயிருந்தா எதிர்ல இருக்கறவங்க மேல பேசும்போது எச்சை தெறிக்கும்ங்கறாமாதிரி தோணினாலும் அதற்கு கடைசி எழுத்து மறைந்திருக்கும் பெயரெச்சம் என்று அர்த்தம். ஈறு ( இறுதி) கெட்ட ( மறைந்த)  எதிர்மறை ( opposite) பெயரச்சம் (Relative Verbal form) –

அதாவது சொல்லின் இறுதியில் கடைசி எழுத்து மறைந்திருக்கும் பெயரெச்ச சொற்கள் வந்து, இரண்டாவது வார்த்தை க,ச,த,ப ஆகிய வல்லின எழுத்தோடு ஆரம்பித்தால் இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும்.

உதாரணம் :
அறியா + பிள்ளை = இந்த வார்த்தையின் முழுவடிவம் ”அறியாத பிள்ளை”  ஆனால் அறியாத வின் இறுதியில் “த” மறைந்திருக்கிறது. அதனால் இங்கே ஒற்று மிகுந்து அறியாப் பிள்ளை என்று வரும்

தீரா + துன்பம் = தீராத  என்பது முழுமையான சொல். அதில் த கெட்டிருக்கிறது. அதனால் தீராத்துன்பம் என்று ஒற்றுமிகும்.

ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் அப்படிங்கற பயமுறுத்துகிற சொற்பிரயோகத்துக்குப் பின்னால் எவ்வளவு எளிதான விதி ஒளிந்திருக்கிறது பாருங்கள்.

தமிழ் இலக்கணம்  கீதே அது சொம்மா பிலிம் காட்ற மெட்ராஸ் ரவுடி மாதிரி. பயந்து ஒளிஞ்சா நாம அம்பேல் ஆயிருவோம். தம் கட்டி எய்த்து நிக்கணும்.   ”தட்னா தாராந்துரும்.



விதி – 19

அது, இது, எது,
அவை, இவை, எவை,
அன்று, இன்று, என்று,
அத்தனை, இத்தனை, எத்தனை,
அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு,
அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு
போன்ற சொற்களுக்குப் பின் ஒற்றெழுத்து மிகாது.

உதாரணங்கள் : அது பெரியது,  இவை சென்றன , எத்தனை பூக்கள், அவ்வளவு பருப்பு, இவ்வாறு கூறினான்.



விதி 20 – 

இரு வட மொழிச் சொற்கள் சேர்ந்து வரும்தொடர்களில் வலி மிகாது

ஆதிபகவன், தேசபக்தி



விதி – 21 

ஆ, ஓ, யா என்னும் கேள்வி கேட்கும் வினாக்களுக்குப் பின் வலி மிகாது.

உதாரணங்கள் : அவனா போனான் ? அவனா சொன்னான் இருக்காது ? தம்பியோ கேட்கிறான்.



விதி – 22 

வினைத்தொகையில் ஒற்று மிகாது.
உதாரணம் : சுடுகாடு
வினைச் சொல்லின் பகுதியும்( சுடு- சுடுகின்ற) பெயர்ச்சொல்லும் ( காடு) சேர்ந்து பெயரெச்சத் தொடர் போல வருவது வினைத்தொகை

இன்னும் சில உதாரணங்கள் :  உரைகல், குடிதண்ணீர்,



  
விதி – 23 

வெற்றிலை பாக்கு

சொல்லிப்பாத்தா வெற்றிலைப் பாக்கு ன்னு வரணும் போல தோணுதில்ல ? ஆனா இங்க ஒற்று மிகாது.

வெற்றிலை பாக்கு அப்படிங்கறதை முழுமையாகச் சொன்னால் வெற்றிலையும் பாக்கும் அப்படின்னு வரும். இங்கே ‘உம்’ மறைந்திருக்கிறது. அப்படி மறைந்தால் அங்கே ஒற்று மிகாது. அதாவது இரண்டு பொருள்களை பட்டியலிட்டு அதில் உம் என்ற வார்த்தை வராமல் மறைந்தால் அங்கே ஒற்று மிகாது.

இதுக்கு இலக்கண ரீதியா ‘ உம்மைத் தொகைன்னு பேரு. தொகைன்னா மறைஞ்சி இருக்கறதுன்னு. இங்கே ‘உம்’ மறைந்திருக்கிறது.

உதாரணங்கள் : இட்டிலி சாம்பார், யானை குதிரை



விதி – 24 

அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி இரண்டிலேயும் ஒற்று மிகாது.
அடுக்குத் தொடர் உதாரணம் – மெல்ல மெல்ல, தாவி தாவி – இந்த தொடரில் இருக்கும் இரண்டு வார்த்தைகளை பிரித்தாலும் பொருள் வரும்.

இரட்டைக் கிளவி அப்படி இல்ல. பிரித்தால் பொருள் வராது. ஜீன்ஸ் படப் பாட்டு கேட்டிருப்பீங்க.

உதாரணம் – சல சல என்று ஓடிய தண்ணீர், விறு விறு என்று நடந்தான்,

அடுக்குத் தொடரோ  இரட்டைக் கிளவியோ இரண்டிலும் ஒற்று மிகாது.



விதி – 25 

சிறு, சிறிய , பெரிய  ஆகிய சொற்களுக்குப் பின் ஒற்று மிகாது

சிறு துரும்பு, சிறிய சிக்கல், பெரிய கொடுமை



விதி – 26  

இன்னைக்கு டாஸ்மாக் விதி – ’கள்’  சேர்ந்தால் உடம்பு வலி மிகாதது போல
(வன்தொடர்க் குற்றியலுகரச்) சொற்களின் பின் “ கள்” “  என்னும் விகுதி சேரும்போது ’க்’ என்கிற ஒற்று  மிகுதல் அவசியமில்லை.

உதாரணங்கள் : வாக்குகள், வாழ்த்துகள், தோப்புகள், எழுத்துகள்,



விதி 27 

உபரி விதிகளை இங்கே ஒன்றாய்ப் போட்டிருக்கிறேன்.

* கூப்பிடுகின்ற விளிப்பெயரின் பின் (விளித்தொடர்) ஒற்று மிகாது
உதாரணம் : தம்பி போ. ! தம்பி பார்.

* ஏவல் வினைமுற்றின் ( Imperitive Verb) பின்னும் ஒற்று மிகாது
உதா : போ தம்பி

* வியங்கோள் வினை முற்று ( optative verb) பின் ஒற்று மிகாது. இது மரியாதையாய் கட்டளையிட, சபிக்க, வாழ்த்த, வேண்டிக்கொள்ள பயன்படும்.
உதா : வீழ்க கொடுமை

* வினைமுற்றுத் தொடரின் பின் ஒற்று மிகாது
உதா : பாடியது பறவை

* முன்னிலை வினைமுற்றின் பின் ஒற்று மிகாது
வருதி குமர

* முற்றுவினைக்குப் பின் பின் வலி மிகாது-
வாரா குதிரைகள்.


விதி – 28


எழுவாய்த் தொடரில் ஒற்று மிகாது. (  முதலாம் வேற்றுமை உருபு)

எழுவாய் அப்படின்னா ?
ஒரு வாக்கியத்தின் அமைப்பில் மூன்று பகுதிகள் இருக்கும். அவை :
எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்.

யார் செய்தது என்ற கேள்விக்கு விடையளிப்பது – எழுவாய்
என்ன செயல் செய்யப்பட்டது என்பதற்கு விடை தருவது – பயனிலை
எதைச் செய்தார்கள் என்ற கேள்விக்கு விடை தருவது – செயப்படுபொருள்

உதாரணம் ;  கமலஹாசன் கோயில் சென்றார்,
கமலஹாசன் – எழுவாய்
சென்றார் –  பயனிலை
கோயில் – செயப்படுபொருள்

இது போன்ற எழுவாய்த் தொடரில், இரண்டாம் வார்த்தை க,ச,த,ப என்று துவங்கினாலும் ஒற்று மிகாது.

உதாரணங்கள் :

துணி கிழிந்தது
கிளி பேசியது
கோழி கூவியது
நாய் தின்றது



விதி – 29

‘ஐ’ என்கிற ஓசையோடு முடிகிற வார்த்தைகளின் பின்  ஒற்று மிகும். ( இரண்டாம் வேற்றுமை உருபு)

அதாவது முதல் வார்த்தை ’ஐ’ என்கிற ஓசையுடன்  முடிந்து,  அடுத்த வார்த்தை க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துக்களுடன் துவங்கினால், இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும்.

உதாரணங்கள் :   பூனையைப் பார்த்தான், உன்னைக் கேட்டால்,  அவனைப் பிடித்தால்


இதுக்கு விதிவிலக்கு ஒண்ணு இருக்கு. முரளி போடற தூஸ்ரா போல.

‘ஐ’ மறைஞ்சி வந்தா ஒற்று மிகாது.

உதாரணம் –  மான் கண்டேன்.

மானை+ கண்டேன் அப்படின்னு எழுதாம, மான் கண்டேன்னு எழுதினா அப்ப ஒற்று வராது. அதே போல மயிலைக் கண்டேன், மயில் கண்டேன்,

ஓக்கேவா ?

ஐ.. அதுக்குள்ள சந்தோஷப்பட்டா எப்பிடி.. இன்னும் இருக்கு. இது தீஸ்ரா.

சில சமயம் ’ ஐ’ மறைந்து அதோட சில வார்த்தைகளும் கூட மறைந்து வரும். உதாரணம் தண்ணீர்த் தொட்டி.  அதாவது தண்ணீரை உடைய தொட்டி.  இங்க ஐ மட்டும் இல்லாம ‘உடைய’ அப்படிங்கற வார்த்தையும் மறைந்திருக்கு. அப்படி மறைஞ்சிருந்தா அங்க ஒற்று மிகும்.

இன்னொரு உதாரணம் :

யானை + பாகன் அதாவது யானையை ஓட்டும் பாகன் = யானைப் பாகன்
இங்க ஐ மறைஞ்சிருக்கு கூடவே ஓட்டும் என்கிற வார்த்தையும் மறைஞ்சிருக்கு பாருங்க.

இன்னும் சில உதாரணங்கள் :
தேர்ப் பாகன் ( தேரை ஓட்டும் பாகன்) தயிர்க்குடம், ( தயிரை உடைய குடம்) காய்கறிக்கடை, சிற்றுண்டிச்சாலை..

இலக்கண ரீதியா இதுக்கு ‘உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை ” அப்படின்னு பேர்.  அதாவது உருபும் ( ஐ) அதோட பயனும் (உடைய) இரண்டும் தொக்க (இணைந்து) தொகை ( மறைந்து வருவது)
என்ன..?  ரொம்ப பேஜாரா இருந்தா இலக்கணரீதியான வரியை மறந்துடுங்க.





விதி – 30 

‘கு’ என்கிற ஓசையோடு முடிகிற வார்த்தைகளின் பின்  ஒற்று மிகும். (நான்காம் வேற்றுமை உருபு.)


அதாவது முதல் வார்த்தை ’கு’ என்கிற ஓசையுடன்  முடிந்து,  அடுத்த வார்த்தை க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துக்களுடன் துவங்கினால், இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும்.

உதாரணங்கள் : அவனுக்குத் தா , கடைக்குப் போனான்

இதிலயும் ஒரு தூஸ்ரா
’கு’ மறைஞ்சு வந்தா,   அஃறினைப் பெயர்கள் முதல் வார்த்தையா இருந்தா மட்டும்தான் ஒற்று மிகும்.  உயர்திணைப் பெயர்களின் பின் வலி மிகாது.

உதாரணம் : வேலி+ கால் = வேலிக்கால்

இங்கே வேலிக்குக் கால். ‘கு’ மறைஞ்சு வந்திருக்கு. வேலி அஃறிணைப் பெயர். அதனால ஒற்று மிகும்

உயர்திணை உதாரணம் : பொன்னி + கணவன் அதாவது பொன்னிக்குக் கணவன் என்பதை பொன்னி கணவன் என்று எழுதினால் ஒற்று மிகாது

இப்ப தீஸ்ரா

’கு’ என்கிற உருபும் மறைந்து, அதனுடன் இணைந்து வரவேண்டிய வார்த்தையும் மறைந்தால் ஒற்று மிகும் ( உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை)

உதாரணம் : குழந்தை+பால் = குழந்தைப் பால்  கோழி+தீனி = கோழித் தீனி



விதி – 31 

ஆல், ஆன், ஒடு ஓடு  என்கிற வார்த்தைகள் ஒரு சொல்லின் இறுதியில் வந்தால் ஒற்று மிகாது (மூன்றாம் வேற்றுமை உருபு)

உதாரணம் – கத்தியால் குத்தினான், அவனோடு சுத்தினான்.


ஆனால்  ஆல், ஆன், ஒடு ஓடு  என்கிற உருபுகள் மறைந்து, அதனுடன் இணைந்து வரவேண்டிய வார்த்தையும் மறைந்தால் ஒற்று மிகும் ( உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை)

உதாரணம் :  வெள்ளித் தட்டு, பட்டுச் சேலை ( வெள்ளியால் செய்யப்பட்ட தட்டு, பட்டால் நெய்யப்பட்ட சேலை) பித்தளைக் குடம், மோர்க்குழம்பு



விதி – 32

இல், இன், இருந்து ஆகிய வார்த்தைகள் ஒரு சொல்லின் இறுதியில் வந்தால் ஒற்று மிகாது (ஐந்தாம் வேற்றுமை உருபு)

உதாரணம் : தாய்மொழியில் கூறு

இல் இன் இரண்டும் மறைந்து வந்தாலும் ஒற்று மிகாது

தாய்மொழி கூறு

ஆனால்  இல், இன், இருந்து  ஆகிய உருபுகள் மறைந்து, அதனுடன் இணைந்து வரவேண்டிய வார்த்தையும் மறைந்தால் ஒற்று மிகும் ( உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை)

உதாரணம் :  பழச்சாறு ( பழத்தில் பிழிந்த சாறு)



விதி – 33 

‘அது, ஆது,  உடைய ஆகிய வார்த்தைகள் முதல் வார்த்தையின்  இறுதியில் வந்தால் ஒற்று மிகாது (ஆறாம் வேற்றுமை உருபு)

உதாரணங்கள் : நண்பனது கட்டில், என்னுடைய கைகள்

இந்த உருபுகள் மறைந்து வந்து ( வேற்றுமைத் தொகை) முதலில் வரும் சொல் அஃறிணையாய் இருந்தால் மட்டும் வலி மிகும். அதாவது- முதலில் வரும் சொல், உருபுகள் மறைந்திருக்கும் அஃறிணைச் சொல்லாய் இருந்து பின் வரும் சொல் க,ச,த,ப ஆகிய வல்லின எழுத்துக்களின் துவங்கினால், இடையே க்,ச்,த்,ப் ஆகிய ஒற்று மிகும்

உதாரணம் : கிளிப்பேச்சு ( கிளியினது பேச்சு) குருவித்தலை, கிளிக்கூடு, நாய்க்குட்டி



விதி – 34 

கண், இடம்- என்று முடியும் வார்த்தைகளுக்குப் பிறகு ஒற்று மிகாது (ஏழாம் வேற்றுமை உருபுகள்)

உதாரணம் : மலையின்கண் திரிவோர்.


இந்த உருபுகள் மறைந்து வந்தாலும் ஒற்று மிகாது

உதாரணம் : மலை திரிவோர்

ஆனால் இந்த உருபுகள் மறைந்து, இதனுடன் இணைந்து வரவேண்டிய வார்த்தையும் மறைந்து வந்தால் ஒற்று மிகும் ( உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை)

உதாரணம் : மலைக்கோவில் ( மலையின் கண் எழுந்த கோவில்)




விதி – 35 

அழைப்பது அல்லது விளிப்பது போல வரும் சொல் இது. இந்த ”விளி வேற்றுமை” க்கு ஒற்று மிகாது. (எட்டாம் வேற்றுமை உருபு)

உதாரணம் : தலைவா போதும், அம்மா பாடு


குறிப்பு – 36

பழக்கம், வழக்கம் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் ?

ஒருவர் தன் அளவில் தனி மனிதனாய் ஏற்படுத்திக்கொள்வது- ’பழக்கம்’
ஒரு சமுதாயமாய், ஊராய் நாடாய் செய்வது வழக்கம்

காலையில எழுந்ததும் பல்லு விளக்காம காபி சாப்படறது என் ‘பழக்கம்’.
ஒவ்வொரு தேர்ந்தலிலும் அரசியல்வாதிகள் சொல்வதை நம்பி ஏமாந்து ஓட்டுப் போடுவது மக்களின் வழக்கம்.



குறிப்பு -37

முதலிய,  ஆகிய, போன்ற – இந்தச்  சொற்களின் பயன்பாட்டில் வித்தியாசம் என்ன ?

எதையாவது பட்டியல் இடும்போது அது முழுமையான பட்டியலாக இல்லாவிட்டால் முதலிய என்கிற வார்த்தைப் பிரயோகம் வரும்.
பட்டியல் முழுமையானதாய் இருந்தால் ‘ஆகிய’ வரும்.
போன்ற என்ற வார்த்தை, அதற்கு முன்னால் சொல்லப்பட்டவை  அதன் உவமையாகவோ, நிகரானவைகளைச் சுட்டிக்காட்டப்  பயன்படும்.

உதாரணம் :
  1. மன்மோகன் சிங், நரசிம்ம ராவ், வாஜ்பாய் முதலியோர் இந்தியாவின் திறமையான பிரதம மந்திரிகளாய் இருந்தார்கள். ( இவர்களைத் தவிர இன்னும் சிலரும் திறமையான  பிரதமர்களாய் இருந்தார்கள் என்று அர்த்தம்)

  1. முதலமைச்சர் பதவியிலிருந்த லாலு யாதவ், ஓம் பிரகாஷ் சௌத்தாலா, ஷிபு சோரன், மது கோடா, எடியுரப்பா, பிரகாஷ் சிங் பாதல், ஜெயலலிதா ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகச் சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள். ( இவர்களைத் தவிர வேறு எந்த முதலமைச்சரும் சிறைத்தண்டனை அனுபவிக்கவில்லை என்று அர்த்தம்)

  1. காந்தி , காமராஜ் போன்ற அரசியல்வாதிகள் இனி இந்திய அரசியலில் கிடைக்கமாட்டார்கள்.



குறிப்பு  38
ஓரு &  ஓர்
சொல் உயிரெழுத்தில் துவங்கினால் ஓர் வரவேண்டும்.
இல்லையென்றால் ஒரு.

உதாரணங்கள் :  ஓர் உதவி, ஓர் அழைப்பு , ஒரு விண்ணப்பம், ஒரு வீடு



குறிப்பு  39

வினாயகரா  விநாயகரா ?
வி+நாயகர்  அதாவது தமக்கு மேல் தலைவன் இல்லாதவன் என்பது இதன் பொருள். அதன்படி விநாயகர் என்பதே சரி. வினாயகர் என்ற எழுதினால் அதன் அர்த்தம் சிதைந்து விடும்.
அதே முறையில்
இராமன் + நாதன், தேவன் + நாதன் என்றே பெயர்களைப் பிரிக்கவேண்டும். ( இராம + நாதன் என்று பிரிப்பது வடமொழி முறை என்கிறார் அ.கி.பரந்தாமனார்)
அதனால் இராமனாதன் என்பது தவறு. இராமநாதன், தேவநாதன் என்பதே சரி.

இயக்குனர் ? இயக்குநர்
ஓட்டுனர் ஓட்டுநர்
எது சரி ?

சொக்கன் எழுதுகிறார்

ஒரு வினைச்சொல், அதைச் செய்பவர் இவர் என்கிற அர்த்தத்தில் பெயர்ச்சொல்லாக மாறும்போது ‘நர்’ விகுதி வரும்.

உதாரணமாக, அனுப்புதல் என்பது வினைச்சொல் (Verb), அதை அனுப்புகிறவர் என்ற பொருளில் சொல்லும்போது ‘அனுப்புநர்’ என்று மாறும்.
இன்னும் சரியாகச் சொல்வதென்றால், வினைச் சொல் ==> கட்டளைச் சொல் (அது உகரத்தில் இருக்கவேண்டும்) + நர்.
இன்னும் சில உதாரணங்கள்:
  • ஆட்சி செய்தல் ==> ஆள் / ஆளு ==> ஆளுநர்
  • பெறுதல் ==> பெறு ==> பெறுநர்
  • ஓட்டுதல் ==> ஓட்டு ==> ஓட்டுநர்
  • இயக்குதல் ==> இயக்கு ==> இயக்குநர்

கவிஞர் மகுடேசுவரன் எழுதுகிறார் :
பெயர்ச்சொற்களில் ஞர், நர், னர் – இம்மூன்றும் எங்கெங்கு எப்படியெப்படி வரும் என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் இவை தொடர்பாக எழும் குழப்பங்களை எளிதில் தீர்க்கலாம்.

எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள் !
அறிஞர், பொறிஞர், கலைஞர், கவிஞர், வலைஞர்.
இயக்குநர், அனுப்புநர், பெறுநர், ஓட்டுநர்.
உறுப்பினர், பொறுப்பினர், படையினர், அணியினர்.
ஞர்-க்கு முன்னொட்டுவது பெரும்பாலும் பெயர்ச்சொல்லாக இருக்கிறது.
நர்-க்கு முன்னொட்டுவது அச்செயலுக்குரிய வினைவேர்ச்சொல்லாக இருக்கிறது. கட்டளையிடுகிறது.
னர்-க்கு முன்னொட்டுவது பெயர்ச்சொல்லாக இருந்து இன்+அர் சேர்வதால் பலர்பால் பெயர்ச்சொல்லாகிறது.

நர் சேர்க்குமிடங்களில் ‘உகர’ ஈற்றில் முடியும் வினைவேர்ச்சொல்லாக இருப்பதையும் கவனிக்கவும் (இயக்கு, அனுப்பு, பெறு, ஓட்டு).



குறிப்பு  40

“ற்” , ட்  ஆகிய எழுத்துக்குப்பிறகு இன்னொரு மெய்யெழுத்து வரக்கூடாது.

பயிற்ச்சி, முயற்ச்சி, வேட்க்கை , மீட்ப்பு – தவறு
பயிற்சி, முயற்சி, வேட்கை, மீட்பு – சரி



குறிப்பு  41

இருவகையாய் எழுதக்கூடிய  சொற்களில் சில :
பவளம் – பவழம்
கோவில் – கோயில்
மதில் – மதிள்
உழுந்து – உளுந்து
மங்கலம் – மங்களம்



குறிப்பு – 42

தண்ணீர் என்பது  தண் ( குளிர்ச்சிபொருந்திய) + நீர்.  எனவே தண்ணீர் என்றாலே குளுமையான நீர் என்றுதான் பொருள். இதற்கு எதிர்ப்பதமான சூடான நீர் –  வெந்நீர் என்பதே.  சுடுதண்ணீர் என்பது தவறான பிரயோகம். தண்ணீர், வெந்நீர் என்பதே சரியானது.



குறிப்பு எண் – 43

Oil என்பது எண்ணெய்.  எண்ணை என்று எழுதுவது தவறு.

எண்ணெய்  என்பது எள்+ நெய். பிசுபிசுப்பான திரவம் எல்லாமே நெய்.  எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய் – எண்ணெய்.  இந்த எண்ணெய் என்பது நாளாவட்டத்தில் ஒரு பொதுப் பெயராகி விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணை என்றெல்லாம் காரணப்பெயர் மறைந்து புதிய பெயர்கள் உருவாகிவிட்டன.

எண்ணை என்று எழுதுவது ‘எண்’ ( Number) ஐ குறிப்பதாகிவிடும். எட்டாம் எண்ணை இரண்டால் வகுத்தால் நான்கு என்று விடை வரும் என்பது போல.

குறிப்பு எண்- 44
ஒருமைக்கு அன்று. பன்மைக்கு அல்ல என்பது விதி

உதாரணம்: இந்தப் பேனா என்னுடையது அன்று.  இந்தப் பேனாக்கள் என்னுடையவை அல்ல

நாம் ’அன்று’ என்கிற வார்த்தையை உபயோகிப்பதில்லை. எல்லாவற்றிற்கும் அல்ல என்று சொல்கிறோம்.

அவன் தன் வீட்டுக்குப் போனான்
அவர் தம் வீட்டுக்குப் போனார் ( மரியாதைப் பன்மையில் தன் என்பது தம் என்றாகும்)

1

”தமிழ் நடிகர்களில் கமலஹாசனே புத்திஜீவி.” – தவறு

தமிழ் நடிகர்களுள் கமலஹாசனே புத்திஜீவி – சரி

ஒப்பிடும்போது “ உள்” விகுதி வரவேண்டும்.


2

” எவ்வளவு முயற்சித்தாலும் கமல் போல் நடிக்க முடியாது” – தவறு


”முயற்சித்தால்” என்னும் சொல் தவறானது. முயற்சி என்பது தொழிற்பெயர். தொழிற் பெயரில் இருந்து முயற்சித்தான் என்று வினைமுற்று உண்டாகாது.

முயற்சி செய்தாலும்  என்றாவது  முயன்றாலும் என்றாவது எழுத வேண்டும்.


3

”பல நண்பர்கள் கமலின் விசிறிகள். சில நண்பர்கள் ரஜினியின் விசிறிகள்.”

நண்பர்கள் பலர்  கமலின் விசிறிகள். நண்பர்கள் சிலர் ரஜினியில் விசிறிகள் என்பதே சரி. ”பல”, “சில” என்பவை அஃறினைப் பன்மைகள்.

4

”இந்த ஓவியம் எத்தனை அழகாய் இருக்கிறது !.”
இந்த ஓவியம் எவ்வளவு அழகாய் இருக்கிறது” என்பதே சரி.

எத்தனை என்பது எண்களைக் குறிக்கும். அழகு, திறமை, தைர்யம் போன்ற பண்புகளுக்கு எவ்வளவு என்றே வருவது முறை . இந்த ஓவியம் எத்துணை அழகாய் இருக்கிறது என்பதும் சரி.(எத்தனை ,எவ்வளவு என்கிற சொற்கள் எண்ணிக்கையை குறிக்கும்.எத்துணை என்பது அளவு ,பண்பு ,நிறம் போன்றவற்றை குறிக்கும் .—ஆதாரம் தமிழண்ணலின் உங்கள் தமிழை தெரிந்து கொள்ளுங்கள் எனும் நூல் (கருப்பம்புலம் பாலாஜி. )


5

”எப்படித் தாய் இருப்பாளோ அவ்வாறு மகள் இருப்பாள்.” – தவறு
“எப்படித் தாய் இருப்பாளோ அப்படி மகள் இருப்பாள்”- சரி

எப்படி, எவ்வாறு, எங்ஙனம், எவ்வளவு, எது  என்று வாக்கியம் தொடங்குமானால் சமநிலை வருவதற்கு “அப்படி, அவ்வாறு, அங்ஙனம், அவ்வளவு, அது என்றே வரவேண்டும்.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”

6

”பிரதி ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் விடுமுறை”

பிரதி என்னும் சொல் வந்தால் ‘தோறும்’ தேவையில்லை.
ஞாயிற்றுக்கிழமை தோறும் என்பதற்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் என்பது பொருளாகும். ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் என்பது தவறு.

7

”தமிழ்நாட்டில் கலையைக் காப்பது நமது திரைப்படங்கள்.”
“முக்காற் பங்கு ஜனத்தொகை திரைப்படக்கொட்டகைகளில் இருக்கின்றன” – தவறு

சரி :
தமிழ்நாட்டில் கலையைக் காப்பவை நமது திரைப்படங்கள்
முக்காற் பங்கு ஜனத்தொகை திரைப்படக்கொட்டகையில் இருக்கிறது ( ஒருமை எழுவாய்)


8

”மோடி தன் தாய் நாட்டின் மதிப்பை அமெரிக்காவில் உயர்த்தினார்”

மோடி தம் தாய் நாட்டின் மதிப்பை அமெரிக்காவில் உயர்த்தினார்.

மரியாதைக்காக  அல்லது உயர்வுக்காக ( மரியாதைப் பன்மை) “ஆர்” விகுதி சேர்க்கும்போது வினைமுற்றும் பலர்பால் வினைமுற்றாகவே இருக்கவேண்டும்.

பி.கு : மோடி மேல் மரியாதை இல்லதவர்கள் காந்தி, அம்பேத்கார், மன்மோகன் சிங் என்று பெயர் மாற்றிக்கொள்ளவும்.

9

”ஐம்பத்தி மூன்று,  சக்களத்தி, சின்னாபின்னம், சுவற்றில், நிச்சயதார்த்தம், ரொம்ப, வாய்ப்பாடு, வியாதியஸ்தர், வெண்ணை,வெய்யில், ஒருவள், அருகாமை, உத்திரவு, கண்றாவி, பண்டகசாலை, மடப்பள்ளி, மாதாமாதம்” – தவறு


ஐம்பத்து மூன்று, சகக்களத்தி, சின்னபின்னம், சுவரில், நிச்சியதார்த்தம்,  நிரம்ப, வாய்பாடு, வியாதிஸ்தர், வெண்ணெய்,  வெயில்,  ஒருத்தி, அருகில், உத்தரவு, கண்ணராவி, பண்டசாலை, மடைப்பள்ளி, மாதம்மாதம்”- சரி


ஒரு இலக்கண ஜோக்

ஒரு அறிஞருக்கு இலக்கண சுத்தமாகப் பேசுபவர்களை மிகவும் பிடிக்கும். மாற்றிப் பேசுபவர்களைக் கண்டால் கோபப்படுவார்.
ஒருநாள் இரவில், அவர் ஒரு கிண்ற்றில் விழுந்து விட்டார். உள்ளே தண்ணீர் இல்லை. அடிப்பாகத்தில் மணல் கிடந்ததால், காயமில்லாமல் தப்பி விட்டார். ஆனால், வெளியே வரும் உபாயம் தெரியவில்லை.
“யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்” என்று ஓலக்குரல் இட்டார். இதை அவ்வழியாகச் சென்ற ஒருவன் இதைக் கேட்டான்.
கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தான். அவனால் தனியாக மீட்க முடியாதென புரிந்து விட்டது. “ஐயா! சற்றுப் பொறுங்கள். ஊருக்குள் சென்று உதவிக்கு ஆட்களைக் கூட்டி வருகிறேன். இருளாக வேறு இருக்கிறது. விளக்கிற்கும் ஏற்பாடு செய்கிறேன்” என்றான்.
நம் அறிஞர்  “தம்பி! நீ பேசியதில் இலக்கணப் பிழை இருக்கிறது. ‘ஆட்களை கூட்டி வருகிறேன்’ என்பது நிகழ்காலம் ‘கூட்டி வருவேன்’ என்றால் தான் எதிர்காலம். எதிர்காலத்தில் நடக்கப் போவதை நிகழ்காலமாக்கி விட்டாயே,” என்றார்.
“சரி சாமி! முதலில், எப்படி பேச வேண்டும் என்று இலக்கண வல்லுநர்களிடம் போய் கற்றுக் கொண்டு, அதன் பிறகு ஆட்களைக் கூட்டி வருகிறேன்,” என சொல்லி விட்டு போயே போய்விட்டான்....................

இதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம். வழக்கச்சொல்லில் இலக்கணப்பிழை நேரிடுவது தாராளமாகிவிட்டது.....

 https://www.nhm.in/shop/elavasam.html

 http://www.tamilpaper.net/?cat=24

 http://kavimagudeswaran.blogspot.in/2013_10_01_archive.html

 http://www.tamilpaper.net/?tag=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

அ.கி. பரந்தாமனாரின்
”நல்ல தமிழ் எழுதவேண்டுமா “



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக