சனி, 26 அக்டோபர், 2013

ஐசான் செய்திகள்-நாளிதழ்களில்

மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.ஐசான் வால் நட்சத்திரம் பற்றிய செய்திகள் நாளிதழ்களில் காண்க......

(1)மாலைமலர் செய்தி இது.
திருப்பூர், அக்.24-

வால் நட்சத்திரத்திலேயே மிகப்பெரிய வால்நட்சத்திரம் ஐசான் வால் நட்சத்திரமாகும். வருகிற நவம்பர் மாதம் 28–ந் தேதி மாதம் பூமியில் தெரியப்போகிறது.

ஐசான் வால் நட்சத்திரத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21–ந் தேதி வான வியலாளர்கள் வைட்டலி நெவ்ஸ்கி, அர்த்யோன் நோவிசொனோக் ஆகியோர் கண்டுபிடித்தனர். இதனைக் காண்பதற்குப் பயன்படுத்திய கருவியின் பெயரைக் கொண்டே இதற்கு ஐசான் என்று பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐசான் வால் நட்சத்திரம் இதுவரை வந்த வால் நட்சத்திரங்களில் மிகப் பெரியதும், மிகவும் பிரகாசமானதும் ஆகும். இது, சூரியனுக்கு முன்னே பிறந்ததாம். இதன் வயது சூரியனைவிட அதிகம் என்கின்றனர். அதாவது சுமார் 470 கோடி ஆண்டுகள்.
இதன் வாலின் நீளம் 3 லட்சம் கி.மீ. அகலம் 5 கி.மீ. நவம்பர் மாதம் 22–ந் தேதி சூரியனுக்கு மிக அருகில் 1.16 மில்லியன் கி.மீ. தொலைவில் வந்து சூரியனின் ஒளியுடன் போட்டியிடப் போகிறது.
அதன்பிறகு நவம்பர் 28–ந் தேதி பூமிக்கு மிக அருகில் வரப்போகிறதாம். ஐசான் வால் நட்சத்திரம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சூரிய குடும்பத்திற்குள் புதிதாக நுழைய உள்ளது. இந்த நட்சத்திரம் இப்போது பூமியில் தெரிய உள்ளது. இது ஒரு அரிய வானவியல் நிகழ்வாகும்.
டெலஸ்கோப் மூலம் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்துப் பகுதியினரும் கண்களால் பார்க்கக்கூடிய வால் நட்சத்திரம் இதுதான். இதே போன்ற வால் நட்சத்திரங்கள் தெரிந்தால் பாதகம் ஏற்படும் என்ற மூட நம்பிக்கை காலம் காலமாக மக்களிடையே இருக்கிறது.
இந்த மூட நம்பிக்கையை போக்கும் வகையில் மத்திய அரசின் விஞ்ஞான பிரசார் என்ற அமைப்பும், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பும் ஐசான் நிகழ்வை இந்தியா முழுவதும் மக்களிடையே கொண்டு சென்று அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
அதன்படி ஐசான் என்ற வால் நட்சத்திரத்தை மக்கள் அனைவரும் காணவேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து ”ஐசான் வால் நட்சத்திரம் காண்போம்” என்ற பிரசாரத்தை நாடு முழுவதும் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக மாநில பயிற்சி முகாமை தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் தேஜா மகளிர் தொழில் நுட்பக் கல்லூரியும் இணைந்து திருப்பூர் ஜெய் வாபாய் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் நடத்தியது.
அறிவியல் பிரசார ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். ஊட்டி ரேடியோ வானவியல் மையத் தலைவர் பேராசிரியர் மனோகரன் சிறப்புரையாற்றினார். பெங்களூரிலுள்ள இந்திய வான் இயற்பியல் நிறுவனத்தின் விஞ்ஞானி முத்துமாரியப்பன் சூரிய குடும்பம் குறித்தும், கல்பாக்கம் அணு ஆற்றல் துறையைச் சார்ந்த விஞ்ஞானி பார்த்த சாரதி வால்நட்சத்திர அறிவியலின் வரலாறு குறித்தும் முன்னாள் அறிவியல் இயக்க செயலாளர் ராமலிங்கம் ஐசான் வால் நட்சத்திரம் குறித்தும் பேராசிரியர் மோகனா வானவியலும் ஜோதிடமும் குறித்தும் பேசினார்கள்.
ஐசான் வால் நட்சத்திரம் குறித்து கல்பாக்கம் அணு ஆற்றல் துறையை சார்ந்த விஞ்ஞானி பார்த்தசாரதி பேசும்போது கூறியதாவது:–
ஐசான் வால் நட்சத்திரம் மற்ற வால் நட்சத்திரங்களைப் போலவே ஒரு அழுக்கான பனிப்பந்தாகும். இது சூரிய குடும்பத்தின் வெளிப்பகுதியில் இருக்கும் ஊரட் மேகம் என்ற பகுதியிலிருந்து புதிதாக வருகிறது. ஆரம்பத்தில் இதற்கு வால் கிடையாது.
வால் நட்சத்திரம் சூரியனில் இருந்து கிட்டத்தட்ட வியாழன் கோளின் தூரத்தினை அடையும்போது சூரிய கதிர் வீச்சினால் இந்த பனிப்பந்து ஆவியாக ஆரம்பித்து வாயுக்களையும் தூசுகளையும் வெளியிட ஆரம்பிக்கிறது.
இவை சூரியனின் கதிர் வீச்சு அழுத்ததினால் சூரியனுக்கு எதிர்புறமாகத் தள்ளப்பட்டு வால் போன்ற தோற்றத்தை பெறுகின்றன. சூரியனுக்கு அருகே செல்லச் செல்ல சூரியனின் வெப்பம், கதிர்வீச்சு அழுத்தம் போன்றவை அதிகமாவதால் வாலின் நீளமும் பிரகாசமும் அதிகமாகும்.
ஐசான் வால் நட்சத்தி ரத்தை அக்டோபரில் இருந்து தொலை நோக்கி மூலம் காணலாம். நவம்பர் 2–வது வாரத்திலிருந்து அதிகாலை கிழக்கு அடிவான் அருகே இதனை நாம் வெறும் கண்களினால் காணலாம். நகர் புறங்களில் ஒளி மாசு அதிகம் இருப்பதாலும், கட்டிடங்கள் அடிவானை மறைப்பதாலும் பார்க்க கொஞ்சம் சிரமமாக இருக்கும்.
ஆனால் ஐசான் வால் நட்சத்திரத்தை கிராமப்புறப் பகுதிகளில் நன்கு காணலாம். அதன்பிறகு நவம்பர் 4–வது வாரத்தில் சூரியனுக்கு அருகே ஐசான் சென்றுவிடும். இதனால் இதை முழுவதுமாக காண முடியாவிட்டாலும் அதன் வாலின் ஒரு பகுதியைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐசானை உலகில் அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதற்கு மற்றொரு முக்கிய காரணமும் உள்ளது. இது சூரியனை உரசிச் செல்லும் வால் நட்சத்திரமாகும். நவம்பர் 28–ந் தேதி ஐசான் சூரியனுக்கு மிக அருகில் சூரியனை உரசிச் செல்கிறது. அப்போது அதன் வெப்ப நிலை சுமார் 2000 டிகிரி செல்சியஸை (இரும்பின் உருகு நிலையை விட அதிகம்) அடையக்கூடும் .
சூரியனிலிருந்து அதன் தூரம் வெறும் 1.2 மில்லியன் கி.மீ. ஆதலால் சூரியனின் ஈர்ப்பு விசை ஐசானை சிதறடிக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் பெரும்பாலான விஞ்ஞானிகள் ஐசானின் அளவு சற்று பெரியதாக இருப்பதால் இதற்கான வாய்ப்பு குறைவு என்றே கருதுகின்றனர்.
அவ்வாறு தப்பிப் பிழைத்தால் டிசம்பர் மாதம் முதல் வார பிற்பகுதியில் ஒரு கண்ணைக் கவரும் வால் நட்சத்திரமாக ஐசான் வெளிப்படும். அது தொடர்ந்து ஜனவரி மாதம் 2–வது வாரம் வரை வெறும் கண்களுக்குத் தென்படும்.
தற்போது மணிக்கு 1 லட்சம் கி.மீ. வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த வால் நட்சத்திரம் சூரியனை நெருங்க நெருங்க அதன் வேகம் அதிகரித்துக்கொண்டே இருக்கும். இது நவம்பர் மாதம் 28–ந் தேதி மணிக்கு 13 லட்சம் கி.மீ. வேகத்தில் சூரியனைச் சுற்றித் திரும்புகிறது.
இதன் அளவு அதிக பட்சமாக 6 கி.மீ.க்குள் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஐசானின் பாதை பூமியின் பாதைக்கு வெகு தொலைவில் உள்ளது. எனவே, இந்த வால் நட்சத்திரம் பூமியில் மோதுவதற்கு அறவே வாய்ப்பு இல்லை.
வால் நட்சத்திரங்கள் எப்போது தோன்றும்? அவற்றிற்கு என்ன பாதைகள் உண்டு? என்பதையெல்லாம் அக்காலத்தில் மக்கள் அறிந்திருக்க முடியாது. எனவே அவை திடீரென வானில் தோற்றம் தருவதைக் கண்டு அவர்கள் அச்சம்கொண்டு அவற்றை தீய சகுனமாகக் கருதினர்.
தற்போது ஆண்டுதோறும் பல வால் நட்சத்திரங்கள் கண்டு பிடிக்கப்படுகின்றன. கடந்த 400 ஆண்டுகளில் சுமார் 5000 வால் நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2000 சிறு வால் நட்சத்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
எனவே இவற்றைப் பற்றி அச்சப்பட தேவையில்லை.கண்களுக்கு விருந்தளிக்க உள்ள ஐசான் வால் நட்சத்திரத்தை அச்சமின்றி அனைவரும் வரவேற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.


(2)தி இந்து செய்தி
  
ஐசான் வால்நட்சத்திரத்தைக் காண்பதற்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 18ம் தேதி வரை வானில் உலா வர இருக்கிறது ஐசான் வால்நட்சத்திரம். இந்த வால்நட்சத்திரத்தைக் கண்டு களிக்க, பள்ளி மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் வால்நட்சத்திரங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு பயிற்சிகளை முன்னெடுத்து வருகிறது தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
ஐசான் வால்நட்சத்திரம் பற்றி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த உதயன் 'தி இந்து' நிருபரிடம் கூறியதாவது:
"செப்டம்பர் 2012ல் சர்வதேச ஒளி ஊடகக் கூட்டமைப்பு (ஐசான்) தான் இந்த வால்நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தது. எனவே அதற்கு ஐசான் என்று பெயரிடப்பட்டது.
சூரிய மண்டலத்துக்கு அடுத்துள்ள 'ஊர்ட்' எனும் மேகப் பகுதியில் இருந்து வரும் ஒரு புதிய வால்நட்சத்திரம் இது. மேலும், பவுர்ணமி நிலவின் பிரகாசத்தை விட மிக அதிக பிரகாசமாக இந்த வால்நட்சத்திரம் இருக்கும் என்று நம்பப்படுவதால் இதற்கு அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ளது.
கடந்த 200 ஆண்டுகளாக நாம் பார்த்த வால்நட்சத்திரங்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் சூரியனையே சுற்றி வருபவை ஆகும். ஆனால் முதன்முறையாக சூரியனை நோக்கி வருகிறது இந்த ஐசான் வால்நட்சத்திரம். மேலும் 'ஊர்ட்' மேகப் பகுதியில் இருந்து வரும் இந்த வால்நட்சத்திரம் சூரிய குடும்பம் தோன்றியபோது உருவானது.
அதனால் அது சூரிய குடும்பம் தோன்றிய காலத்தில் உள்ள தகவல்களைப் பத்திரமாக வைத்திருக்கும். அதன் மூலம் உலகம் தோன்றியதைப் பற்றி மேலும் புதிய ஆய்வுகளை முன்னெடுக்க உதவும்.
இந்த வால்நட்சத்திரம் பூமியில் மோத வாய்ப்பு இல்லை. வரும் நவம்பர் 1ம் தேதி முதல் 18ம் தேதி வரை இந்த வால்நட்சத்திரம் வானில் புலப்படும்.
அப்போது தொலைநோக்கி, பைனாகுலர் போன்றவற்றின் மூலம் இதை நாம் காண முடியும். வெறும் கண்களாலும் இதை நாம் பார்க்கலாம்.
இந்த வால்நட்சத்திரம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதைக் கண்டு களிக்க உதவும் விதமாகவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழகம் முழுக்க பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.
சென்னையில், நவம்பர் முதல் வாரத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் கடற்கரையில் அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை இந்த வால்நட்சத்திரத்தைப் பொதுமக்கள் கண்டு களிக்க அறிவியல் இயக்கத்தின் தொண்டர்கள் உதவுவார்கள்". இவ்வாறு உதயன் கூறினார்.
Keywords: தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஐசான் வால் நட்சத்திரம்.
 
(3) தின மணி செய்தி
 

நவம்பரில் ஐசான் வால்நட்சத்திரத்தை கண்டுகளிக்கலாம்

First Published : 24 September 2013 03:00 AM IST
வரும் நவம்பர் மாதத்தில் ஐசான் வால்நட்சத்திரத்தை பொதுமக்கள் வெறும் கண்ணால் கண்டுகளிக்கலாம் என திருப்பூரில் நடைபெற்ற அறிவியல் பயிற்சி பட்டறையில் தெரிவிக்கப்பட்டது.
  தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,கோவை தேஜா சக்தி மகளிர் தொழில் நுட்பக்கல்லூரி சார்பில் ஐசான் வால்நட்சத்திரம் குறித்த மாநில அளவிலான பயிற்சிப்பட்டறை திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை துவங்கியது.
அறிவியல் கல்வி, பிரசார இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். தேஜா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் என்.ஜே.ஆர்.முனிராஜ், அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் ஆ. ஈசுவரன்,செயலாளர் ஸ்ரீரங்கன், ஜெய்வாபாய் பள்ளி தலைமையாசிரியர் அ.போஜன் முன்னிலை வகித்தனர். அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் என்.மணி துவக்கிவைத்தார்.
  ஐசான் வால்நட்சத்திரம் குறித்து ஊட்டி ரேடியோ வானியல் ஆய்வு மையத்தின் தலைவரான பேராசிரியர் பி.கே.மனோகரன் பேசியது:
 வால்நட்சத்திரம் என்பது சூரியனுக்கு அருகில் சுற்றிவரும் ஒரு பனிக்கட்டியால் ஆன ஒரு பொருள். வால்நட்சத்திரம் பற்றிய புரிதல் இல்லாததால் பழங்காலத்தில் அதனை அபசகுணமாக அச்சமடைந்தனர். வால்நட்சத்திரம் வரப்போகுது என்றால் உலகத் தலைவர்களில் யாராவது மறையப்போகிறார்கள், நாட்டில் பஞ்சம் வரப்போகிறது என மக்கள் நம்பினர்.
 நவம்பர் மாதம் வரப்போகின்ற ஐசான் வால்நட்சத்திரம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ஆம் நாள் வானவியலாளர் வைட்டலி நெவ்ஸ்கி, அர்த்யோன் நோ விசொனோக் ஆகியோர் கண்டுபிடித்தனர். இதனைக் காண்பதற்குப் பயன்படுத்திய கருவியின் பெயரைக்கொண்டே இதற்கு ஐசான்(ஐநஞச: ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப் நஸ்ரீண்ங்ய்ற்ண்ச்ண்ஸ்ரீ ஞல்ற்ண்ஸ்ரீஹப் சங்ற்ஜ்ர்ழ்ந்) என்று பெயரிட்டுள்ளனர் என்றார்.
  இந்திய வான் இயற்பியல் நிறுவனத்தின்(பெங்களூரு) விஞ்ஞானி சி.முத்துமாரியப்பன் சூரியக் குடும்பத்தின் தோற்றம் குறித்து ஒளி ஒலி காட்சி மூலம் விளக்கினார்.
ஐசான் நிகழ்வையொட்டி ஜெய்வாபாய் பள்ளியில் கலிலியோ வானவியல் மன்றத்தை  அவர் துவக்கி வைத்தார்.
 இது குறித்து கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் பார்த்தசாரதி கூறியது:
நவம்பர் 2-ஆவது வாரத்தில் ஐசான் வால்நட்சத்திரம் வெறும் கண்ணில் நன்றாக தெரிய ஆரம்பிக்கும். அதிகாலை சூரியன் உதயம் ஆவதற்கு முன் இதைப் பார்க்கலாம். வெறும் கண்ணால் பார்ப்பதால் எந்த ஆபத்தும் ஏற்படாது.
 சமீப காலமாக இதுபோன்ற நிகழ்வை யாரும் பார்த்திருக்க முடியாது. பொதுமக்கள் இந்த அரிய நிகழ்வை பார்க்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் மத்தியில் அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
  செவ்வாய்க்கிழமையும் இது தொடர்பான பயிற்சிப்பட்டறை நடைபெற உள்ளது.
(4)தினமணி செய்தி இரண்டாவது செய்தியிட்டது.

ஐசான் வால்நட்சத்திரம் குறித்த பயிற்சிப்பட்டறை

First Published : 23 September 2013 02:22 AM IST
ஐசான் என்ற வால்நட்சத்திரம் குறித்த பயிற்சிப்பட்டறை திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள் செவ்வாய்க்கிழமை இரு தினங்கள் நடைபெற உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் ஆ.ஈஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐசான் என்ற வால் நட்சத்திரம் சூரிய குடும்பத்திற்குள் புதியதாக நுழைய இருக்கிறது. இதனுடைய வயது சுமார் 460 கோடி எனவும், சூரியன் தோன்றியபோது இதுவும் தோன்றியிருக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நட்சத்திரம் மிகுந்த பிரகாசமானது. இப்படி மிகவும் பிரகாசமான வால் நட்சத்திரம் 200 ஆண்டுகளுக்குப்பின் இப்போதுதான் பூமியில் தெரிய இருக்கிறது.
இது ஒரு அறிய வானியல் நிகழ்வாகும். மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு இணைந்து ஐசான் நிகழ்வை மக்கள் மத்தியில் கொண்டுசென்று அறிவியல் விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
தமிழகத்தில் ஐசான் வால்நட்சத்திரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பள்ளியில் செப்டம்பர் 23, 24-ஆம் தேதிகளில் பயிற்சிப்பட்டறை நடைபெறுகிறது. இதில், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா 3 ஆசிரியர்கள் வீதம் 90 பேர், ஜெய்வாபாய் பள்ளி மாணவிகள் 25 பேர், கோவை தேஜா சக்தி கல்லூரி மாணவிகள் 25 பேர் என 150 பேர் பங்கேற்கின்றனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஊட்டியில் உள்ள ரேடியோ வானவியல் மையத்தின் தலைவர் பேராசிரியர் பி.கே.தினகரன் துவக்கி வைக்கிறார். இதையொட்டி, ஜெய்வாபாய் பள்ளியில் கலிலியோ வானவியல் மன்றத்தை இந்திய வான் இயற்பியல் நிறுவன விஞ்ஞானி(பெங்களூரு) முத்துமாரியப்பன் தொடங்கி வைத்து, சூரிய குடும்பத்தின் தோற்றம் பற்றி சிறப்புரையாற்றுகிறார்.
வால்நட்சத்திரத்தின் வரலாறு குறித்து கல்பாக்கம் அணுமின்  நிலையம் எஸ்.பார்த்தசாரதி, வானவியலும் சோதிடமும் குறித்து பேராசிரியர் சோ.மோகனா, ஐசான் வால்நட்சத்திரம் குறித்து சென்னை சி.ராமலிங்கம், மதுரை எல்.நாராயணசாமி சூரிய குடும்பம் குறித்து ஒளி, ஒலி காட்சி மூலமாக விளக்க உள்ளனர்.
திங்கள்கிழமை இரவு 7 முதல் 10 மணி வரையிலும் 24-ஆம் தேதி அதிகாலை 4.30 முதல் 6 மணி வரையிலும் டெலஸ் கோப் மூலமாக வான் நோக்கல், வால் நட்சத்திரம்(ஐசான்) குறித்து விளக்கப்பட உள்ளது. மாவட்ட அறிவியல் இயக்க நிர்வாகிகள் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக