வியாழன், 10 ஜூலை, 2014

பேஸ்புக் ஒரு பார்வை

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.இந்தப்பதிவு திருமிகு.கிரி அவர்களது பிளாக் பதிவுங்க.நல்ல பதிவு ஆதலால் எனது பக்கத்திலும் பகிர்ந்துள்ளேன்.கிரி அவர்களுக்கு நன்றிங்க.
         பேஸ்புக் தற்போது மிக வேகமாக இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது. வாரம் ஒரு குற்றம் இதன் மூலமாக செய்திகளில் குறைந்த பட்சம் படிக்க முடிகிறது. இதன் மூலம் பலவருடமாக தொடர்பில் இல்லாத நண்பர்களை பெற முடிகிறது. தூரத்தில் நண்பர்கள் இருந்தாலும் இதன் மூலம் இடைவெளியை குறைக்க முடிகிறது. இது போல நன்மை தீமைகள் கலந்தே இருக்கிறது.
இதை நான் எழுதக் காரணம், சமீபத்தில் ஒரு பெண் வெறுத்துப் போய் ஸ்டேட்டஸ் போட்டு இருந்தார். இவர் என் நண்பர் அல்ல, ஆனால் என்னுடைய நண்பருக்கு நண்பர். அந்தப் பெண்ணுடைய ஸ்டேட்டசில் என்னுடைய நண்பர் கமெண்ட் போட்டதால் என்னுடைய Timeline ல் தெரிந்தது. கொஞ்சம் சூடாக இருந்ததால், சரி! என்னவென்று பார்க்கலாம் என்று படித்தேன். அதன் சுருக்கம்.. “பெண்ணியவாதிகள் என்ற பெயரில் சிலர் இருக்கிறார்கள் ஆனால் மோசமாக நடக்கிறார்கள். கேவலமான கமெண்ட் போடுகிறார்கள், அதையும் சிலர் லைக் செய்கிறார்கள். தான் பெரிய ஆள் என்பதை நிரூபிக்க ஏதேதோ செய்கிறார்கள். சிலர் பெண்கள் பெயரில் வந்து ஏமாற்றுகிறார்கள். பெண் என்ற போர்வையில் செக்ஸ் பற்றி பேசுகிறார்கள். ஒரு சில பெண்கள் தாங்கள் தான் அழகு என்பது போல நடந்து கொள்கிறார்கள். இதனால் ஃபேஸ்புக் என்றாலே வெறுப்பாகி விட்டது” இது போல எழுதி இருந்தார், இப்படியே அல்ல, இந்தப் பொருள் வரும்படி.
எனக்கு இவர் கூறி இருந்ததில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இதைப் படித்துக்கொண்டிருப்பவர்களில் சிலர் கூட இது போல ஒரு மோசமான வேலையை செய்து கொண்டு இருக்கலாம். எங்கேயும் நல்லவர்களும் இருக்கிறார்கள், மோசமானவர்களும் இருக்கிறார்கள். இதை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் தான் நம் நிம்மதி அடங்கி இருக்கிறது.
ஃபேஸ்புக்கில் நண்பர்களிடையே அரசியல் இருக்கிறது உண்மை தான், ஆனால் அதெல்லாம் சமாளிக்கக் கூடிய ஒன்று தான். எல்லோருக்கும் லைக் போடுறாங்க, எனக்கு போடுலையே, நம்மை யாரும் கண்டு கொள்ளவில்லையே. நாம லைக் பண்ணுறோம் ஆனால் நம்ம எதுவும் போட்டால் லைக் பண்ண மாட்டேங்குறாங்களே என்று இது போல சின்னச் சின்ன மனத்தாங்கல்கள் மட்டுமே தவிர்க்க முடியாதது. மற்றபடி வேறு எந்தப் பெரிய பிரச்சனைகளையும் எளிதாக சமாளிக்கலாம்.
ஃபேஸ்புக் எப்படி அனைவரையும் நண்பர்களாக ஏற்றுக்கொள்ள வசதி தருகிறதோ, அதே அளவிற்கு நம்மை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் வசதி கொடுத்து இருக்கிறது. நம்ம ஆளுங்க கிட்ட இருக்கிற பெரிய பிரச்சனை… யார் Friend Request அனுப்பினாலும் கண்ணை மூடிட்டு Approve பண்ண வேண்டியது, அப்புறம் அவன் இப்படி சொல்றான், இவன் அப்படி சொல்றான்னு புலம்ப வேண்டியது. ஒழுங்கா பேசாமல் அநாகரிகமாக கமெண்ட் போடுறாங்களா? உனக்கு பிடிக்காத விசயங்களை பேசுகிறார்களா? Block பண்ணு. உன்னை யாரு தொடர்ந்து அனுமதிக்கச் சொன்னது?
அலப்பறை பண்ணிட்டு இருக்காங்களா, அசிங்கமா பேசுறானா, பெண் பெயரில் வந்து உங்களை போட்டு வாங்கறான் என்று தோன்றுகிறதோ அத்தனை பேரையும் Block பண்ணுங்க. அவ்வளோ தான் விஷயம். உங்களுக்கு யார் பிடிக்கிறதோ அவர்களோட நட்பைத் தொடருங்க. சப்பை விஷயம். இதுக்கு போய் எதுக்கு தேவையில்லாம டென்ஷன் ஆகிட்டு, ஃபேஸ்புக்கை திட்டிட்டு இருக்கணும். ஃபேஸ்புக் நல்லதையும் தருகிறது கெட்டதையும் தருகிறது. இதில் நீங்கள் எதை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பது உங்களுக்கான உரிமை. நான் கெட்டதை எடுத்துப்பேன் அப்புறம் கதறிக் கதறி அழுவேன் என்றால் அது யார் தவறு?
நம்மை நாலு பேரு புகழ வேண்டும், நாற்பது பேர் லைக் பண்ணனும், பாராட்ட வேண்டும் என்று ஆசைப்படும் அதே வேளையில் இது போல சங்கடங்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். உனக்கு ஜால்ரா தட்ட நாலு பேர் இருக்கும் போது, திட்ட எட்டு பேர் இருக்கமாட்டானா? நம்முடைய பிரச்சனைகளுக்கு முக்கியக் காரணம் நம்மைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது [சில விதிவிலக்குகள் உண்டு].
இதை இன்னும் ஒரு சிறு உதாரணத்துடன் கூறுகிறேன். இங்கே ஃபேஸ்புக் இப்பத்தான் வந்தது, இதற்கு முன்னே Blog வந்து விட்டது. இதில் எத்தனை அரசியல் என்பது இதைப் பயன்படுத்திக்கொண்டு இருக்கும் அனைவருக்கும் தெரியும். அந்தக் குழு, இந்தக் குழு என்று சட்டையை கிழித்துக்கொண்டு, அடித்துக்கொள்ளாத குறையாக சண்டைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அவன் அப்படி பேசுறான், இவன் இப்படி பேசுறான் என்று வாந்தி வரும் அளவிற்கு படு கேவலமாக நடந்து கொள்கிறார்கள். பின் புலம்பிக்கொண்டு இருக்க வேண்டியது. உன்னை யாரு அதில் தலையிடச் சொன்னது? எல்லோருக்கும் நம்மைத் தெரியனும், நாம போய் நின்னா எல்லோரும் வந்து வாங்க வாங்க என்று அழைக்கணும் என்று விளம்பர ஆசை. இப்படி இருக்கும் போது அதற்க்குண்டான எதிர்விளைவுகளையும் சந்தித்துத் தானே ஆகணும்.
இதனால் நிறையப் பேர் Blog படிப்பதையே நிறுத்தி விட்டார்கள் அந்த அளவிற்கு மோசமாக இருக்கிறது. புதிதாக எழுத வருபவர்களை அல்லது வர நினைப்பவர்களைக் கூட இவற்றைக் கூறி பயமுறுத்தி வர வேண்டாம் என்று கூறி விடுகிறார்கள். உண்மையில் அப்படியா இருக்கிறது? கிடையவே கிடையாது. நாம் என்ன நினைக்கிறோம் என்பதை, நாம் தாராளமாக எந்த வித பிரச்சனையும் இல்லாமல் எழுதலாம், இந்த Blog அரசியலில் கலந்து கொள்ளாமல் இருந்தால்.
நான் ஆறு வருடமாக எழுதுகிறேன். இதுவரை நான் எழுதாத தலைப்புகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். எந்தவித சங்கடமும் பிரச்சனையும் இல்லாமல் தொடர்ந்து ஆர்வமாக எழுதிக்கொண்டு இருக்கிறேன், எழுதுவேன். எனக்கு எந்தப் பிரச்சனையும் இதுவரை வந்ததில்லை, வந்தாலும் சமாளிக்கத் தெரியும். வந்த புதிதில் பிரச்சனைகள் இருந்தது, பிறகு அனுபவத்தில் அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்று தெரிந்ததால், ஒரு பிரச்சனையும் தற்போது இல்லை. இதே சூழ்நிலை ஃபேஸ்புக்கிற்கும் அப்படியே பொருந்தும். தங்கள் அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்பவர்களே, தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும், இல்லை என்றால் காலம் முழுக்க அதே தவறை செய்துகொண்டு புலம்பிக்கொண்டு இருக்க வேண்டியது தான்.
நம்மிடம் பழகுபவர்கள், நம் எதிரில் உள்ள கண்ணாடி மாதிரி தான். நாம் எப்படி இருக்கிறோமோ, அதைத்தான் அவர்களும் பிரதிபலிப்பார்கள். நாம் அனுமதித்தால் மட்டுமே எதுவும் தொடரும். எனவே மற்றவர்களைக் குறை கூறுவதை நிறுத்தி விட்டு நாம் ஒழுங்காக நடந்து கொண்டாலே போதுமானது. நமக்கு எந்தப் பிரச்சனையும் வராது. இல்லை, என்னால் இப்படி எல்லாம் ஒதுங்கிப் போக முடியாது என்றால், இதனுடன் வரும் பிரச்சனையையும் எதிர் கொள்ளத் தயாராகுங்கள். பாம்பும் சாகனும், கம்பும் உடையக்கூடாது என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. அரசியல்வாதிகள் எல்லாம் ஃபேஸ்புக், Blog பயன்படுத்துகிறவர்கள் கிட்ட பிச்சை எடுக்கணும், அரசியலில் அரசியல்வாதிகளையே தூக்கிச் சாப்பிட்டு விடுவார்கள் போல இருக்கு.
சுருக்கமாக நம் பிரச்சனைகளுக்கு நாம் தான் காரணம் மற்றவர்கள் அல்ல. முதலில் கண்டபடி அனைவரையும் நண்பர்களாக சேர்ப்பதை நிறுத்துங்கள். பிரச்சனை செய்பவர்களை தயங்காமல் Block செய்யுங்கள், (இது கூகுள் ப்ளஸ் பயன்படுத்துகிறவர்களுக்கும் பொருந்தும்) உங்கள் பிரச்சனைகள் / மன உளைச்சல்கள் தானாகவே சரியாகும்.
ஃபேஸ்புக்கில் எப்படி பாதுகாப்பாக இருப்பது, எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்பதைப் பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்.
ஃபேஸ்புக் பற்றிப் பேசியதும் சிவகார்த்திகேயன் மற்றும் பலர் நடித்து YouTube ல் செம ஹிட் அடித்த ஒரு குறும்படம் நினைவிற்கு வந்தது. இதுவரை பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாகப் பாருங்க.. நன்றாக இருக்கும். கூடிய விரைவில் ஐந்து லட்சம் பார்வைகளைப் YouTube ல் பெறப்போகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக