புதன், 14 டிசம்பர், 2011

கால்நடை வளர்ப்பு!

கவலையில்லாத கால்நடை வளர்ப்பு!

செலவில்லாத தீவன சாகுபடி... ஆரோக்கியத்தோடு அதிக பால்...
கவலையில்லாத கால்நடை வளர்ப்பு!

தீவனச் செலவு குறையும்.
பராமரிப்பு தேவையில்லை.
எல்லா மண்ணிலும் வளரும்.
''பருவ நிலை மாறுதல்களால் விவசாயம் பொய்த்துப் போனாலும், தவறாமல் வருமானத்தைக் கொடுப்பது கால்நடை வளர்ப்புதான். என்றாலும் திட்டமிட்ட தீவன மேலாண்மையும், நோய் மேலாண்மையும் இருந்தால்தான் கால்நடை வளர்ப்பில் லாபத்தை சம்பாதிக்க முடியும்'' என்பது பெரும்பாலான கால்நடைத் துறை வல்லுநர்களின் கூற்று.
தீவனத் தோட்டத்தில் ஆதிநாராயணன்
''நூத்துக்கு நூறு சதவிகிதம் இது சரி. இதையெல்லாம் முழுக்க முழுக்க நான் தவறாம கடைபிடிக்கிறதாலதான்... என்னோட ஆடு, மாடுக எந்த நோயுமில்லாம ஆரோக்கியமா திடகாத்திரமா இருந்து, எனக்கு லாபத்தைக் கொடுத்துக்கிட்டிருக்கு" என்று உற்சாகமாகச் சொல்லும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஆதிநாராயணன், பசுந்தீவனத்துக்காக தனித்தோட்டத்தையே பராமரித்துக் கொண்டிருக்கிறார்.

பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள பாப்பா நாடு அருகிலுள்ள ஆலத்தன்குடிகாடு கிராமத்தில்தான் இருக்கிறது அந்த தீவனத் தோட்டம். மல்பெரி, வேலிமசால், சவுண்டல் (சுபாபுல்) என ஏகப்பட்ட தீவனப்பயிர்கள் தளதளவென நின்று கொண்டிருக்கின்றன அந்த இரண்டரை ஏக்கர் தோட்டத்தில்.
தீவன அறுப்பில் ஈடுபட்டிருந்த ஆதிநாராயணன், அதற்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு நம்மிடம் பேசினார். ''பத்து வருஷத்துக்கு முன்ன நூறு ஆடுகளை வெச்சுருந்தேன். அதுக்காக உருவாக்குனதுதான் இந்தத் தீவனத் தோட்டம். 20 சென்ட் நிலத்துல தண்ணீர்ப்புல் (எருமைப்புல்), 230 சென்ட்டுல மல்பெரி, அதுக்கிடையில ஊடுபயிரா முயல்மசால், வேலிமசால், கலப்பைக் கோணியம், சங்குப்புஷ்பம் எல்லாம் இருக்கு. வேலி ஓரத்துல 500 சவுண்டல் மரம் இருக்கு. இந்தத் தோட்டத்தை வெச்சு பத்து பதினைஞ்சு மாடுக, கொஞ்சம் ஆடுகளை வளக்க முடியும்.
ஆறு வருஷத்துக்கு முந்தி வேலையாள் பிரச்னை வந்ததால, அஞ்சாறு ஆட்டை மட்டும் வெச்சுகிட்டு மிச்சத்தை வித்துட்டேன். இப்ப என்கிட்ட ரெண்டு கறவை மாடுகளும் அஞ்சு ஆடுகளும்தான் இருக்கு. என் ஆடு, மாடுகளுக்குப் போக மிச்சமிருக்கிற தீவனத்தை பக்கத்து விவசாயிங்களுக்கு இலவசமா கொடுத்துகிட்டிருக்கேன். கொஞ்சத்தை அப்படியே வெட்டி, தோட்டத்துல மூடாக்கா போடுறேன். அப்படியிருந்தும் மல்பெரி எக்கச்சக்கமா இருக்குறதால பட்டுப்புழுவையும் வளர்த்து கிட்டிருக்கேன்'' என்று முன்னுரை கொடுத்தவர்... தொடர்ந்தார்.
குறைவான செலவு.. அதிக ஆரோக்கியம்!
''கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தை அதிகமா பயன்படுத்தச் சொல்றாங்க கால்நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மையத்து அதிகாரிங்க. அதேமாதிரி நம்ம அரசு கால்நடைப் பண்ணைகள்லயும் பசுந்தீவனத்தைதான் நிறையப் பயன்படுத்துறாங்க. இது மூலமா தீவனச் செலவு குறையுறது மட்டுமில்லாம... ஆடு, மாடுக ஆரோக்கியமா வளருதுங்க. அதனாலதான் நான் தீவனங்களை உருவாக்கிட்டு பண்ணைத் தொழில்ல இறங்குனேன். ஆனா, பல இடங்கள்ல புதுசா பண்ணை வெக்கிறவங்க தீவனத்தைப் பயிர் செய்யாம, பண்ணையை ஆரம்பிச்சுட்டு, கடைசியில தீவனத்துக்கு ரொம்ப சிரமப்படுறாங்க. அதிக விலை கொடுத்து புல்லையும், அடர்தீவனத்தையும் வாங்கிப் போட்டு நட்டமாயிட்டு... ஆடு, மாடு வளர்த்தாலே நட்டம்தான்னு சொல்லிடுவாங்க.
ஒரு தடவை நட்டா வருடக்கணக்கில் பலன்!
ஆனா, ரொம்பக் கம்மியான செலவுல, அதிகமான சத்து கிடைக்கிற பசுந்தீவனங்களை விவசாயிகளே உற்பத்தி பண்ணி லாபம் சம்பாதிக்க முடியும். கொஞ்சமா நிலம் இருந்தாகூட போதும். பெருசா மெனக்கெடத் தேவையுமில்ல. ஒரு தடவை விதைச்சு விட்டாலே, ரொம்ப வருஷத்துக்கு விளைஞ்சுகிட்டே இருக்குற தீவனப் பயிரெல்லாம் கூட இருக்கு'' என்றவர் தோட்டத்தைச் சுற்றிக் காட்டினார்.
''இதோ பாருங்க... இந்த தண்ணீர்புல், முயல்மசால், வேலிமசால், கலப்பை கோணியம், சங்குப்புஷ்பம், மல்பெரி, சூபாபுல், எல்லாமே போட்டு பத்து வருஷத்துக்கு மேலாயிடுச்சு. எந்தப் பராமரிப்பும் கிடையாது. அறுக்குறது மட்டும்தான் வேலை. ஆனா, எவ்ளோ செழிப்பா இருக்கு பாருங்க. முழுக்க இயற்கை விவசாயம்தான். ரசாயன உரத்தையோ, பூச்சிக் கொல்லியையோ தொடறதே கிடையாது. என்னோட ரெண்டு மாடு, அஞ்சி ஆடுகளோட கழிவுகள்தான் இதுக்கு உரம். இதுகளைச் சாப்பிட்டுதான் என்னோட ஆடு, மாடுக திடகாத்திரமா இருக்கு'' என்றவர், தொடர்ந்தார்.
பசுந்தீவனத்தால் கெட்டியான பால்!
''ஒரு கறவை மாட்டுக்கு தினம் பசுந்தீவனம்-20 கிலோ, வைக்கோல்-10 கிலோ, அசோலா-5 கிலோ, தவிடு-3 கிலோ, கடலைப்பிண்ணாக்கு-அரை கிலோ கொடுத்துக்கிட்டிருக்கேன். ஒரு மாடு ஒரு நாளைக்கு 10 லிட்டர் பால் கொடுக்குது. நல்லா கொழகொழனு தரமா இருக்கு பால். பசுந்தீவனம் நிறைய சாப்பிடுறதால, உரிய காலத்துல சினை பிடிச்சுடுது.
தினமும் ஒரு ஆட்டுக்கு 5 கிலோ பசுந்தீவனம் கொடுக்குறேன். பசுந்தீவனத்துக்கு ஆரம்பக் கட்ட செலவு மட்டுந்தான். வேற செலவேயில்ல. ஆனா, கடைகள்ல கிலோ 12 ரூபாய்னு கிடைக்கிற அடர் தீவனத்தை எவ்வளவு வாங்கிப் போட்டாலும், செலவுதான் எகிறுமே தவிர, பால் அளவு கூடாது'' என்றவர், இரண்டரை ஏக்கரில் பசுந்தீவன சாகுபடிப் பாடத்தைத் தொடங்கினார்.
20 சென்டில் எருமைப்புல்:
''பொதுவா, எல்லா வகையான மண்ணிலும் தீவனப் பயிர்கள் நன்கு வளரும். அதனால் மண்ணைப் பற்றிய கவலையில்லை. நிலம் முழுவதும் இரண்டு சால் உழவு ஒட்டி மண்ணை நன்கு பொல பொலப்பாக்க வேண்டும். பின் பத்து டன் தொழுவுரம் போட்டு, மறுபடியும் ஒரு சால் உழவு ஒட்ட வேண்டும். 20 சென்ட்டில் ஆயிரம் தண்ணீர்ப்புல் விதைக்கரணைகளை ஊன்ற வேண்டும். இது வேகமாக மண்டும் என்பதால் குறைந்த அளவு நிலத்தில் விதைத்தாலே போதுமானது. மண்ணை நன்றாக சேறாக்கி இரண்டடி இடைவெளி விட்டு, கரணையின் கணு மண்ணில் புதையுமாறு நடவு செய்ய வேண்டும். மூன்றாவது நாளில் தண்ணீர் பாய்ச்சி அதிலிருந்து வாரம் ஒரு தண்ணீர் கொடுக்க வேண்டும்.
20-ம் நாளில் களையெடுத்து, 200 லிட்டர் நீரில், 10 கிலோ சாணம், 10 லிட்டர் மாட்டுச்சிறுநீர், அரை கிலோ மாட்டுக் கொட்டகை சகதி (சிறுநீர், சாணம் கலந்த மண்) ஆகியவற்றைக் கலந்து, ஒரு நாள் முழுக்க வைத்திருந்து, பாசன நீரில் கலந்து விடவேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை இதைத் தொடர்ந்து செய்யலாம்.
90-ம் நாளிலிருந்து இந்தப் புல்லை அறுவடை செய்யலாம். தரையிலிருந்து நாலு இஞ்ச் உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும். அதைத்தொடர்ந்து 35 நாட்கள் இந்தப் புல் வளர்ந்தால்தான் முற்றி, அதிக சத்துக்கள் கிடைக்கும். ஆகவே, 35 நாட்களுக்கு ஒரு முறைதான் அறுவடை செய்ய வேண்டும். ஒரு அறுவடைக்கு 1,000 கிலோ புல் கிடைக்கும். தேவையைப் பொறுத்து பகுதி பகுதியாகக்கூட அறுவடை செய்யலாம். ஒரு வருடம் கழித்து பதினைந்து நாளுக்கொரு முறை தண்ணீர் விட்டால் போதும். வருடம் ஒருமுறை, 'இடை உழவு' செய்தால் புது வேர்கள் விட்டு, அதிக மகசூல் கிடைக்கும்.
230 சென்டில் மல்பெரி, ஊடுபயிர்களாக வேலி மசால், முயல்மசால், கலப்பைக் கோணியம்:
5 அடி இடைவெளியில், 3 அடி அகலம், அரை அடி ஆழம் கொண்ட வாய்க்கால்களை அமைக்க வேண்டும். வாய்க்கால் தோண்டும்போது கிடைக்கும் மண்ணை இரு வாய்க்கால்களுக்கு இடையில் போட்டு, மேட்டுப்பாத்தி அமைத்துக் கொள்ள வேண்டும். வாய்க்காலின் வெளிப்புற இரு ஓரங்களிலும், கரணைக்குக் கரணை மூன்றடி இடைவெளி இருக்குமாறு மல்பெரி விதைக் கரணைகளை நட வேண்டும். கரணையில் இரண்டு கணுக்கள் மண்ணுக்குள் புதையுமாறு இருக்க வேண்டியது அவசியம். 230 சென்ட் நிலத்துக்கு 13 ஆயிரம் விதைக்கரணைகள் தேவைப்படும்.
வாய்க்கால்களுக்கு இடையில் உள்ள மேட்டுப்பாத்திகளின் மையத்தில் விதைகளை விதைப்பதற்காக அரை அங்குல ஆழத்துக்கு நீளமாக கோடு இழுக்க வேண்டும். ஒரு பாத்தியில் வேலிமசால், இன்னொரு பாத்தியில் முயல்மசால், அடுத்த பாத்தியில் கலப்பைக் கோணியம் என மாற்றி மாற்றி விதைக்க வேண்டும். ஒவ்வொரு விதையும் தலா இரண்டு கிலோ தேவைப்படும். விதைப்பதற்கு முன் ஒவ்வொரு வகை விதைகளுடனும் ஆறு கிலோ மணலைக் கலந்து சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். அதன்பின் விதைத்து உயிர்த் தண்ணீர் விட வேண்டும். மூன்று நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன்பின் நிலத்தின் ஈரத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சினால் போதும்.
200 லிட்டர் நீரில், 10 கிலோ சாணம், 10 லிட்டர் மாட்டுச்சிறுநீர், அரை கிலோ மாட்டுக் கொட்டகை கோமிய சகதி (சிறுநீர், சாணம் கலந்த மண்) ஆகியவற்றைக் கலந்து ஒரு நாள் வைத்திருந்து, பாசன நீரில் கலந்துவிட வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை இதைச் செய்யலாம்.
90 நாட்களில் அனைத்துமே அறுவடைக்கு தயாராகி விடும். மல்பெரி, முயல்மசால், வேலிமசால் ஆகியவற்றை அறுவடை செய்யும் போது, தரையில் இருந்து ஒரு அடி உயரம் விட்டு அறுக்க வேண்டும். இவற்றை 40 நாள் இடைவெளி விட்டு மீண்டும் அறுக்கலாம். மல்பெரி மூலம் ஒரு ஏக்கரில் ஒரு ஆண்டில் தோராயமாக 30 முதல் 35 டன் தீவனம் கிடைக்கும். 100 அடி நீளம் கொண்ட பாத்தியில் 1 வருடத்தில் வேலி மசால் 400 கிலோவும், முயல்மசால் 300 கிலோவும், கலப்பைக் கோணியம் 400 கிலோவும் கிடைக்கும்.
உயிர் வேலியாக சவுண்டல்:
வேலி ஓரங்களில் 5 அடி இடைவெளியில் ஒரு சவுண்டல் விதையைப் போட்டு, 3-வது நாள் தண்ணீர் பாய்ச்சினால் போதும். அதன் பிறகு தண்ணீர், சாணம் எதுவுமே தேவையில்லை. தானாகவே வளர்ந்து விடும். மூன்று மாதத்திலிருந்து அறுவடை செய்யலாம். ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு 15 கிலோ தீவனம் கிடைக்கும்.''
பட்டுப்புழுவுக்கு மட்டுமல்ல, கால்நடைகளுக்கும்!
சாகுபடி பாடத்தை முடித்து, தொடர்ந்து பேசிய ஆதிநாராயணன், ''பட்டுப்புழு வளர்க்கறதுக்கு மட்டும்தான் மல்பெரினு பலரும் நினைக்கறாங்க. ஆனா, அது நல்ல கால்நடைத்தீவனம்கிறது நிறைய விவசாயிகளுக்கு தெரியறதில்ல. அதுல கொழுப்புச்சத்து நிறைய இருக்கு. இது மாதிரியான பசுந்தீவனங்களை கால்நடைகள் விரும்பிச் சாப்பிடும். சீக்கிரமா செரிமானமும் ஆயிடுது. மாடுகளுக்கு வெறும் அடர்தீவனத்தையும், புல்லையும் மட்டுமே கொடுத்தா கண்டிப்பா ஆரோக்கியமா இருக்காது. அதனாலதான் விவசாயிகள்ட்ட விழிப்பு உணர்வு கொடுக்குறதுக்காக பசுந்தீவன விதைகளையும், விதைக்கரணைகளையும் இலவசமா கொடுத்து, நேரடி இலவசப் பயிற்சியும் கொடுத்துகிட்டிருக்கேன்'' என்று தன்னுடைய சேவை மனதையும் திறந்து காட்டினார்!
ஒரு வருடம் வைத்திருக்கலாம்!
தண்ணீர்ப் புல் எனப்படும் எருமைப்புல், பெரும்பாலும் வாய்க்கால், குளங்களில்தான் மண்டிக்கிடக்கும். வருடக் கணக்கில் தண்ணீரில் மூழ்கிக் கிடந்தாலும் அழுகாது. வறட்சிக் காலங்களில் வளர்ச்சிக் குறைந்தாலும், பட்டுப் போகாது. கொஞ்சம் தண்ணீர் கிடைத்த உடனேயே வளரத் தொடங்கி விடும். நிழல், வெயில் எல்லாவற்றிலும் வரும். குளக்கரைகளில், சரிவான நிலங்களின் ஓரத்தில் வளர்த்து மண் அரிப்பை தடுக்கக்கூடியது. அறுவடை செய்த தண்ணீர்ப்புல்லைக் காய வைத்து, ஒரு வருடம் வரைகூட வைத்திருக்க முடியும். கலப்பைக் கோணியத்தையும் அதேபோல உலர வைத்து ஆறு மாதம் வரை பயன்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக