கால்நடை தீவனப் பிரச்சனைகள்
கால்நடை தீவனப் பிரச்சனைகள் கடுமையாகி வருகின்றன. கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வருவதுடன். அதிக பால் தேவைக்காக கால்நடை வளர்ப்பு அதிகரிப்பதால், மேய்ச்சல் அதிகரித்து புல்வெளி சூழலமைவுகள் சீர்குலைந்து வருகின்றன. பல இடங்களில் மேய்ச்சல் நிலம் வெகுவாக குறைந்துவிட்டதால் கால்நடை வளர்ப்பவர்கள் இரசாயன தீனிகளை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இது பால் தயாரிப்பு விலையை உயர்த்துவதுடன் பாலில் உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் இரசாயனப்பொருட்கள் உடலில் ஏறவும் வழிவகுக்கிறது. மேலும் நகரப் புறங்களிலும் கால்நடைகள் குறிப்பாக பசுக்கள் எவ்வித மேய்ச்சல் நிலங்களும் நல்ல தீவனங்களும் இன்றி நகர்ப்புற கழிவுகளை உண்டு வருகின்றன. இத்தகைய பசுக்களிலிருந்து கிடைக்கும் பாலின் தரத்தில் இருக்கும் மோசமான இரசாயனப்பொருட்களின் விளைவு நகர்ப்புற மக்களின் சுகாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும். கிராமங்களில் வறுமையும் நிலமின்மையும் கால்நடை வைத்திருப்போரைப் பீடித்திருக்கும் நோய்களாகும். கிராமங்களில் வாழும் 63 கோடி மக்களில் 40 சதவிகிதத்தினரின் வருவாய் வறுமைக்கோட்டு வரையறைக்கு கீழே உள்ளது. கிராமவாசிகளில் 70 சதவிகித மக்கள் கால்நடைகள் வைத்துள்ளதுடன் அவர்களது வருமானத்தில் 20% கால்நடைகள் மூலமாக கிட்டுகிறது. இவ்வாறு கால்நடை வைத்திருப்போரில் மூன்றில் இரண்டு பங்கு நிலமற்ற விவசாயிகள் மற்றும் சிறு விவசாயிகளே ஆவர். விவசாய பக்கப் பொருளான வைக்கோல் மாட்டுத்தீவனமாக பயன்பட்டுவந்தது. அது குறைந்து வருகிறது. அதிக மகசூல் அளிக்கும் தானியவகைகளில் தீவன வைக்கோல் அளவு குறைந்து வருகிறது. இதனால் கால்நடை வைத்திருக்கும் நிலமற்ற விவசாயிகள் மற்றும் சிறு விவசாயிகள் இரசாயனத் தீவன்ப் பொருட்களுக்கு தள்ளப்படுவார்கள். அதிக ஆற்றல் பயன்பாட்டால் உருவாக்கப்படும் இத்தகைய இரசாயன தீவனங்கள் அதிக ஆற்றல் மற்றும் பொருட்செலவுகளில் உருவாக்கப்படுபவை. எனவே இவற்றிற்கு அரசாங்கமே சலுகைவிலை நிர்ணயிக்க வேண்டிய நிலையும் அது ஒரு அரசியல் கருவியாகவும் கூட பயன்படும் நிலை வரலாம். இவையெல்லாம் தேசிய பொருளாதாரத்திற்கு நீண்ட நோக்கில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்துபவை என்பதைக் கூறத்தேவையில்லை. இன்று தனியாரிடத்தில் 71 இரசாயன தீவன ஆலைகளும் பால் கூட்டுறவு சங்கங்களிடம் 44 ஆலைகளுமாக, 27 இலட்சம் டன்கள் இராசாயன தீவனத்தை உற்பத்தி செய்கின்றன. எனினும் பாரதத்தின் முழுமையான கால்நடை தீவன பயன்பாட்டில் இது 3 சதவிகிதமேயாகும். எனவேதான் சர்வதேச FAO அமைப்பின் ஆய்வறிக்கை ஒன்று பாரதச் சூழலில் 'புதிய (ஆலை) மரபு சாரா தீவன முறைகளை கண்டுபிடித்து அவற்றின் தீவன செழுமையை மேம்படுத்துவது அவசியமான ஒன்று ' என வலியுறுத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக