ஞாயிறு, 27 அக்டோபர், 2013

கட்டாயத் தேவை கண்டுபிடிப்பின் தாய்

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-சத்தி 
வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.வானவியல்  உருவானது எப்படி?என்று இந்த பதிவில் காண்போம்.
                          ‘அல்ஜிபர்வெஹல் முஹபலா’
                           அப்படியென்றால் என்ன?
                   அதுதான் ‘அல்ஜீப்ரா’ என்ற கணிதத்தின் முன் பெயர்.  இப்போது ஆங்கிலத்தில் அல்ஜீப்ரா என்று அழைக்கப்படும் கணிதம் ஒரு அரேபியக் கணித வல்லுநரால் கண்டுபிடிக்கப்பட்டதுதான். அது ஆங்கில மொழிவழக்குக்கேற்பத் சிதைவுபடுத்தப்பட்டுள்ளது. அக்காலத்தில் அரேபியர்கள் கணித அறிவியலில் முன்னணியிலிருந்தனர். அதனோடு அதன் கிளை நூலான வானவியலிலும் சிறப்புற்று விளங்கினர்.
‘ஆல்டிபரான்’ (Aldeberan) , ‘அல்டெயர்’ (Altair) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பெயர்கள் அராபியப் பெயர்கள்தாம். இந்த விண்மீன்கள் முறையே தமிழில் ‘ரோஹிணி’, ‘திருவோணம்’ என அழைக்கப்படுகின்றன.
அது எப்படி அராபியர்கள் வானவியலில் சிறந்து விளங்கினர்? 
                         பாலை வனத்தில் பயணம் செய்வது கடலில் பயணம் செய்வது போலத்தான். அராபியர்களுக்குக் கடலில் மட்டுமல்லாது பாலைவனங்களிலும் பயணம் செய்வது கட்டாயம். 
                இரவில் திசை காண்பது எப்படி? வானவியல்தான் துணை நின்றது. மாலுமிகள் சென்ற நூற்றாண்டின் பெரும் பகுதியில் Sextant என்ற வானவியல் கருவியைப் பயன்படுத்திக் கப்பலின் இருப்பிடத்தை அறிந்தனர். 
          இப்போது Geo Positioning System (GPS)என்னும் புவியிடங்காட்டி  மூலம் தங்கள் இருப்பிடத்தைத் துல்லியமாகக் கணித்துப் பாதை மேற்கொள்கின்றனர்.
        நம் தமிழக மீனவர்களும் அனேக விண்மீன்களையும் விண்மீன் கூட்டங்களையும்(constellations) காண்பிப்பார்கள். ஆனால் அவற்றின் வடமொழிப் பெயர்களை அறியமாட்டார். கார்த்திகைக் கூட்டம் என்ற (Pleiades cluster) விண்மீன் கூட்டங்களை ஆறாங்கூட்டம் என்றும், Canopus என்ற விண்மீனை அகஸ்தியர் என்றும் பெயர் சொல்வர்..
ஒவ்வொரு மாதத்தையும் தேதியையும் அப்போது கீழ் வானில் உதிக்கும் விண்மீனையும் கணக்கில்கொண்டு அப்போதைய நேரம் என்ன என்று துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்வர். 
                    அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் மீனவர்களிடம் கைக்கடிகாரம் கூடக் கிடையாது. சாதாரணக் கடிகாரங்களைக் கட்டுமர மீனவர் பயன் படுத்த இயலாது. விலையேற்றமான நீர்புகாக் கடிகாரங்கள் எளிதில் கிடைப்பதில்லை. திசை காட்டும் கருவி அல்லது transistor பற்றியும் யாரும் அறியவில்லை. 
                  புயல் சின்னங்களையும் கடல் சீற்றத்தையும் கொண்டு கால நிலையை அறியும் ஆற்றல் பெற்றிருந்தனர்.  இத்தகைய தனித் திறன்கள் இன்றைய சூழ்நிலையில் பயனில் உள்ளனவா அல்லது தெரிந்துகொண்டுள்ளனரா? என்பது தெரியவில்லை.
     இன்னும் நமது ஊரிலேயே திசைகளைத்தானே குறிச்சொல்லாக அடையாளம் காட்டுகின்றனர்.உதாரணமாக தெற்கே போய் வடக்கே ஈசானி மூலையில் செல் என்பது. பழைய சோற்று நேரம் என்பது.ஒரு பனைப்பொழுது நேரம் என்பது.கோழி கூவும் நேரம் என்பது.நடுசாமம் என்பது.அந்தி சாயும் நேரம் என்பது.ஏழைகள் பொழுது என்பது.பணக்காரர்கள் பொழுது என்பது இன்றும் நமது கிராமப்பகுதிகளில் வழக்கச்சொல்லாக புழக்கத்தில் உள்ளது.அல்லவா?அதுபோலவேதாங்க....
             இப்ப தெரிந்துகொண்டீர்களா?! தேவையே தேடலின் ஆதாரம்.,
        ‘கட்டாயத் தேவை கண்டுபிடிப்பின் தாய்’ (Necessity is the mother of invention) .                              என்பதை............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக