செடியை மரமாக்கும் இயற்கைக் கூட்டணி... |
|
|
|
|
மாபெரும் வேளாண்மைச் சவால்' (The Great Agricultural Challenge)...
'பரத் மன்சாடா' என்ற எழுத்தாளர் 'பாஸ்கர் சாவே' என்ற புகழ் பெற்ற இயற்கை விவசாயியையும் அவரது 'கல்ப விருக்க்ஷு' என்னும் பல்லடுக்கு மரத் தோட்டத்தையும் மையமாக வைத்து எழுதிய புத்தகத்தின் பெயர்தான் இது.
அப்படி என்ன மகத்துவம்?
குஜராத் மாநிலத்தில் கடலுக்கு அருகில் 14 ஏக்கரில் அமைந்துள்ளது, கல்ப விருக்ஷா. தென்னை, சப்போட்டா, காய்கறிகள், நெல்... என அனைத்துமே இங்கு இயற்கை முறையில் விளைவிக்கப்படுகிறது.
எல்லாமே அபரிமிதமான விளைச்சல் தருவதுதான் இப்பண்ணையின் மகத்துவம். உதாரணத்துக்கு இங்குள்ள தென்னை மரங்கள் ஆண்டுக்கு 400 காய்கள் வரை கொடுக்கின்றன. ஒரு சப்போட்டா மரத்தில் ஆண்டுக்கு 300 கிலோ வரை பழங்கள் கிடைக்கின்றன. இந்தப் பண்ணைக்கு வந்திருந்த மசானாபு ஃபுகோக்கா, ''உலகம் முழுவதும் நான் பார்த்த பண்ணைகளில் இதுதான் உன்னதமானது. ஜப்பானில் உள்ள என்னுடைய பண்ணையைவிட சிறப்பாக இந்தப் பண்ணை அமைந்திருக்கிறது'' என்று பார்வையாளர் புத்தகத்தில் எழுதிச் சென்றிருக்கிறார்.
இத்தனைச் சிறப்பு வாய்ந்த பண்ணை உருவான கதைதான் 'மாபெரும் வேளாண்மைச் சவால்' புத்தகத்தின் கரு. இனி, அந்த நூலிலிருந்து சில பகுதிகளைப் பார்ப்போம்...
அனுபவம்தான் அறிவு
உழவர் குடும்பத்தில் பிறந்த பாஸ்கர் சாவே, மகாத்மா காந்தியின் தீவிர ரசிகர். பத்து ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி விட்டு விவசாயத்துக்குத் திரும்பிய இவரும் ஆரம்பக் காலங்களில் ரசாயன விவசாயத்தைத்தான் செய்து வந்தார். 'அனுபவத்தின் மூலம் பெறுவதே அறிவு' என்னும் மகாத்மா காந்தியின் பொன்மொழிக்கு ஏற்ப பண்ணையில் பாஸ்கர் சாவே செயல்படுத்திப் பார்த்த ஆராய்ச்சிகளின் விளைவுதான் கல்ப விருக்க்ஷு.
1960-ம் ஆண்டுக்கு முன்பே ரசாயன உரங்கள் மண்வளத்தை சிதைப்பதோடு, விவசாயத்துக்கான முட்டுவளிச்செலவைக் கூட்டுகின்றன என்று உணர்ந்தவர், பாஸ்கர் சாவே. 'ஒரு செடி மண்ணிலிருந்து எவ்வளவு சக்தியை எடுக்கிறது' என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டபோதுதான் இவருக்கு இன்னமும் இயற்கை மேல் ஆர்வம் அதிகமாகி இருக்கிறது.
மண்ணிலிருந்து எதையும் எடுப்பதில்லை பதினேழாம் நூற்றாண்டு காலத்தில் பெல்ஜியம் நாட்டில் வாழ்ந்த ஜான் ஸ்டநூரர் என்ற மருத்துவர், தொட்டியில் வில்லோ செடி (ஐரோப்பாவைச் சேர்ந்த தாவரம்) ஒன்றை வளர்த்து வந்தார். செடியை ஊன்றுவதற்கு முன் தொட்டியிலுள்ள மண்ணை எடை போட்டு வைத்துக்கொண்டார் அவர்.
அதற்கு ஊற்றிய மழைநீரை மட்டுமே கொண்டு அந்தச் செடி ஐந்தாண்டுகளில் சிறிய மரமாக வளர்ந்தது. அந்த சமயத்தில் அந்த மரத்தைப் பெயர்த்து எடை பார்த்த போது 70.5 கிலோ அளவு எடை இருந்தது. தொட்டியில் இருந்த மண்ணின் எடை ஆரம்பத்தில் இருந்ததை விட அறுபது கிராம் மட்டுமே குறைந்திருந்தது.
மண்ணுக்கிடையில் பல்லாயிரக் கணக்கான நுண்ணிய வேர்களும் அடங்கி இருந்தன. இந்தச் சோதனை மூலம் ' மொட்டாக இருந்த குறுஞ்செடி 70.5 கிலோ எடையுள்ள மரமாக வளருவதற்குத் தேவையானப் பொருட்கள் தொட்டியில் இருந்து வரவில்லை. தொட்டிக்கு வெளியே இருந்துதான் கிடைத்திருக்கின்றன' என்ற முடிவுக்கு வந்தார், ஜான் ஸ்டநூரர். இவரின் சோதனையை மையமாக வைத்துக் கொண்டுதான் 1972-ம் ஆண்டு தன்னுடைய சோதனையைத் துவக்கினார், பாஸ்கர் சாவே.
காற்றும் நீரும் கொடுக்கும் உரம்...தனது மாடு படுக்கும் இடத்தில் உள்ள மண்ணை எடுத்து எடை போட்டுவிட்டு பின் ஒரு தொட்டியில் நிரப்பி, ஒரு வெள்ளரி விதையைத் ஊன்றித் தண்ணீர் விட்டு வளர்த்து வந்தார். அதில் முளைத்து வந்த கொடி 90 நாட்களில் 2 பழங்களைக் கொடுத்தது. ஒரு பழம்
5 கிலோ, இன்னொரு பழம் 3 கிலோ எடையும் இருந்தன. மீதமிருந்த இலை, சருகு, கொடி என அனைத்தும் சேர்ந்து
600 கிராம் எடை இருந்தன. மொத்த எடை 8 கிலோ 600 கிராம். ஆனால் மண்ணின் எடை கூடவும் இல்லை, குறையவும் இல்லை. அதே எடைதான் இருந்தது.
அதற்கு முன் செடி வளர்ச்சியைப் பற்றி கூறப்பட்டிருந்த விஞ்ஞான ஆய்வு முடிவுகள், 'ஒரு செடி தன் எடையில் 94 சதவிகிதத்தைக் காற்றிலிருந்தும் நீரிலிருந்தும்தான் பெற்று வளர்கிறது (காற்றிலிருந்து 44 சதவிகிதம் ஆக்ஸிஜன் மற்றும் 44 சதவிகிதம் கார்பன்-டை-ஆக்ஸைடு, நீரிலிருந்து 6 சதவிகிதம் ஹைட்ரஜன்)' என்கின்றன. பாஸ்கர் சாவேயின் சோதனை முடிவும் இதை உறுதிப்படுத்தியது.
'சூரிய ஒளியை, ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்கள் விளைபொருளாக மாற்றுவதற்கு நீர், நிலம், காற்று ஆகிய மூன்று பூதங்களும் சேர்ந்துதான் உதவுகின்றன. விளைச்சலை உறுதிப்படுத்துவதில், செடி, கொடி, மரங்கள், நுண்ணுயிர்கள், பூச்சி, புழுக்கள், விலங்குகள் ஆகியவை ஒரு சமூகமாக இணைந்து செயல்படுகின்றன' என்று ஆய்வுக்கு முடிவுரை எழுதினார், சாவே.
இதைத் தெளிவாகப் புரிந்து கொண்டவர்கள் ரசாயனத்தின் பக்கம் தலை வைத்துக்கூடப் படுக்க மாட்டார்கள். இன்னொரு சந்தர்ப்பத்தில் கல்ப விருக்க்ஷு பற்றி விரிவாகப் பார்ப்போம்.
- போற்றுவோம். |
|
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக